ராஜஸ்தானில் தேசிய கீதத்தை மெதுவாக பாடியதாக ஒன்பதாம் வகுப்பு
மாணவிகளைத் தலைமை ஆசிரியர் தோப்புக்கரணம் போட வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் உள்ள சபல்பூரா கிராமத்தில் ராஜ்கியா ஆதர்ஷ் மத்யமிக் வித்யாலயா அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நேற்று காலை (பிப்ரவரி 15) தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் தேசிய கீதத்தை மெதுவாகப் பாடியுள்ளனர். அப்போது அதைப் பார்த்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களை ஒரு மணி நேரம் தோப்புக்கரணம் பொடவைத்துள்ளார். பின்னர் அவர்களை அடித்துள்ளார். இந்தத் தண்டனையால் மாணவிகளுக்குக் கால்களில் வீக்கம் ஏற்பட்டது. சில மாணவிகள் மயங்கி விழுந்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மாணவிகளில் பெற்றோர் பள்ளியின் முன்பு திரண்டு பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிப் போராட்டம் நடத்தினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவிகளின் பெற்றோர்களும், மாணவிகளும் புகார் அளிக்கவில்லை. புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் விடுதிகளில் உள்ள மாணவர்கள் கட்டாயமாக தேசிய கீதம் பாடவேண்டும் என ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பண மதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நவம்பர் 8ஆம் தேதியை கறுப்பு தினமாக கடைப்பிடிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்தபோது, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் 50,000 பேர் ஒன்று கூடி தேசிய கீதம் பாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.