யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/12/15

B.ED துணைத்தேர்வுதேதி மாற்றம்

பி.எட்., கல்லுாரிகளில் துணைத்தேர்வுகள், டிச., 14ம் தேதிக்கு பதில், 21ம் தேதி துவங்கும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பி.எட்., கல்லுாரிகளில்,


டிசம்பரில் நடக்க வேண்டிய, பி.எட்., - எம்.எட்., படிப்புக்கான துணைத்தேர்வுகள், டிச., 14ம் தேதிக்கு பதில், டிச., 21ம் தேதி துவங்கும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

துணைத்தேர்வு சான்றிதழ் பெற அவகாசம்

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்க, அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு:


பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழை, டிச., 11ம் தேதிக்குள், தேர்வு மையங்களில் பெற்று கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது;மழையால், மாணவர்கள் சான்றிதழ்களை பெற முடியவில்லை.எனவே, தனித்தேர்வர்கள், டிச., 18ம் தேதி வரை, ஞாயிறு தவிர, பிற நாட்களில், தேர்வு மையங்களில் சான்றிதழ்களை பெறலாம். அதன்பின், தேர்வுத் துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் பெறலாம்.இவ்வாறுஅதில் கூறப்பட்டு உள்ளது.

NMMS உதவித்தொகை தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வுக்கு,24ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.எட்டாம் வகுப்பு மாணவருக்கான இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, மாதம், 500ரூபாய் வீதம், பிளஸ் 2 முடிக்கும் வரை, உதவித்தொகை வழங்கப்படும். 


இதற்கான விண்ணப்பங்களை, 11ம் தேதிக்குள், தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.தற்போது, 24ம் தேதி வரை, அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் விண்ணப்பங்களை, 14ம் தேதி முதல், 24 வரை, தேர்வுத்துறை இணையதளத்தில் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யலாம் என,தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து? தனியார் பள்ளிகள் முடிவு

கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையை ரத்து செய்ய, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலுார் மாவட்டங்களில், கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கால், ஒரு மாதமாக பள்ளிகள் இயங்கவில்லை. டிச., 14 முதல், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. 


எனினும், டிச., 22க்குள் முடிக்க வேண்டிய, 10ம் வகுப்பு, பிளஸ் 2 அரையாண்டு தேர்வுகள் மற்றும்,1ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரையிலான, இரண்டாம் பருவ தேர்வுகளை நடத்துவதா, வேண்டாமா என, பள்ளிக் கல்வித்துறையும், பள்ளி நிர்வாகமும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன.

இரண்டாம் பருவ பாடங்களை நடத்தாமல், தேர்வை மட்டும் நடத்த முடியாது என்பதால், டிச., 24 முதல், ஜன., 1 வரையிலான, கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர் விடுமுறை நாட்களை ரத்து செய்ய, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.சென்னை, எழும்பூர் டான் போஸ்கோ பள்ளி, 'டிச., 15 முதல், அரையாண்டு தேர்வுக்கு முந்தைய திருப்புதல் தேர்வு நடக்கும்; டிச., 24 மீலாது நபி, 25ல் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மட்டும்விடுமுறை விடப்படும்; டிச., 26 முதல், வழக்கமான வகுப்புகள் நடக்கும்' என, அறிவித்துள்ளது. மேலும் சில பள்ளிகள், விடுமுறை மற்றும் தேர்வு குறித்து பெற்றோர், மாணவர்களிடம் கருத்து கேட்டு வருகின்றன. இதில், 50 சதவீத பெற்றோர், 'அரையாண்டு தேர்வுக்கு பதில், விடுமுறை நாட்களிலும் வகுப்புகள் நடத்தலாம்' என, தெரிவித்துள்ளனர். மற்றொரு தரப்பினர், டிசம்பர் விடுமுறைக்கு, வெளியூர் செல்ல திட்டமிட்டு, டிக்கெட் முன்பதிவு உட்பட, பல ஏற்பாடுகள் செய்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால், தனியார் பள்ளி நிர்வாகங்கள் குழப்பத்தில் உள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் இளங்கோவன் கூறும்போது, ''தேர்வு மற்றும் விடுமுறை குறித்து, இன்னும் முடிவு எடுக்கவில்லை. முதற்கட்டமாக, பள்ளிகளை திறந்து இயல்பு நிலைக்கு வர வேண்டும். அதன்பின், தேர்வு மற்றும் விடுமுறையை திட்டமிட முடியும். சில தனியார் பள்ளிகள் முடிவு எடுத்தால், அது அவர்களின்நிர்வாகம் தொடர்பானது,'' என்றார்.-

ஜனவரி 1 முதல் 15-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை: அரசு பரிசீலனை

தில்லியில் தனியார் வாகனங்களுக்கான கட்டுப்பாடு அமல்படுத்தப்படவுள்ள ஜனவரி 1 முதல் 15ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், தலைநகரில் உள்ளபள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தில்லி அரசு பரிசீலித்து வருகிறது.இதுகுறித்து, துணை முதல்வரும், மணீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை கூறியதாவது:


ஒற்றைப் படை மற்றும் இரட்டைப் படை பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் மீது கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள ஜனவரி 1 முதல் 15ஆம் தேதி வரையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு எங்களுக்கு பரிந்துரை வந்துள்ளது.அதுகுறித்து பரிசீலித்து வருகிறோம். தேவையேற்பட்டால், அந்த காலகட்டத்தில் தில்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.அதிரடியாக அதிகரித்துள்ள காற்று மாசு குறித்து, பள்ளி முதல்வர்களும், ஆசிரியர்களுமே மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தில்லியில் சுமார்26 லட்சம் மாணவர்கள் இருப்பதால், காற்று மாசு காரணமாக அவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று மணீஷ் சிசோடியா கூறினார்.இதுகுறித்து அரசு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "தில்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு டிசம்பர் இறுதி வாரம் முதல் ஜனவரிமுதல் வாரம் வரையில் குளிர்கால விடுமுறை அளிக்கப்படும். ஒருவேளை கல்வித்துறை ஜனவரி 1 முதல் 15ஆம் தேதி வரையில் விடுமுறை அளிக்கும் பட்சத்தில், அது மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் இருக்காது' என்றார்.

தமிழகம் முழுவதும் தேர்தல் அலுவலர்கள் நியமனம்: வாக்கு எண்ணும் மையங்கள் ஆய்வு

வரும் சட்டப்பேரவை தேர்தலில் சேலம் தெற்கு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தியாகராஜர் தொழில்நுட்ப கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மையத்தை மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ் நேற்று ஆய்வு செய்தார்தமிழக சட்டப்பேரவை தேர்தலுக் காக தமிழகம் முழுவதும் தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர். 


வாக்கு எண்ணும் மையங் களில் ஆய்வு செய்து உள்கட்ட மைப்பு வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவை தேர்தலை துல்லியமாக நடத்திடும் வகையில், தமிழகத்தின் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத் தும் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.இதன்படி ஒவ்வொரு மாவட் டத்திலும் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, துணை ஆட்சியர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட் டுள்ளனர். மேலும், வட்டாட்சியர் கள் உதவி தேர்தல் நடத்தும் அலு வலராகநியமிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்த பட்டியல்கள் ஒவ் வொரு மாவட்டத்தில் இருந்தும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வாக்கு எண்ணிக்கை மையங்களை தேர்வு செய்யும் பணியும் நடைபெற்றது.தற்போது வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஆய்வு செய்து அங்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் பார்வையாளர்கள்,வேட் பாளர்கள் மற்றும் முகவர்கள் அமர்வதற்கான இடவசதிகள், தொலைத் தொடர்பு வசதிகள் மற்றும் மீடியா மையம் அமைப்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.மேலும், வாக்குசாவடிகளில் சர்வேயர்களைக் கொண்டு, ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி, வாக்குச் சாவடிகளை கூகுள் வரைபடத்தில் இடம்பெறச் செய்யும் பணியும் முடிக்கப்பட் டுள்ளன.

மேலும், வாக்குச்சாவடிகளில் இருந்தவாறே பணிகளை மேற் கொள்ளும் வகையில்,வாக்குச் சாவடி அதிகாரிகளுக்காக, செல் போனில் பயன்படுத்தும் பிஎல்ஓ நெட் என்ற செயலியும் (ஆப்ஸ்) உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டி லேயே முதன்முறையாக, தமிழக சட்டப்பேரவை தேர்தலில், பிஎல்ஏ நெட் செயலி பயன்படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.இதுதவிர, ஒவ்வொரு மாவட்டத் திலும் உள்ளூர் விடுமுறை அறி விக்கப்படும்கோயில் பண்டிகை கள் குறித்த விவரமும் தயாரிக் கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.பள்ளி பொதுத்தேர்வுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர் தல் தேதியைஅறிவிக்க தீர் மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலுக் கான அடிப்படை பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன.தொடர்ந்து, ஜனவரியில் தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகள், வாக்குச்சாவடி அதிகாரிகள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை ஒருங்கிணைக் கும் வகையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளான மாவட்ட ஆட்சி யர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரி களான துணை ஆட்சியர்கள் ஆகி யோர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தி னார். இனி வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் இதுபோன்று தேர் தல் ஆய்வுப் பணி தொடர்ந்து நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை பல்கலை. செமஸ்டர் தேர்வுகள் மறு தேதி அறிவிப்பு

மழை காரணமாக ஒத்திவைக் கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளின் மறு தேதிகளை சென்னை பல் கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான தேர்வுகள் பின்வருமாறு வேறு தேதிகளுக்கு மாற்றியமைக் கப்பட்டுள்ளன. முன்னர் அறி வித்த தேர்வு தேதியும், புதிய தேதியும் கீழே கொடுக்கப்பட் டுள்ளது.

2016-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு தேதி அறிவிப்பு

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி), 2016-ம் ஆண்டுக்கான தேர்வு தேதிகள் வெளியிட்டுள்ளது.யுபிஎஸ்சி நிறுவனம் பல்வேறு பணிகளில் ஆட்களை நியமிப்பதற்கு போட்டித் தேர்வுகள் நடத்தி வருகின்றது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவி வழங்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில், அடுத்த கல்வியாண்டுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 


பாதுகாப்பு சேவை தேர்வு (CDS I) பிப்ரவரி 14-ம் நடத்தப்படுகிறது. வழக்கமாக இந்த தேர்வு ஆண்டின் முதல் மாதம் அதாவது ஜனவரி மாதம் நடத்தப்படும். இந்த ஆண்டு தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.சிவில் (பிரிமினரி) தேர்வு ஆகஸ்ட் 7, 2016-ம், மெயின் தேர்வு டிசம்பர் 3-ம் தேதியும் நடத்தப்படுவதாக யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிடு

அரையாண்டு விடுமுறை உண்டா? ஆசிரியர்களிடையே குழப்பம்.

அரையாண்டு விடுமுறை விடப்படுமா என்ற கேள்விகளுக்கு, பதில் கிடைக்காமல், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.சமீபத்திய மழையால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், ஒரு மாதமாக, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு, அரையாண்டு தேர்வை, தமிழக அரசு ரத்து செய்தது.


மழையால் பாதிக்கப்படாத பல்வேறு மாவட்டங்களில், அரையாண்டு தேர்வுக்கு பதில், முன்மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வு முடிந்தவுடன், பள்ளி இயங்கும் அல்லது விடுமுறை விடப்படும் என்ற அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால், விடுமுறை விடுவது குறித்து,ஆசிரியர்களிடையே குழப்பம் நீடிக்கிறது.

ஆசிரியர்கள் கூறியதாவது: 

அரசு, அரையாண்டு தேர்வை ரத்து செய்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு பின் அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறையை ரத்து செய்வது குறித்து, எந்த அறிவிப்பும் இல்லை. இதனால்,அரையாண்டு விடுமுறையை அனுமதித்தால், தமிழக அரசை எதிர்ப்பதாக கருதப்படுமோ என்ற அச்சம்,கல்வித்துறை அலுவலர்களிடம் உள்ளது. அத்துறை அலுவலர்களுக்கும் தெளிவு இல்லாததால், பதில் கூற தயங்குகின்றனர். இதனால், குழப்பம் நீடிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அண்ணாமலைப் பல்கலையில் டிச.14 முதல் 28 வரை மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் நகல்கள் வழங்கும் முகாம்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் நகல்கள் வழங்கும் சிறப்பு முகாம் வருகிற டிச.14-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை பல்கலைக்கழக ராஜா முத்தையா அனெக்ஸ் அரங்கில் நடைபெறுகிறது.மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்கள் சான்றிதழ் நகல்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. 


அதனடிப்படையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் நகல்கள் வழங்கும் சிறப்பு முகாமை டிச.14-ந்தேதி முதல் 28-ம் தேதி வரை நடத்துகிறது.மாணவர்கள் தங்களிடம் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்றதற்கான சான்றுகளான மாணவர் சேர்க்கை எண் அல்லது சேர்க்கை அடையாள அட்டை அல்லது தேர்வு பதிவு எண் அல்லது தேர்வு அனுமதி சீட்டு போன்ற ஏதேனும் ஒரு அடையாளத்துடன் விண்ணப்பித்து எவ்வித கட்டணமின்றி மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழ் நகல்களை பெற்றுக் கொள்ளலாம்.மேலும் சிதம்பரம் தாலுக்கா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என பதிவாளர் (பொறுப்புஃ கே.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

தொடருமா எஸ்.எஸ்.ஏ ., திட்டம் ?

12/12/15

டிசம்பருக்குள் தேர்வுகளை முடிக்க சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு: பிப்ரவரி 3-ஆவது வாரத்தில் தேர்வு முடிவு

மழை, வெள்ளப் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பருவத் தேர்வுகளை டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்க சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.மேலும், இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகளை பிப்ரவரி 3-ஆவது வாரத்தில் வெளியிடுவது எனவும் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.


வெள்ளப் பாதிப்பு காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இயங்கி வரும் இணைப்புக் கல்லூரிகளுக்கு நடத்தப்பட இருந்த பருவத் தேர்வுகளை சென்னைப் பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது.ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தேர்வுகளுக்கான மறு தேதியை முடிவு செய்வது, அடுத்த பருவ வகுப்புகளை எப்படி நடத்துவது என்பதை முடிவுசெய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.பல்கலைக்கழக பதிவாளர் டேவிட் ஜவஹர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அனைத்து இணைப்புக் கல்லூரி முதல்வர்களும் பங்கேற்றனர்.இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் திருமகன் கூறியதாவது:வெள்ள பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டத் தேர்வுகளை டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிப்பது எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.அதன் அடிப்படையில் தேர்வுக்கான மறு தேதிகள் இறுதி செய்யப்பட்டு, பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் டிசம்பர் 14-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 6-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. மேலும், தேர்வுத் தாள் திருத்தும் பணிகளை வேகமாக நிறைவு செய்து பிப்ரவரி 3-ஆவது வாரத்தில் வெளியிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்வின்போதே வகுப்புகள்:

தொடர் விடுமுறை காரணமாக அடுத்த பருவத்துக்கான வகுப்புகள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் பருவத் தேர்வுகள் நடைபெறும்போதே, தேர்வு இல்லாதவர்களுக்கு வகுப்புகளை நடத்துமாறு கல்லூரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.பொதுவாக, பருவத் தேர்வு நடைபெறும்போது வகுப்புகள் நடத்தப்படாது. ஆனால், இந்த முறை இதற்கு அனுமதித்துள்ளோம். தேவைப்பட்டால் கூடுதல் நேரம் வகுப்புகளை நடத்துமாறும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார் அவர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடைமைகள்: பள்ளி மாணவ,மாணவிகளுக்கு சீருடையிலிருந்து விலக்கு அளிக்கப்படுமா?

சென்னை அடையாறு, கூவம் ஆற்றங்கரையோரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மாணவர்களின் சீருடைகள், புத்தகங்கள், ஷூக்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. இதனால், பள்ளிகளுக்கு சீருடை அணிந்து செல்வதிலிருந்து மாணவ, மாணவிகளுக்குவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


கோட்டூர்புரம் மேம்பாலம் அருகில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. அண்மையில் பெய்த பலத்த மழையால், இங்கு முதல் தளம் வரை வெள்ளம் சூழ்ந்தது. இந்தப் பகுதியில் உள்ள மக்கள்அனைத்தையும் இழந்து பரிதவிக்கின்றனர். மாணவ, மாணவிகளின் புத்தகங்கள், சீருடைகள், பள்ளி ஷூக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கூறியதாவது:

அசாருதீன்: அண்ணா சாலையில் உள்ள ஆசம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கிறேன். என்னுடைய புத்தகம், சீருடைகள் அனைத்தும் வெள்ளத்தில் போய்விட்டன. பள்ளிக்குச் சீருடையில்தான் செல்ல வேண்டும்.வெள்ளத்தில் சீருடைகள் சென்றுவிட்டதை சில நாள்கள் சொல்லலாம். அதற்குப் பிறகு என்ன செய்வது எனத் தெரியவில்லை. ஆசிரியர்கள் அனுமதிக்க மாட்டார்கள். தற்போதையே நிலையில் எல்லா பொருள்களையும் உடனே வாங்குவது என்பது சாத்தியமில்லை என்றார்.

ருசிதா: திருவான்மியூரில் உள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் பிளஸ்-1 படிக்கிறேன். என்னுடைய புத்தகங்களும், சீருடைகளும் வெள்ளத்தில் சென்றுவிட்டன. சிறிது நாள்கள் காரணம் சொல்லலாம். இருப்பினும், புத்தகம் உள்ளிட்ட இழந்த அனைத்தையும் வாங்க வேண்டியது கட்டாயம் என்றார்.தினேஷ்குமார் (12-ஆம் வகுப்பு), ராஜேஷ் (9-ஆம் வகுப்பு) இருவரும் நந்தனத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர். இந்தப் பள்ளியில் பிறந்த நாளுக்குக்கூட சீருடைதான் அணிந்து செல்ல வேண்டுமாம். புத்தங்களை எப்படியும் பள்ளியில் மீண்டும் தந்துவிடுவர் என்றாலும், சீருடைகளுக்கு என்ன செய்வது என்று இந்த மாணவர்களுக்கு தெரியவில்லை.

தலைமை ஆசிரியர் அறிவுறுத்தல்:

புத்தகங்களைவிட சில மாணவர்களுக்கு நோட்டுகள் அடித்துச் செல்லப்பட்டது மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. ஏனென்றால், இந்த நோட்டுகளில்தான் அவர்கள் கணிதம் உள்ளிட்ட பாடங்களை எழுதிவைத்திருந்தனர். இப்போது என்ன செய்வது எனதெரியவில்லை என அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.சென்னை அமைந்தகரை, ஷெனாய் நகர் உள்ளிட்ட இடங்களில் கூவம் ஆற்றின்கரையோரம் வசிக்கும் மாணவர்கள், ஷெனாய் நகர் திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். இப்பள்ளியில் பயிலும் 800 மாணவர்களில், 500-க்கும் மேற்பட்டோர் தற்போது ஏற்பட்ட வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் சீருடைகளோ, நோட்டுப் புத்தகங்களோ எதுவுமே இல்லை என அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.ஜான் தெரிவித்தார். எனவே, பாதிக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வந்தாலே போதும் எனவும் அறிவுறுத்தியுள்ளதாக தலைமை ஆசிரியர் ஜான் கூறினார்.இந்த மாணவர்களுக்கான நிவாரணப் பொருள்களை ஏற்பாடு செய்வதோடு, பள்ளிக் கல்வித் துறையிடமிருந்து புத்தகங்களும் பெறப்பட்டு வழங்கப்படுகின்றன. மேலும், மாணவர்களிடையே இது தொடர்பான குழப்பத்தைத் தவிர்க்க அனைத்துப் பள்ளிகளுக்கும் பொதுவான அறிவிப்பை வெளியிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

"வற்புறுத்தக் கூடாது'

இதுகுறித்து, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:
மிகப்பெரிய அளவில் மழை, வெள்ளம் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைப் பாதித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிதாக சீருடைகள், புத்தகங்கள் வழங்கப்படும் வரை பள்ளிகளில் அவற்றை வற்புறுத்தக் கூடாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அதேபோல், தனியார் பள்ளி மாணவர்கள் புதிதாகச் சீருடைகள்வாங்கும் வரை அவர்களிடமும் சீருடைகளை வற்புறுத்தக் கூடாது என அரசு உத்தரவிட வேண்டும் என்றார் அவர்

சேதமடைந்த வகுப்பறையை மூட பள்ளி கல்வித்துறை உத்தரவு

மழையால் சேதமடைந்த வகுப்பறைகளை, பாதுகாப்பாக பூட்டி வைக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பிய சுற்றறிக்கை:


மழையால் சில பள்ளிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பள்ளி வளாகம், வகுப்பறைகளை துாய்மைப்படுத்தும் பணியை தலைமை ஆசிரியர்கள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். துப்புரவு பணியாளர்களைதினக்கூலி அடிப்படையில் அமர்த்தி, பணியை முடிக்க வேண்டும்.வகுப்பறைகள், பள்ளி வளாக பகுதிகளில் 'பிளீச்சிங்' பவுடர் துாவ வேண்டும். மின்சார சுவிட்ச்கள் சரியாக உள்ளனவா, மழைநீரில் நனையாதபடி உள்ளனவா என, உறுதிப்படுத்த வேண்டும்.வகுப்பறை மேற்கூரையை ஆய்வு செய்ய வேண்டும்; மழைநீர் தேங்கியிருந்தால், உடனடியாக அகற்ற வேண்டும். பள்ளிகளை சுற்றிலும், பாதுகாப்பான தடுப்பு அமைக்க வேண்டும். விழும் நிலையில் மரங்கள் இருப்பின், உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். ஆபத்தான நிலையில் உயரழுத்த மின்கம்பங்கள், அறுந்து தொங்கும் நிலையில் மின்கம்பிகள் இருப்பின், அவற்றை அகற்ற வேண்டும்.

மழையால், வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருந்தால், பயன் படுத்தாமல், பாதுகாப்பாக பூட்டி வைக்க வேண்டும். அந்த அறைக்கு அருகே மாணவ, மாணவியர் செல்லாதபடி கவனித்துக்கொள்ள வேண்டும்.தொடர் மழையால், சுற்றுச்சுவர் அதிக ஈரப்பதத்துடன் பலவீனமாக காணப்படும் என்பதால், அதன் அருகில், 10 அடி துாரம் வரை தடுப்புஏற்படுத்தி, அப்பகுதிக்கு மாணவர்கள் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

கட்டட உறுதி, சுகாதார சான்றிதழ் தரதலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

கட்டட உறுதி, பூச்சிக்கொல்லி, கிருமிநாசினி தெளித்தல் போன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அதிகாரிகளிடம் சான்றிதழ் தர, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் பள்ளி வளாகத்தை முறைப்படி சுத்தம்செய்ய வேண்டும். நோய்க்கிருமிகள் பரவாத வண்ணம், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.வகுப்பறைகளின் அனைத்து சுவர்களின் உறுதி தன்மையை கண்டறிய வேண்டும்.

பள்ளி கழிவறைகள் மூலம் தொற்று நோயும் பரவாமல் பராமரிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு, 'குளோரின்' தெளித்து பாதுகாப்பான குடிநீர் வழங்க உத்தரவிட வேண்டும்.மின் சாதனங்களை பரிசோதனை செய்து நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களை சுத்தம் செய்து, பாத்திரங்களை சுத்தம் செய்த பின் சமையல் செய்ய வேண்டும். இதுபோன்ற நட வடிக்கைகளை மேற்கொண்டு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம், தலைமை ஆசிரியர்கள் சான்றிதழ் தர வேண்டும்.

மேலும்,dirsedu@nic.in, dsetamilnadu@gmail.comஎன்ற இ - மெயில் முகவரியில் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

பருவத் தேர்வு மறு தேதி: சட்டப் பல்கலை. அறிவிப்பு.

மழை, வெள்ள பாதிப்பின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பருவத் தேர்வுகளுக்கான மறு தேதிகளை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.வெள்ள பாதிப்பின் காரணமாக பிற பல்கலைக்கழகங்களைப் போல் சட்டப் பல்கலைக்கழகமும் அதன் கீழ் இயங்கும் இணைப்புக் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகளை ஒத்திவைத்தது.


பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் ஆற்றல்சார் சட்டப் பள்ளிக்கான 3 ஆண்டு ஹானர்ஸ், 5 ஆண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்புத் தேர்வுகள், இணைப்புக் கல்லூரிகளுக்கான 3 ஆண்டு, 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் என அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.இந்தத் தேர்வுகளுக்கான மறு தேதிகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின்www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் இந்த விவரங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

மழை காரணமாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைகழக B.Ed.தேர்வு ஒத்திவைப்பு - புதிய தேர்வு அட்டவணை வெளியீடு

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளின் மறுதேதிகள் அறிவிப்பு: ஞாயிற்றுக்கிழமையும் தேர்வுகள் நடக்கிறது

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளுக்கான மறு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.அதன்படி, ஞாயிற்றுக்கிழமையும் தேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி ஜி.வி.உமா வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-


வெள்ளப்பாதிப்பு காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படவிருந்த மற்றும் வேறு தேதிக்கு மாற்றப்பட்டிருந்த இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தேர்வுகள் பின்வருமாறு வேறு தேதிகளுக்கு மாற்றியமைக்கப்படுகின்றன. பழைய தேர்வு தேதியும், மறு தேதியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் டிச.14-இல் திறப்பு

மழை, வெள்ளப் பாதிப்புக்குப் பிறகு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் வரும் திங்கள்கிழமை (டிச.14) திறக்கப்பட உள்ளன.இதையடுத்து, இந்த மாவட்டங்களில் பள்ளிகளை நடத்தப்படும் நிலையில் வைப்பதற்கான ஆயத்தப் பணிகளையும், தூய்மைப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அவர் வியாழக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:-


பலத்த மழை காரணமாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை முடிந்து டிசம்பர் 14-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.அனைத்துப் பள்ளிகளிலும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து வகுப்பறை, பள்ளி வளாகம் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் பணி, பிற பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கழிவறைகளை பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தப்படுத்துவதோடு, கொசுமருந்து புகையும் அடிக்கப்பட வேண்டும்.அனைத்து சத்துணவு மையங்களும் பள்ளிகள் திறக்கப்படும் நாளில் செயல்படும் நிலையில் உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். 

அந்த மையங்களில் சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு முன் சுத்தப்படுத்த வேண்டும். சமையலுக்குத் தேவையான அரிசி உள்ளிட்ட பொருள்களும், குடிநீரும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். குடிநீரில் குளோரின் மாத்திரைகளைக் கலக்க வேண்டும்.பள்ளிகள் டிசம்பர் 14-ஆம் தேதியன்று நடத்தப்படும் நிலையில் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்துத் தலைமையாசிரியர்களிடமும் உறுதிமொழி கடிதத்தைப் பெற்று பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு டிசம்பர் 13-ஆம் தேதி அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சுங்கச் சாவடிகளில் கட்டணம் ரத்து 18 வரை நீட்டிப்பு.

தமிழக சுங்கச் சாவடிகளில் வருகிற 18 ஆம் தேதி வரை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த !ரு மாதமாக பெய்த பெரு மழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.


சென்னைக்கு குடிநீர் அளிக்கும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ள நீர் சென்னையை மூழ்கடித்தது. இதனால், தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சென்னைக்கு நிவாரண பொருட்கள் கொண்டு வருவதால் தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.இந்த கோரிக்கையை ஏற்று இன்றுவரை (டிச.11) கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.இந்நிலையில், இன்னும் சென்னை பழைய நிலைக்கு திரும்பாததால் மேலும் வருகிற 18 ஆம் தேதி வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

வாகனங்களுடன் வெளிமாநிலத்தில் இருந்து வரும் நிவாரண பொருள்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.