ஓவ்வொருவரின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த கல்வியின் நிலை இன்றைக்கு தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது? பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாகி வேதனையான கட்டத்தில் பரிதவித்துக்கொண்டு அல்லவா இருக்கிறது.
விலைபோட்டு வாங்கவா முடியும் கல்வி?
கல்வி...! ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இன்றியமையாத ஒன்று. கல்வி என்ற அளவுகோலே ஒருவரின் அறிவு, ஆற்றலை நிர்ணயிக்கிறது. அந்த அறிவு, ஆற்றலே வாழ்க்கையில் மாற்றத்தையும் ஏற்றத்தையும் தருகிறது. காரணம், கல்வித் தகுதியின் அடிப்படையிலேயே வேலை, அதை வைத்தே ஊதிய அளவும் மாறுபடுகிறது.இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த கல்வியின் நிலை இன்றைக்கு தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது? பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாகி வேதனையான கட்டத்தில் பரிதவித்துக்கொண்டு அல்லவா இருக்கிறது.
ஆங்கிலம் தெரிந்திருந்தால்தான் கல்லூரியிலும், அதன் பின்பு பணிதளத்திலும் ஜொலிக்க முடியும் என்ற நிலையில், பள்ளி மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வியை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை வசதியாக பயன்படுத்திக்கொண்ட தனியார் பள்ளிகள் கட்டணம் என்ற பெயரில் பெரும் தொகை வசூல் செய்து கல்வித்துறையில் கல்லாக்கட்டத் தொடங்கிவிட்டன.
இன்னொருபுறம், தாய் மொழியிலான தமிழ் வழிக்கல்வியை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கின்றன. மாணவர்களின் விருப்பம் ஆங்கில வழிக் கல்வியை நோக்கி இருப்பதால், புற்றீசல் போல தனியார் பள்ளிகள் முளைக்கின்றன. தமிழ் வழியிலான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் படிப்படியாக மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நேரத்தில் ஆங்கில கல்வியை மாணவர்களும், பெற்றோரும் விரும்புவதற்கான காரணங்களை புறந்தள்ளிவிடவும் முடியாது. இதற்கு நியாயமான காரணங்களும் இருக்கின்றன. அதாவது, 12-ம் வகுப்புக்கு பிறகு, உயர்கல்வி படிக்க மாணவர்கள் கல்லூரிகளை நாடும்போது, அனைத்து வகை பட்டயப்படிப்பு, பட்டப்படிப்புகளிலும் பெரும்பாலும் ஆங்கிலமே மேலோங்கி நிற்கிறது.
உயர் கல்வியில் தமிழ் மங்கிப்போய் விடுவதால், தமிழ் வழி மாணவர்கள் ஆங்கிலத்தில் பாடங்களை படிக்க கஷ்டப்படுகிறார்கள். இதை உணர்ந்த பெற்றோர், என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை என்று, கடன் வாங்கியாவது பிள்ளைகளை ஆங்கில வழி பள்ளிகளில் சேர்க்க துணிகிறார்கள். இதுதான் தனியார் பள்ளிகளின் எழுச்சிக்கும், அரசு பள்ளிகளின் வீழ்ச்சிக்கும் காரணம் ஆகும்.
இது தொடர்பாக, தமிழக பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசின் குழு ஒன்று, தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அது நமக்கெல்லாம் அதிர்ச்சி வைத்தியம் தரும் வகையில் அமைந்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் 820 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் இருப்பதாகவும், அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்களை அவர்களே சொல்லிக் கொடுப்பதாகவும் அந்த குழுவின் அறிக்கை தகவல் தருகிறது.
ஆரம்ப பள்ளிகளை எடுத்துக்கொண்டால், 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், நடுநிலைப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் இருக்க வேண்டும் என்று மத்திய குழந்தைகள் கட்டாய கல்வி உரிமை சட்டம் கூறுகிறது. ஆனால், ஒரு ஆசிரியரே பள்ளி முழுவதையும் கவனித்துக்கொள்ளும் நிலை வந்ததற்கான காரணம், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துபோனது தான்.
தமிழக அரசும் இதே காரணத்தை சொல்லி, இன்றைக்கு 3 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு மூடு விழா நடத்த தயாராகிவிட்டது. காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு 1,053 பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கவும், மத்திய அரசின் நிதியுதவி நிறுத்தப்பட்டதால், 1,950 பள்ளிகளின் கதவுகளை அடைக்கவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சீட்டுக்கட்டு போல ஆண்டுதோறும் சரிந்துகொண்டே செல்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 30 ஆயிரம் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
அதாவது, இங்கு சேர வேண்டிய மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வியை பெறுவதற்காக தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை தான் இந்த புள்ளி விவரம் காட்டுகிறது.
நிலைமை இவ்வாறு இருக்க, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களும், பெற்றோரும் விரும்பும் ஆங்கில வழிக்கல்வியை தொடங்குவதற்கு அரசு தயங்கிக் கொண்டு இருக்கிறது. காரணம், தமிழகத்தில் கல்வியும் அரசியல் என்ற மாய வலைக்குள் சிக்கிக் கிடக்கிறதே!
ஒருவேளை அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை தொடங்கினால், இங்குள்ள எதிர் கட்சிகளும், அரசியல்வாதிகளும் போர்க்கொடி தூக்கிவிடுவார்கள். ‘தமிழ் மடிந்துபோகுமே...!’ என்றெல்லாம் அவர்கள் கவலை தெரிவிக்க தொடங்கிவிடுவார்கள். தங்களின் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்க களம் அமைத்துக்கொள்வார்கள். அதை தடுத்து நிறுத்தும் செயலிலும் அவர்கள் குதித்துவிடுவார்கள்.
ஆனால், அவர்களின் பிள்ளைகள் தமிழ் வழிக்கல்வியில் தான் படித்தார்களா?, படிக்கிறார்களா? அல்லது படிப்பார்களா? என்று பார்த்தால், அப்படி எதுவும் இல்லை என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
எனவே, முதலில் அரசியல் வலையில் சிறைபட்டு கிடக்கும் கல்வியை மீட்டெடுக்க வேண்டும். தாய் மொழி கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் பிரதானம் என்றாலும், உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும் ஆங்கில வழிக்கல்வியும் அவசியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மேலும், ஆங்கில வழிக்கல்வி படிப்பதால் தமிழ் அழிந்துவிடும் என்றில்லை. தமிழை பாதுகாத்து ஆங்கில அறிவையும் ஊட்ட அரசு முன்வர வேண்டும்.
தமிழக அரசுக்கு ஆங்கிலத்தின் அவசியம் தெரிந்தாலும், தமிழை காப்பதாக நினைத்துக் கொண்டு கண்டும் காணாமல் இருந்து வருகிறது. பெற்றோருக்குத்தான் பிள்ளைகளின் கல்வி பாரமாகிக் கொண்டிருக்கிறது. ‘நாம் அரசு பள்ளிகளில் படித்து, கல்லூரிகளில் சேர்ந்து பட்டப்படிப்பு முடித்தது வரை செலவான தொகையை, இன்றைக்கு நம் பிள்ளைக்கு எல்.கே.ஜி.யிலேயே செலவழிக்க வேண்டியது இருக்கிறது’ என்று அவர்கள் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். பிள்ளைகளை மேற்படிப்பு படிக்க வைக்கவும் பணத்திற்கு என்ன செய்வது? என விடை தெரியாமல் தினமும் திகைக்கிறார்கள்.
நாடு சுதந்திரம் அடைந்தபோது, தனியார் வங்கிகள் எல்லாம் அரசுடமையாக்கப்பட்டு, பொதுத்துறை வங்கிகளாக அறிவிக்கப்பட்டன. அந்த வங்கிகள் எல்லாம் இன்றைக்கு மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றிக் கொண்டிருக்கின்றன. அதுபோல், தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் என்று பாகுபாடு பார்க்காமல், அனைத்து பள்ளிகளையும், கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்கி, ஆங்கில வழியில் கல்வியை இலவசமாக மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தால், அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்.
அதற்கான நடவடிக்கையில் அரசு இறங்க வேண்டும். அதே நேரத்தில், தாய் மொழியான தமிழ் மொழியை காட்டாய பாடமாக்கி, பாகுபாடின்றி அனைவரும் கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ், நம் இனத்தின் அடையாளம். ஆங்கிலம், நிகழ் காலத்தின் கட்டாயம். எனவே, தாய்த்தமிழை காத்து, ஆங்கிலத்தையும் கற்பிக்க அரசு முன்வர வேண்டும்.
-ஆர்.கே.