திண்டுக்கல்: தரம் மட்டுமின்றி பயனில்லாத அறிவியல் உபகரணங்களை 4ஆவது ஆண்டாக
ரூ.25ஆயிரத்திற்கு வழங்குவதால், அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி வீணாவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுக் கூடத்திற்கான உபகரணங்கள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அறிவியல் பாடம் தொடர்பான மாதிரிகள்(மாடல்ஸ்) வாங்குவதற்காக அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் பள்ளிக்கு தலா ரூ.25ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட பள்ளியின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும் இந்த தொகை, அறிவியல் உபகரணங்கள் வழங்கும் நிறுவனத்திற்கு காசோலையாக வழங்கப்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்காக செலவிடப்படும் இந்த நிதி, பெரும்பாலான இடங்களில் முறையாக பயன்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. மாணவர்களுக்கு தேவையான புதிய உபகரணங்களுக்கு பதிலாக, ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவியல் உபகரணங்களே கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக கண், மூளை, டெஸ்ட் டியூப், பிப்பட், பியூரட், எடை இயந்திரம் உள்பட 25க்கும் மேற்பட்ட பொருள்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் உபகரணங்களை அந்தந்த பள்ளியின் தலைமையாசிரியர்கள் வாங்கி வந்த நிலையில், வாங்கப்பட்ட பொருள்களை பல பள்ளிகளில் ஆய்வு செய்து உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், முறைகேடுகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், நிறுவனத்திடமிருந்து பொருள்களைப் பெற்றுக் கொண்டு, காசோலை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இத்திட்டத்தின் மூலம் தரமில்லாத மற்றும் தேவையில்லாத உபகரணங்கள் வழங்கப்படுவதால், அரசு நிதி வீணடிக்கப்படுவதோடு, மாணவர்களுக்கு பயனற்ற நிலையில் இருப்பதாகவும் தலைமையாசிரியர்கள் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிகழாண்டுக்கான அறிவியல் உபகரணங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்ட அதே பொருள்களே மீண்டும் அனுப்பப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அறிவியல் ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,
பள்ளியின் தேவை குறித்து யாரும் கேட்பதில்லை. தனியார் நிறுவனம் வழங்கும் உபகரணங்களையே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. 10 முதல் 20 மாணவர்கள் பயிலும் பள்ளிகளில், ஒரே மாதிரியான 5 உபகரணங்கள் தேவையில்லை. அதற்கு பதிலாக பள்ளி ஆசிரியர்கள் பரிந்துரைக்கும் பொருள்களை வழங்கினால், ஆய்வுக் கூடத்திற்கு தேவையான அனைத்து வகையான உபகரணங்களும் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.இதனை கருத்தில் கொண்டு, உபகரணங்கள் தேர்வு செய்யும் பொறுப்பினை சம்பந்தப்பட்ட பள்ளியின் அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரிர்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
-நங்கையார் மணி
தலைமையாசிரியர்களுக்கு ரூ.2ஆயிரம்
அறிவியல் உபகரணங்கள் வழங்கும் நிறுவனத்தின் முகவர்கள் காசோலை சேகரிப்பதற்காக பள்ளிகளுக்குச் செல்லும் போது, பள்ளியின் தலைமையாசிரியருக்கு ரூ.2ஆயிரம் வீதம் பணம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக் கொள்ளாவிட்டாலும், தங்கள் பெயரில் வரவு வைக்கப்படும் என்பதால், அதனை பள்ளி மாணவர்களின் நலனுக்காக செலவிடுவதாகவும் சில தலைமையாசிரியர்கள் கூறுகின்றனர். தரமான உபகரணங்களை, நியாயமான விலைக்கு விற்பனை செய்தால், தலைமையாசிரியர்களுக்கு ரூ.2ஆயிரம் எதற்காக கொடுக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.