பள்ளிக் கல்வி துறையில், 155 நாட்களில், எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ள, செயலர் உதயசந்திரனை மாற்றினால், அது, 1.5 கோடி மாணவர்களை பாதிக்கும்' என, கல்வியாளர்களும், ஆசிரியர்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்து உள்ளனர்; 'அவரை மாற்றக் கூடாது' என்றும் வலியுறுத்தியுள்ளனர்.கல்வி செயலரை மாற்ற எதிர்ப்பு - சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி
தமிழக பள்ளிக் கல்வி துறை, பல ஆண்டுகளாக, பாடத்திட்டத்தை மாற்றாமலும், நவீன தொழில்நுட்பத்துக்கு மாறாமலும், தடுமாறி வந்தது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தும், எந்த மாற்றமும் நிகழாமல் இருந்தது.
பாராட்டு :
இந்நிலையில், பள்ளிக்கல்வி அமைச்சராக செங்கோட்டையனும், செயலராக உதயசந்திரனும் பொறுப்பேற்ற பின், தேசிய அளவில், தமிழக பள்ளிக் கல்வி துறைக்கு, புதிய பிம்பம் கிடைத்து உள்ளது. 14 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த பாடத்திட்டத்தை புதுமைப்படுத்தும் பணிகள், துரிதமாக நடந்து வருகின்றன. தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமே, தமிழக அரசின் முயற்சியை பாராட்டி உள்ளது. மார்ச், 6ல், பள்ளிக்கல்வி செயலராக பொறுப்பேற்ற உதயசந்திரன்,அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை படி, நேற்று வரையிலான,155 நாட்களில், எண்ணற்ற பணிகளை துறையில் செய்துள்ளார்.இந்நிலையில், பெற்றோர், மாணவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், செயலர் உதயசந்திரனை இடம் மாற்றம் செய்ய, முதல்வர் பழனிசாமி அரசிடம், சிலர் அழுத்தம் தருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பல்கலை துணைவேந்தர்கள், பள்ளி தாளாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தினர், மாணவர் பேரவையினர் என, அனைத்து தரப்பினரும், அதிர்ச்சி அடைந்துள்ளனர். 'செயலர் உதயசந்திரனை மாற்றக்கூடாது' என, அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் வலியுறுத்த துவங்கிஉள்ளனர்; இதுதொடர்பாக, அரசுக்கு கடிதங்களும் எழுதி வருகின்றனர்.
துவக்கம்:
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தேசிய அளவில், 'கோமா' நிலையில் இருந்த, தமிழக பள்ளிக் கல்வி துறை, அதிலிருந்து மீண்டு, நாட்டிற்கு முன்மாதிரியாக மாறுவதற்கான பயணத்தை துவக்கி உள்ளது. தற்போது, நடுவழியில் கப்பலை கவிழ்த்து விடுவது போல, பள்ளிக்கல்வி செயலரை மாற்றும் முயற்சியில், அரசியல்வாதிகளும், வணிக நோக்கில் செயல்படும் ஏஜென்டுகளும், அரசுக்கு அழுத்தம் தருவது தெரிய வந்துள்ளது. அவர் மாற்றப்பட்டாலோ அல்லது அவரதுசெயல்பாடுகளை முடக்கினாலோ, தமிழகத்தில் படிக்கும், 1.5 கோடி மாணவர்களின் எதிர்காலம், மீண்டும் இருளில் தள்ளப்படும். இது போன்ற அதிகாரிகளுக்கு, கூடுதல் ஆதரவு கொடுத்து, பணிகளை முடிக்க, அமைச்சரும், அரசும் உதவ வேண்டும். மாறாக, சுய கவுரவம், லஞ்சம், ஊழலில்ஈடுபடுவதற்காகவும், யாரையாவது திருப்திபடுத்தவும், அவரை மாற்ற முயற்சித்தால், முதல்வர் பழனிசாமியின் அரசு, மாணவர்களுக்கு துரோகம் இழைப்பதாகி விடும். எனவே, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், செயலர் உதயசந்திரனின் கூட்டுப் பணி, துறையில் தொடர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டணியின் 155 நாள் சாதனைகள் :
* பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், தனியார் பள்ளிகள், வியாபார பொருளாக பயன்படுத்திய, மாநில, மாவட்ட, 'ரேங்க்' முறை, அதிரடியாக ஒழிக்கப்பட்டது.
* மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார்பள்ளிகளில், ஏழை மாணவர்கள் இலவச இடம் பெற, 'ஆன்லைன் அட்மிஷன்' முறை கொண்டு வரப்பட்டது.
* புதிய கல்வி ஆண்டில், பள்ளிகள் திறந்து, பாதி பாடம் முடிந்த பின், ஆகஸ்டில் ஆசிரியர்களை இட மாற்றம் செய்யும் கவுன்சிலிங் முறை ஒழிக்கப்பட்டு, கல்வி ஆண்டு துவங்கும் முன்னரே, வெளிப்படையான இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
* 100 உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாகவும்; 150 நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
* டி.ஆர்.பி., எனப்படும், ஆசிரியர் தேர்வு வாரியத்தில், ஆன்லைன் விண்ணப்ப முறை கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்வு முறையும், விரைவில், 'ஆன் லைன்' மயமாகிறது.
* 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் திட்டமிட்டு படிக்கும் வகையில், பள்ளி திறக்கும் நாளிலேயே, பொது தேர்வு நடக்கும் தேதியும், தேர்வு முடிவு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* மதிப்பெண் சான்றிதழ்களின் விபரங்கள், தமிழில் அச்சிடப்பட்டுள்ளன. இந்த சான்றிதழ்களை, மத்திய அரசின் டிஜிட்டல் இணையதளத்தில்,பதிவிறக்கம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* அண்ணா நுாலக நிர்வாகம் சீரமைக்கப்பட்டு, முதல் முறையாக, தமிழக அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியான ஆசிரியர்களை தேடிப்பிடித்து, விருதுக்கு பரிந்துரைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
* கிடப்பில் போடப்பட்ட, சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ராமதாஸ் வலியுறுத்தல்
'நேர்மையாக செயல்படும் கல்வித் துறையின் இரு செயலர்களையும் இடமாற்றம் செய்யும் முடிவை, தமிழக அரசு கைவிட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலராக, உதயசந்திரன், மார்ச்சில் நியமிக்கப்பட்டார். அதன்பின், அத்துறை, புதிய பாதையில் பயணிக்கத் துவங்கியது. பொதுத் தேர்வுகளில், தர வரிசையை ஒழித்தது; பிளஸ் 1க்கும், பொதுத் தேர்வை அறிமுகம் செய்தது; பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான குழுக்களை அமைத்தது உள்ளிட்ட, உதயசந்திரனின் சிறப்பான பணிகளை மக்கள் அறிவர். அவர் பொறுப்பேற்று, ஐந்து மாதங்களே முடிந்துள்ள நிலையில், அவரை, அத்துறையிலிருந்து மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை,தமிழக அரசு துவங்கி உள்ளது. இதற்கு காரணம், ஆட்சியாளர்களின் ஊழலுக்கு, உதயசந்திரன் ஒத்துழைக்க வில்லை என்பது தான்.ஆசிரியர்களை இடமாறுதல் செய்வதில் எழுந்த சிபாரிசு பிரச்னையால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.பாரதியார் பல்கலையில் நடந்த ஊழல்கள் தொடர்பாக, துணைவேந்தர் கணபதி மீது விசாரணை நடத்த, உயர் கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் உத்தரவிட்டார். பெரியார் பல்கலை, திருச்சி பாரதிதாசன் பல்கலை ஆகியவற்றில் நடந்த ஊழல்கள் குறித்து, விசாரணை கமிஷன் அமைப்பதற்கான ஏற்பாடுகளையும், அவர் செய்து வருகிறார். அவரையும் மாற்ற முயற்சி நடப்பதாக தெரிகிறது.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அடிப்படை தேவை, தரமான கல்வி வழங்குவது தான். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள, இரு அதிகாரிகளை மாற்றத் துடிப்பது கண்டிக்கத்தக்கது. பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட, கல்வி வளர்ச்சி சார்ந்த அனைத்து பணிகளும் பாதிக்கப்படும். எனவே, கல்வித் துறையின் இரு செயலர்களையும் இடமாற்றும் முடிவை, தமிழக அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.