அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன என்று அப்பல்லோ நிர்வாக இயக்குனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 74நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், டிசம்பர் 5ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். ஜெயலலிதா மரண மர்மத்தைக் கண்டறிய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையத்தின் முன்பு ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக அப்பல்லோ நிர்வாகம் சார்பில் 2சூட்கேஸ்கள் நிறைய ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்று (மார்ச் 22) சென்னையில் அப்பல்லோ நிர்வாகம் சார்பில் சர்வதேச கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பிரதாப் சி ரெட்டி, "அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை வார்டு பாய் முதல் நர்ஸ், தலைமை மருத்துவர் என அனைவரும் சிறப்பாக கவனித்துக் கொண்டோம். அப்பல்லோ மருத்துவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு மருத்துவர்களும் அவருக்குச் சிறப்பான சிகிச்சையை அளித்தனர். முழு சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டது" என்று குறிப்பிட்டார்.
மேலும் "ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டன. சம்பந்தமில்லாதவர்கள் சிசிடிவி காட்சியை பார்க்க நேரிடும் என்பதால் எதிர்பாராதவிதமாக அனைத்து கேமராக்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் ஜெயலலிதாவின் தனிமை மற்றும் பாதுகாப்பு கருதி ஜெயலலிதா சிகிச்சைப் பெற்றுவந்த பகுதியில் இருந்த மற்ற நோயாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்" என்று கூறிய பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவை யார் யார் பார்க்க வேண்டும் என்பதை அவருடன் இருந்தவரே முடிவு செய்தார். சிகிச்சை தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளோம்" என்றும் குறிப்பிட்டார்.