யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/1/19

Attendance app இல் தாமத வருகை மற்றும் Absconded பதியும் முறைகள்

காலை 9.30 மணிக்குள் வருகையைப் பதிவு செய்யவும்.


வருகைப்பதிவு செய்தபின் மாணவர் எவரேனும் வருகை புரிந்தால் மீண்டும் app ஐ Open செய்து குறிப்பிட்ட மாணவருக்கு பதிந்துள்ள A என்பதை மாற்றி P என சமர்ப்பிக்கவும்.

குறிப்பிட்ட அந்த மாணவர் தாமத வருகை என்று பதிவாகிவிடும்.

அவ்வாறே பள்ளிக்கு வந்த மாணவன் app இல் P பதிவு செய்தபின் ஏதேனும் காரணத்தால் வீட்டிற்குச் சென்று விட்டால்,P என்பதை மாற்றி A எனப் பதியவும்.இது Absconded என பதிவாகும்.

*தாமத வருகை மற்றும்*
*Absconded இவற்றை நாம் app இல் பார்க்க இயலாது*

இவற்றை அங்கீகரம் பெற்ற அதிகாரிகளின் Login இல்  மட்டுமே காண இயலும்.

53 தலைமையாசிரியர் பணியிடம் கேள்விக்குறி: வருகிறது பள்ளிகள் ஒருங்கிணைப்பு திட்டம்

கோவையில், 53 பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்படுவதால், அங்குள்ள தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரை, கற்பித்தல் பணிகளில் ஈடுபடுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகம் முழுக்க, ஒரே வளாகத்தில் செயல்படும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் திரட்டப்பட்டுள்ளது.

இதில், 3 ஆயிரத்து 133 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன.இங்கு, தொடக்க வகுப்புகளுக்கு தனியாகவும், உயர்நிலை அல்லது மேல்நிலை வகுப்புக்கு தனியாகவும் என, இரு தலைமையாசிரியர்கள் உள்ளனர்.ஒரே வளாகத்தில் செயல்படும் இரு பள்ளிகளுக்கு, இரு தலைமையாசிரியர்கள் இருப்பதால், நிர்வாக ரீதியாக, சில சிக்கல்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

எனவே, ஒரு தலைமையாசிரியரின் கீழ், அனைத்து வகுப்புகளையும் இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கோவையில், 53 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன.

இங்குள்ள தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களை, கற்பித்தல் பணிகளில் ஈடுபடுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதோடு, ஒரே தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் மூலம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

சி.இ.ஓ.,க்கள் கருத்துசென்னையில் சமீபத்தில் நடந்த, முதன்மை கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில், முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் இது குறித்து விவாதித்துள்ளார்.தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில், இனி ஒரு தலைமையாசிரியர் பணியிடம் மட்டுமே உருவாக்கலாம் என, இக்கூட்டத்தில் சி.இ.ஓ.,க்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதை கல்வித்துறை பின்பற்ற முடிவெடுத்துள்ளது.

அதிகாரபூர்வ தகவல் வந்தால் தெரியும்'மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கேட்டபோது,''கோவையில் 53 பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன. இதன் பட்டியலை, வட்டார வாரியாக, இயக்குனரகத்துக்கு சமர்ப்பித்துள்ளோம். தலைமையாசிரியர்களை கற்பித்தல் பணிகளில், ஈடுபடுத்துவது குறித்து, அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டால் தான் தெரியவரும்,'' என்றார்.

நீதிக்கதை :



நட்புக்கு ஏங்கிய புலி!


மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் உள்ள ஓர் அடர்த்தியான காடு. அங்கே பெரிய மரங்களும் குகைகளும் பசுமையான புல்வெளிகளும் நிறைந்து இருந்தன.

பறவைகள் அங்கும் இங்கும் பறந்துகொண்டு கத்தும் சத்தம், விலங்குகள் குதித்தும் ஓடும் ஓசை, அருவியில் தண்ணீர் விழும் சத்தம் எல்லாம் சேர்ந்து ரம்மியமானா சூழலை உருவாக்கியிருந்தது.

மலை உச்சியில் ஒரு குகை. அந்தக் குகையில் புலி ஒன்று தனியே வசித்துவந்தது. அதுக்கு நண்பர்கள் என்று யாரும் கிடையாது. அதைப் பார்த்தாலே காட்டில் உள்ள விலங்குகள் எல்லாம் சிதறி ஓடிவிடும். அதனால் யாரிடமும் சிரித்துப் பேசச்கூட முடியவில்லை. இதை நினைத்து புலி மிகவும் வருந்தியது. தனக்கு யாரும் நண்பராக வர மாட்டார்களா என்று ஏங்கியது.

அன்று வேட்டையாடச் செல்லும் வழியில், வேடன்  வைத்த பொறியில் மான் ஒன்று சிக்கியிருப்பதைப் பார்த்தது புலி.  உடனே அதைக் காப்பாற்ற முடிவெடுத்தது. புலி அருகில் வருவதைக் கண்ட மான், பயத்தில் நடுங்கியது. அருகில் சென்ற புலி, பொறியை ஒரே அடியில் அடித்து உடைத்தது. மான் வெளியே வந்தது. நிம்மதியாகச் சென்றுவிட்டது புலி.

மான் தன் தவறான எண்ணத்தை நினைத்து வருந்தியது. புலியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முடிவு செய்தது. மறுநாள் புலியின் குகைக்குச் சென்றது.

மானைக் கண்டதும் புலிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அருகில் சென்றால் பயப்படும் என்பதால், உள்ளே அமர்ந்தபடியே வந்த காரணத்தைக் கேட்டது.

“நேற்று உன்னைத் தவறாக நினைத்துவிட்டேன். அதற்கு மன்னிப்பும் என்னைக் காப்பாற்றியதற்கு நன்றியும் சொல்ல வந்தேன்” என்றது மான்.

“நன்றி எல்லாம் எனக்கு வேண்டாம். என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டால் போதும்” என்றது புலி.

மானுக்குத் திக்கென்றது.

“உனக்கு நம்பிக்கை வரும்போது என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டால் போதும். நீ கிளம்பு” என்றது புலி.

“இல்லை, இப்போதே உன்னை நண்பனாக ஏற்றுக்கொள்கிறேன். நான் சாப்பிடப் போகிறேன். நீயும் வருகிறாயா?” என்று கேட்டது மான்.


புலியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே மானுடன் கிளம்பியது. இதைப் பார்த்த சில விலங்குகள் ஆச்சரியமடைந்தன. சில விலங்குகள் மானை எச்சரித்தன. இன்னும் சில விலங்குகள் மானுக்கு மரியாதை அளித்தன.

நாட்கள் சென்றன. அன்று மான் காட்டில் தனியாக மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பக்கம் வந்த சிங்கம், நல்ல வேட்டை என்று நினைத்தது. மெதுவாக மானை நோக்கிச் சென்றது. அப்போது மானைத் தேடிக்கொண்டு வந்த புலி, சிங்கத்தைப் பார்த்துவிட்டது. மானைக் காப்பாற்றும் அவசரத்தில் பாய்ந்துவந்தது.

சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த மான், புலிதான் தன்னைத் தாக்க வருகிறது என்று எண்ணியது. சட்டென்று தாவிக் குதித்து ஓடியது.

மானைத் தப்பிக்க விட்ட புலி மீது சிங்கத்துக்குக் கோபம் வந்தது. உடனே சண்டைக்கு வந்தது. புலியும் சிங்கமும் சண்டையிடுவதைப் பார்த்து மற்ற விலங்குகள் ஆச்சரியமடைந்தன.

“நண்பனுக்காகப் புலி எப்படிச் சண்டை போடுகிறது!” என்றது குரங்கு.

“நண்பன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். இதை உணராத மான் பயந்து ஓடிவிட்டது” என்றது யானை.

நீண்ட நேரச் சண்டையில் சிங்கம் காயமடைந்து, களைப்புற்றது.

“என் நண்பன் என்று தெரிந்தும் இப்படி ஒரு காரியத்தைச் செய்ய நினைத்த உனக்கு, இனி இந்தக் காட்டில் இடமில்லை. இப்பொழுதே ஓடிவிடு” என்று கோபத்துடன் கூறியது புலி.

விட்டால் போதும் என்று சிங்கமும் ஓடிவிட்டது.

நடந்ததை அறியாத மான் தன் கூட்டத்தினரிடம் சென்று,  புலியைத் திட்டித் தீர்த்தது.

“நடந்தது என்ன என்பதை அங்கே இருந்து பார்த்திருந்தால் உனக்குத் தெரிந்திருக்கும். நட்புக்காகச் சிங்கத்திடம் சண்டையிட்டது. புலிக்கும் காயம் அதிகம். பாவம் குகையில் தனியாக வலியோடு போராடிக்கொண்டிருக்கும்” என்றது ஒரு புள்ளிமான்.

“ஐயோ… தவறாக நினைத்துவிட்டேனே. இதோ மூலிகையை எடுத்துக்கொண்டு, புலியைச் சந்திக்கிறேன்” என்று கிளம்பியது மான்.

புலி வலியில் துடித்துக் கொண்டிருந்தது. மருந்திட்ட மான், “என்னை மன்னித்துவிடு. வேகமாக நீ வருவதைப் பார்த்தவுடன், நீ என் நண்பன் என்பதை மறந்து ஓடிவிட்டேன். இனி இப்படி நடக்க மாட்டேன்” என்றது மான்.

“நான் உயிரினங்களைக் கொன்று திங்கும் இனத்தைச் சேர்ந்தவன்தான். அதற்காக நண்பனைக் கொல்வேனா? உன்னோடு நட்பு உருவான நாளில் இருந்து இன்றுவரை உன்னை மட்டுமில்லை, மான்கள் இனத்தையே நான் கொல்வதில்லை. நட்பு என்ற பெயரில் கேடு நினைக்க என்னால் முடியாது. என்னுடன் சண்டையிட்டு நீ சென்றாலும் கூட உன்னையோ, உன் இனத்தையோ நான் வேட்டையாட மாட்டேன். அதனால் என் மீது எப்போதும் உனக்குச் சந்தேகம் வேண்டாம்” என்றது புலி.


மானும் புலியும் மீண்டும் ஒன்றாகச் சுற்ற ஆரம்பித்தன.

பிளஸ் 1 அகமதிப்பீட்டில், 'பூஜ்யம்' ஆசிரியர்கள் விளக்கம் தர, 'நோட்டீஸ்' :

பிளஸ் 1 மாணவர்களுக்கு, அகமதிப்பீட்டில், பூஜ்யம் மதிப்பெண் அளித்தது ஏன்' என, பள்ளி தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க, இயக்குனரகம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.தமிழகத்தில், 2018 மார்ச்சில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொது தேர்வு அமலுக்கு வந்தது. இந்த தேர்வில், ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 200 மதிப்பெண் என்பது, 100 ஆக குறைக்கப்பட்டது.மேலும், பாடவாரியாக, 10 மதிப்பெண் அகமதிப்பீடாக வழங்கப்படுகிறது. தொழிற்கல்வியில், செய்முறை இருக்கும் பாடங்களுக்கு மட்டும், தலா, 25 மதிப்பெண், அகமதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது.இந்நிலையில், 2017 - 18ம் கல்வியாண்டில் படித்த, பிளஸ் 1 மாணவர்களில், 20 சதவீதம் பேருக்கு, அகமதிப்பீட்டு மதிப்பெண், ஒன்று கூட வழங்காமல், பூஜ்யமாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால், மாணவர்களின் மொத்த மதிப்பெண் குறைந்ததும், தேர்ச்சி பெறாததும் தெரிய வந்துள்ளது.பள்ளி வருகை பதிவு, 75 சதவீதம் இருந்தால், அந்த மாணவருக்கு, ஒரு மதிப்பெண்ணை, அகமதிப்பீட்டு மதிப்பெண்ணாக வழங்கலாம் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த ஒரு மதிப்பெண்ணையும், பல மாணவர்கள் பெறவில்லை. அப்படியென்றால், 20 சதவீத மாணவர்கள், 75 சதவீத நாட்கள் பள்ளிக்கு வராமல், தேர்வை எழுதினார்களா என்ற சந்தேகம்எழுந்துள்ளது.இது குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள்வாயிலாக, தலைமைஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனரகம், நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.அதில், பல மாணவர்களுக்கு, பிளஸ் 1 தேர்வில், அக மதிப்பெண் பூஜ்யம் என, நிர்ணயித்தது ஏன்; 75 சதவீதம் வருகை பதிவு இல்லாத மாணவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்களா; பூஜ்யம் வழங்கிய ஆசிரியர்கள் யார் என்ற விபரத்தை தாக்கல் செய்யும்படிகூறப்பட்டுள்ளது

ஜனவரி மாத பள்ளி நாட்காட்டி:

இந்தாண்டு 29 வகை தேர்வுகள்: டி.என்.பி.எஸ்.சி., பட்டியல் :

குரூப் - 1, குரூப் - 2, வி.ஏ.ஓ., உட்பட, 29 வகை தேர்வுகள், இந்த ஆண்டு நடத்தப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள போட்டி தேர்வுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 4,365 காலியிடங்களை நிரப்பும் வகையில், 29 போட்டி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.அவற்றில் சில தேர்வுகள்:= துணை கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரித்துறை உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளுக்கான, குரூப் - 1 தேர்வு, சமூக நலத்துறை பள்ளிகளுக்கான, உதவி கண்காணிப்பாளர் தேர்வு. இளநிலை ரசாயன வியல், உதவி ரசாயனவியலாளர் பதவிக்கான தேர்வு என, நான்கு தேர்வுகள், இந்த மாதம் அறிவிக்கப்படும்= மீன்வள துறை ஆய்வக உதவியாளர், வேலைவாய்ப்பு துறையில், சுருக்கெழுத்து உதவி பயிற்சி அதிகாரி, நெடுஞ்சாலை துறை இளநிலை வரைவு அதிகாரி, இன்ஜினியரிங் பணி போன்றவற்றுக்கு, பிப்ரவரியில் தேர்வு அறிவிக்கப்படுகிறது= அண்ணா நுாலக உதவி நுாலகர், அரசு சட்ட கல்லுாரி நுாலகர், மருத்துவ பணிகள் கழகத்தில் மருந்தாய்வாளர், இளநிலை ஆய்வு அலுவலர் பதவிகளுக்கு, மார்ச்சில் தேர்வு அறிவிக்கப்படும்= 
தலைமை செயலக பணியில், மொழி பெயர்ப்பாளர், இன்ஜினியரிங் பணி. அருங்காட்சியக காப்பாட்சியர், உதவி சுற்றுலா அதிகாரி போன்ற பதவிகளுக்கான தேர்வுகள்,ஏப்ரலிலும் நடக்கும். குரூப் - 2, தடயவியல் துறை இளநிலை அறிவியல் அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகள், மே மாதமும் அறிவிக்கப்படுகின்றன= கிராம நிர்வாக அலுவல ரான, வி.ஏ.ஓ., உதவி புவியியலாளர், கெமிக்கல் இன்ஜினியர் பதவி களுக்கு, ஜூன் நடக்கும். தமிழக தொழில்துறையில் கண்காணிப்பாளர் பதவிக்கு, ஜூலை; தமிழக சட்ட கல்வி துறையில், உடற்கல்வி இயக்குனர் பதவிக்கு, ஆகஸ்டிலும் தேர்வு அறிவிக்கப்பட உள்ளது= தமிழக கருவூல துறையில் கணக்கு அதிகாரி பதவிக்கு, நவம்பர்; வன துறை உதவி வன காப்பாளர் பதவிக்கு, டிசம்பரிலும் தேர்வுகள்அறிவிக்கப்பட உள்ளன.தேர்வு இணைப்பு இல்லைடி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 மற்றும் 2ஏ தேர்வுகள் ஒரே மாதத்தில் குறிப்பிட்டிருப்பது, தேர்வர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு, குரூப் - 4 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வுகள் ஒருங்கிணைத்து நடத்தியதும், இக்குழப்பத்துக்கு முக்கிய காரணம்.இது தொடர்பாக, சமூக வலைதளங்களில், குரூப் - 2, 2ஏ தேர்வுகள் இணைக்கப்பட்டு விட்டதாகவும், முதன்மை தேர்வுகளுக்கு பதிலாக இரண்டுக்கும் பொதுவாக முதல்நிலை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் தகவல் பரவியுள்ளது.டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமாரிடம் கேட்டபோது, ''இரண்டு தேர்வுகளையும் ஒரே மாதத்தில், நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால், தேர்வுகளை ஒருங்கிணைக்கும் எவ்வித திட்டமும் தற்போது இல்லை. மாற்றம் இருப்பின், முன்கூட்டியே தெரிவிப்போம்,'' என்றார்.

தெர்மாக்கோல்' பயன்படுத்த மாணவர்களுக்கும் தடை :

பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ளதால், பள்ளி மற்றும் கல்லுாரிகளில், 'தெர்மாக்கோல்' பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் நேற்று முதல், பிளாஸ்டிக் தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளது.ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பாலித்தீன், பிளாஸ்டிக், தெர்மாக்கோல் உட்பட, மொத்தம், 14 வகை பொருட்களை தயாரிக்கவோ, விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது. தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளதா என, உள்ளாட்சி அமைப்புகள் வழியாககண்காணிக்கப்படுகிறது.இந்த தடைப்படி, எளிதில் மக்காத தெர்மக்கோல் அட்டைகளையும் பயன்படுத்தக் கூடாது. ஆனால், பெரும்பாலான பள்ளிகள், கல்லுாரிகளில், பாடங்களின் செய்முறை பயிற்சிகளுக்கு, தெர்மாக்கோல் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, ஆர்கிடெக்ட் படிக்கும் மாணவர்களுக்கு, தெர்மாக்கோல் அதிகம் பயன்படுகிறது.தற்போது தடை சட்டம் அமலாகியுள்ளதால், வரும் நாட்களில், பள்ளி, கல்லுாரிகளின் செய்முறை திட்டங்களுக்கு, கனத்த காகிதம், தடிமனான அட்டைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால், பள்ளிகளின் செய்முறை பயிற்சிகளுக்கு மட்டும், தெர்மாக்கோல் பயன்பாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க, ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, தெளிவான வழிகாட்டுதல் தேவை என, கல்வி நிறுவனங்கள் தரப்பில், கோரிக்கை எழுந்துள்ளது.அதேநேரம், தெர்மாக்கோலுக்கு விலக்கு அளித்தால், அந்த சலுகையை, அலங்கார பொருட்களுக்கான வணிக பயன்பாட்டுக்கு, தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

நீதிக்கதை



தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.
“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து ரொட்டியை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து ரொட்டிகளை கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.

மறுநாள், வேலைக்காரன் ரொட்டிக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய ரொட்டியை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த ரொட்டியை பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்  என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் வாழ்வில் பல நன்மைகளை பெறலாம்.

3ஆம் வகுப்பு 3ஆம் பருவம் தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவர்களுக்கான கடின மற்றும் புதிய வார்த்தைகள்.

4ஆம் வகுப்பு 3ஆம் பருவம் தமிழ் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கான புதிய மற்றும் கடின வார்த்தைகள்.

5 ஆம் வகுப்புகளுக்கான தமிழ் மூன்றாம் பருவ கடின வார்த்தைகள்:

Mphil part time க்கு ஊக்க ஊதியம் உண்டா? - CM CELL Reply!

இரயில்வே அறிவித்துள்ள 14033 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு :

RAILWAY (RRB) RECRUITMENT 2019 |இரயில்வே அறிவித்துள்ள 14033 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு |பதவி : JUNIOR ENGINEER உள்ளிட்ட பல பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.01.2019 | பொறியியல் பட்டதாரிகளும், கணினி அறிவியல் முடித்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.

அனுமதியின்றி உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு பின்னேற்பு அனுமதி:பள்ளிக்கல்வித் துறை விரைவில் அரசாணை வெளியீடு

ஆசிரியர்களின் உயர்கல்விக்கு பின்னேற்பு அனுமதி வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழகத்தில் 38 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் உள்ளன. இதில் 1.5 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆசிரியர்கள் உயர்கல்வி பயில்வதற்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக பள்ளிக்கல்வி பணியாளர் இயக்குநரகத்தில் முன்அனுமதி பெற்று வந்தனர்.

இந்த முறையை மாற்றி, ஆசிரியர்களின் பணியிட மாறுதல் மற்றும் உயர்கல்விக்கான முன்அனுமதியை வழங்க முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி கடந்த மே மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.அதேநேரம், தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளாக உயர்கல்விக்கு அனுமதி கோரி விண்ணப்பித்த 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இன்னும் ஒப்புதல் தரப்படவில்லை. 2018 ஜூன்மாதத்துக்கு முந்தைய விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்க முதன்மை கல்வி அதிகாரிகள் மறுக்கின்றனர். இனிமேல், முன்அனுமதிக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று பணியாளர்இயக்குநரகமும் கைவிரிப்பதால், உயர்கல்வியை முடித்துவிட்ட பல ஆசிரியர்கள் தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

ஆசிரியர்களின் உயர்கல்விக்கு தமிழக அரசு பின்னேற்பு அனுமதி வழங்க வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர் சந்திரன் கூறியதாவது:ஆசிரியர்கள் ஒரே பதவியில் 10 ஆண்டுகள் நிறைவு செய்தால் தேர்வு நிலை, 20 ஆண்டுகள் முடித்தால் சிறப்பு நிலை வழங்கப்படுகிறது. அஞ்சல் வழியில் உயர்கல்வி படிக்க துறை அனுமதி பெற வேண்டும். உயர்கல்வி பயில முன்அனுமதி பெறும் அதிகாரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பிறகு, பல குழப்பங்கள் ஏற்படுகின்றன.

இதனால் சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் உயர்கல்விக்கான முன்அனுமதி பெறும் ஆசிரியர்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.ஒவ்வொரு மாவட்ட கல்விஅலுவலகமும் பல நடைமுறைகளை பின்பற்றுகின்றன. தேவையற்ற காரணங்களை கூறி விண்ணப்பங்களை திருப்பி அனுப்புகின்றன. இதனால் ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பலன்கள் தடைபட்டுள்ளன. எனவே, உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு பின்னேற்பு அனுமதி வழங்க அரசு முன்வர வேண்டும். இதை ஜாக்டோ ஜியோவின் 7 அம்ச கோரிக்கைகளிலும் இணைத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்திஜாக்டோ ஜியோ விரைவில் போராட்டம் நடத்த உள்ளது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 7-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதில் நல்ல முடிவு கிடைக்காவிட்டால், போராட்ட அறிவிப்பை வெளியிட ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது.இந்த நிலையில், ஆசிரியர்களை சமாதானப்படுத்தும் விதமாக உயர்கல்விக்கு பின்னேற்பு அனுமதி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிகல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் உயர்கல்விக்கு முன்அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர். அதில் 70 சதவீதம் பேர் அரசின் அனுமதி பெறாமலேயே தங்கள் உயர்கல்வியை முடித்துவிட்டனர். இதனால், அவர்களுக்கான பலன்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுக்கு வந்த கோரிக்கைகளை பரிசீலித்து, அனுமதி இல்லாமல் உயர்கல்வி படித்தவர்களுக்கு பின்னேற்பு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பலன் பெறுவார்கள். இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த ஆப்ரஹாம் லிங்கன், அமெரிக்க மக்களின் தலைவர் ஆவதற்கு முன்பு, அரசு அதிகாரி ஒருவரால் சில அதிகாரிகளின் முன்னிலையில் "குரங்கு மூஞ்சி" என்று அவமான படுத்த பட்டார்...

சாதாரண குடும்பத்தில் பிறந்த ஆப்ரஹாம் லிங்கன், அமெரிக்க மக்களின் தலைவர் ஆவதற்கு முன்பு, அரசு அதிகாரி ஒருவரால் சில அதிகாரிகளின் முன்னிலையில்  "குரங்கு மூஞ்சி" என்று அவமான படுத்த பட்டார்...



அப்போது அதை பெரிதாக எடுத்து கொள்ளாத லிங்கன் தான், குடியரசு தலைவர் ஆன உடனேயே, தன்னை திட்டிய அந்த அதிகாரிக்கு, மிக முக்கியமான பொறுப்பினையும் பதவி உயர்வையும் வழங்கி கௌரவித்தார்...

அவரிடம் காரணம் கேட்கப்பட்டது...

" அவர் என்னை அவமான படுத்தினாலும், அதனை என் நெஞ்சுக்குள் கொண்டு செல்லவில்லை.

ஆனால் காயம் பட்டது நிஜம்தான்.

அந்த காயத்திற்கான ஒரே மருந்து என்னை மேலும் தகுதி படுத்தி கொள்வதே என்று நினைத்து, என் முயற்சியாலும் உழைப்பாலும், இந்த நிலைக்கு நான் வந்தேன்.

இதற்கு காரணம் அவரின் அந்த அவமான படுத்திய செயலே.

அதன் நன்றி கடனாக அவருக்கு இந்த பரிசினை வழங்கியுள்ளேன் " என்று கூறினார்...

லிங்கன் மட்டுமல்ல, வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் தன் வாழ்வில், பல நேரங்களில் அவமான படுத்த பட்டவர்களே...

ஆனால் அவைகளை அவர்கள் பெரிதாக எடுத்து கொள்வதே இல்லை...

நம்மை அவமானபடுத்தியவரை பழி வாங்குதல் என்பது அறிவீனம்...

தம்மை அவமானபடுத்தியவரே, வருந்தும்படி வாழ்ந்து காட்டுதலே, நம் வாழ்வின் மூலதனம்...

முட்கள் நிறைந்த ரோஜா தான், மலர்களின் ராஜாவாக கருத படுகிறது...

வாங்க...

அவமானங்களை உரமாக்கி,
நம் வாழ்க்கையை வரமாக்கி,
வளமாக வாழ்ந்து தான்
பார்ப்போமே...

இறைவன் கணக்கு:* ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் இரண்டு வழிப் போக்கர்கள் அமர்ந்திருந்தனர்.

இரவு நேரம்…, பெருத்த மழை வேறு...,

அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார்.

வந்தவர் "நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார்.

அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள்.


சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா?
என்றார் வந்தவர்.

இருவரில் முன்னவர் சொன்னார்,
என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார்.

இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர்,

ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள்,
இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார்.

 மூன்றாம் நபர், இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன், என்றார்.
( தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!)

நீங்கள் உங்கள் ரொட்டிகளை,
ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள்.
இப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்!
நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார்.

இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்…

ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்...

பொழுது விடிந்தது, மழையும் நின்றது.

மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது, உங்கள் உதவிக்கு மிக்க நன்றி,  என்று சொல்லி எட்டு தங்க நாணயங்களை கொடுத்து,
நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள், என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.

மூன்று ரொட்டிகளை கொடுத்தவர்,
அந்த காசுகளை சமமாகப்பிரித்து,
ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார்.

மற்றவர் இதற்கு சம்மதிக்கவில்லை.

மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்.
ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.(3:5)

மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை,
என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும்,
நான் பங்கிட சம்மதித்தேன்…

நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது.
அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது, என்றாலும் பரவாயில்லை, சமமாகவே பங்கிடுவோம் என்றார்.

சுமுகமான முடிவு எட்டாததால், விஷயம் அரச சபைக்கு சென்றது.
அரசனுக்கு யார் சொல்வது சரி, என்று புரியவில்லை.
நாளை தீர்ப்பு சொல்வதாய் அறிவித்து, அரண்மனைக்கு சென்றான்.

மன்னருக்கு இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது…
மன்னருக்கு, கனவில் கடவுள் காட்சி அளித்து, தீர்ப்பும்,விளக்கமும் தந்தார். கடவுள் சொன்ன தீர்ப்பும், விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அடுத்த நாள் சபை கூடியது.

மன்னர் இருவரையும் அழைத்தார்.

மூன்று ரொட்டிகளை கொடுத்தவருக்கு ஒரு காசும்,
ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்.

ஒரு காசு வழங்கப்பட்டவர், "மன்னா...!  இது அநியாயம்.
அவரே எனக்கு மூன்று காசுகள் கொடுக்க ஒப்புக் கொண்டார்" என்றார்.

அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள்.
அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது.

அவன் தந்தது பதினைந்து துண்டுகள்.
அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது.

ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி.
இதற்கு இதுவே அதிகம் .

அவர் தருமம் செய்தது ஏழு துண்டுகள்.
ஒரு துண்டுக்கு ஒரு காசு வீதம் பிரித்துக் கொடுத்திருக்கிறேன்(1:7) என்றார்...

ஆம் ! கடவுளின் கணக்கு இப்படி துல்லியமாகத்தான் இருக்கும்…

நீங்கள் இழந்ததை எல்லாம் தருவது அல்ல, அவன் கணக்கு...

எது உங்களுக்கு தகுதியானதோ அதுதான் உங்களுக்கு.

இது கடவுளின் கணக்கு...

இது கடவுளின் ஏட்டு கணக்கு இல்லை...

தர்ம புண்ணிய கணக்கு...!

நாம் செய்யும் செயலில் இறைவன் இருக்கிறார் என்பதை மறவாதீர்கள்.
முழுமையாக தன்னை சேவைக்கு அர்பணித்துக் கொண்டவர்களை இறைவன் அறிவான்.

31/12/18

மனசே, மனசே குழப்பம் என்ன!: பகிர்ந்து கொள்வதே பாதுகாப்பை தரும்!



மன அழுத்தம் என்பதற்கான சரியான அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். காரணம், தினசரி வாழ்க்கையில், அந்தந்த நேரத்தில், யார் மீதேனும் கோபம், எதன் மீதாவது வெறுப்பு, ஏமாற்றம் வந்தால், உடனே, 'பயங்கர டிப்ரஷ்ன்னா இருக்கு' என்று சொல்வது சகஜமாகி விட்டது. இவையெல்லாம், வெளிக்காரணிகளால், தற்காலிகமாக ஏற்படும் எதிர்மறை உணர்வுகள்.
மருத்துவ ரீதியில், மன அழுத்தம் என்பது இதைக் காட்டிலும், சிக்கலான, உடனடியாக கவனிக்க வேண்டிய விஷயம். நமக்கு நெருக்கமானவர்கள், சோகமாக, கவலையாக இருந்தால், என்ன காரணம் என்பதை அக்கறையாக விசாரிக்க வேண்டியது முக்கியம். 
பகிர்ந்து கொள்ளுவதே, பாதுகாப்பு உணர்வைத் தரும். தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு, இதே மனநிலையில் இருந்து, உடல் நிலையிலும் ஏதாவது மாற்றங்கள் தெரிந்தால், கண்டிப்பாக மனநல ஆலோசனை பெறுவது அவசியம்.

மன அழுத்தத்திற்கான பொதுவான அறிகுறிகள்

* வெளியில் செல்லாமல், வீட்டிலேயே அடைந்து கிடப்பது.

* எதிலும் ஆர்வம் இல்லாமல், நண்பர்கள், குடும்பத்தினருடன் விலகியே இருப்பது.

* கவனமின்மை; வழக்கமாகச் செய்யும் பொழுதுபோக்குகளை தவிர்ப்பது.

* குற்ற உணர்வு, எரிச்சல், சோகம், விரக்தி, தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது.

* உடல் ரீதியில் சோர்வு, தலைவலி, தசைகளில் வலி, இறுக்கம், துாக்கமின்மை, செரிமானப் பிரச்னை, காரணம் இல்லாமல் உடல் எடை குறைவது.
இவற்றில் ஒன்றோ, ஒன்றுக்கு அதிகமான பிரச்னைகளோ மன அழுத்தத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.


என்ன செய்ய வேண்டும்?

மன அழுத்தம் இருப்பது உறுதி செய்யப்பட்டால், மனநல ஆலோசனையுடன் மருந்துகளும் தேவைப்படும். 
மன அழுத்தம், எந்த அளவு தங்களை பாதிக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக அல்லது அதே வலியை உடலிலும் உணர விரும்பி, கிள்ளுவது, அடிப்பது என்று தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்வர். இதை புரிந்து, அந்த மனநிலையில் இருந்து வெளியில் வர அவர்களுக்கு உதவ வேண்டியது அவசியம்.
மனநலம் தொடர்பான எந்த பிரச்னை வந்தாலும், இது குறித்து, வெட்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

 இதயத்தில் பிரச்னை என்றால், எந்தத் தயக்கமும் இல்லாமல், உடனடியாக டாக்டரைப் பார்க்கிறோம். மன அழுத்தம் என்பது, மூளையில் சுரக்கும் வேதிப் பொருட்களில் ஏற்படும் மாற்றத்தால் வரும் பிரச்னை.
முறையான ஆலோசனை, மருத்துவ சிகிச்சையோடு, யோகா, தியானம், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கத்தில் அவசியமான மாற்றங்களை செய்தால், மன அழுத்தத்தில் இருந்து, முற்றிலும் வெளியில் வரலாம்.

டாக்டர் அன்னா சாண்டி
மனநல ஆலோசகர், 
லிவ் லவ் லைப் பவுண்டேஷன், பெங்களூரு.

கல்வித்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் பள்ளிகளை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்




 பள்ளிக் கல்வித்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில், தொடக்கப் பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள்  ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வெளியிட்ட அறிக்கை:

பள்ளிக் கல்வித்துறையில் இருந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு 26ம் தேதி  ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளின் அருகில் உள்ள தொடக்க  மற்றும் நடுநிலைப் பள்ளிகளை கண்டறிந்து, பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளருக்கு பட்டியல் அனுப்ப வேண்டியுள்ளதால், 28ம் தேதிக்குள் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் பட்டியல்களை மாவட்ட முதன்மைக் கல்வி   அலுவலர்கள் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்மாதிரிப் பள்ளிகள் என்ற பெயரில் எல்கேஜி முதல் 10ம் வகுப்பு, எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளியாக இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. இது கிராம ஏழை மாணவர்களை மிகவும் பாதிக்கும். ஒரே பள்ளியாக  இணைத்தால், 5 கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளிதான் இயங்கும் நிலை ஏற்படும். இதனால் சிறுவர்கள் தொலை தூரம் செல்ல முடியாத நிலை ஏற்படும். தற்ேபாதுள்ள நிலையில், ஆசிரியர்கள் வீடுவீடாக சென்று பள்ளிகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நிலை உள்ளது.

ஒன்றாக இணைத்தால் பெற்றோர் தங்கள்  குழந்தைகளை தொலை தூர பள்ளிகளுக்கு அனுப்புவார்களா என்ற கேள்வி எழுகிறது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் ஒரு கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். ஒன்றாக இணைக்கும் திட்டத்தி–்ன் மூலம் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்துக்கு  எதிரானதாக அமைந்துவிடும். மேலும் இடைநிற்றலும் அதிகரிக்கும். இது ஏழை, எளிய மாணவர்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகிவிடும்.

இது  தவிர அரசுப் பள்ளிகளை ஒன்றாக இணைத்தால் அது தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக அமையும். அதனால் இந்த திட்டத்தை திரும்ப பெறவேண்டும். சீர் திருத்தம் என்ற பெயரில் ஆசிரியர்கள் பணியிடத்தை குறைக்க அரசு  துடிக்கிறது. இது மாணவர்கள் எதிர்காலத்தை பாதிக்கும்.  எனவே உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்

6வது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகளை களையப்பட அமைக்கப்பட்ட ஒரு நபர்குழு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் மறுக்கப்பட்டதற்கு கூறிய காரணம்

                         

6வது ஊதியக்குழுவில் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களையப்பட அமைக்கப்பட்ட திரு.ராஜீவ்ரஞ்சன் ஒரு நபர்குழு தனது அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கிணையான ஊதியம் மறுக்கப்பட்டதற்கு கூறிய காரணம்...

1.எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள்... (அதற்காக, அவர்கள் செய்யும் வேலைக்கும், தகுதிக்கும், திறமைக்குந்தான் ஊதியமே தவிர எண்ணிக்கைக்கு அல்ல.)

2.கல்வித்தகுதி 10 ம் வகுப்புடன் கூடிய ஆசிரியர் பயிற்சி... 12 ம் வகுப்பு படிக்கவில்லை அதனால் பத்தாம் வகுப்பு கல்வித் தகுதிக்குறிய ஊதியம் 5200-2800 போதும்...


(கலந்தாய்வில் எங்களது PLUS TWO CERTIFICATE ஆ VERIFY பண்ணித்தானே பணியில் சேர்த்தீர்கள்.)

மேலும் இடைநிலை ஆசிரியர்கள் கிராமப்புறத்தில் வேலை செய்கிறார்கள் அங்கு விலைவாசி குறைவு அதனால் அவர்களுக்கு அந்த ஊதியம் போதும்... அட அட அட என்னாவொரு விளக்கம்..... அற்புதம். கிராமப்புறக் கடையில் கூட இடைநிலை ஆசிரியரா என்று கேட்டுத்தான் அவர்களுக்கு மட்டும் விலை குறைவாக கொடுப்பார்கள் போல.....

இடைநிலை ஆசிரியர்கள் 12 ம் வகுப்பு படிக்கவில்லை அதனால் 5200-2800 இந்த ஊதியம் போதும் என்று சொல்லியிருக்கிறது அறிக்கை...

அதற்கு ஆசிரியர் சங்கங்கள் என்ன பண்ணியிருக்கனும்... தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பேசும் அளவிற்கு சர்வ வல்லமை படைத்திருப்பவர்களும், இயக்குநர் அலுவலகத்தில் நமக்கு மட்டும் தனி மரியாதை என்று கூறிக் கொள்பவர்களும் (அரசுக்கு உண்மை நிலையினை எடுத்துக்கூறி கோரிக்கையை வென்று கொடுத்திருப்பது என்ன அவ்வளவு கஷ்டமான வேலையா என்ன)


திரு.ராஜீவ்ரஞ்சனை நேரில் சந்தித்து நீங்கள் அறிக்கையில் கூறியிருப்பது மிகவும் தவறு இடைநிலை ஆசிரியர்களின் கல்வித்தகுதி 10 Th,12Th டன் கூடிய Diploma in Teacher Education, So அவர்களுக்கு 9300-4200 மத்திய அரசுக்கிணையான ஊதியம் மறுக்கப்பட்டிருக்கிறது . அவர்களுக்கு சரியான ஊதியத்தை வழங்கிடுங்கள் என்று அமைச்சர் மற்றும் முதல்வரை சந்தித்துக் கூறி அல்லது வலுவான போராட்டத்தினை முன்னெடுத்து கோரிக்கையை நிறைவேற்றி தந்திருந்தால் நாங்கள் எதுக்கு இப்படி தன்னந்தனியாக (எண்ணிக்கையில் 100000 பேர் இருந்தும்) 9300-4200 கூட கேட்காமல் 8370 கொடுத்தால் கூட போதும் என்று 6 நாட்களாக போராடப் போகிறோம்...


இறுதியாக ஒன்று இடைநிலை ஆசிரியர்களை கடந்த 6 நாட்களாக கடும் பனிப்பொழிவில், கொசுக்கடியில், நடுவீதியில் உறங்கவிட காரணமாக இருந்த அனைவருக்கும் சரியான நேரத்தில் பதில் சொல்வோம்.... இனி ஜனவரி 7 ம் தேதி நடக்கப் போவதையாவது அலசி ஆராய்ந்து என்ன நடக்கப் போகிறது, யாருக்கு பலன் கிடைக்கப் போகிறது , இடைநிலை ஆசிரியர்களுக்கு என்ன கிடைக்கிறது என்று நடப்பதை உற்றுநோக்கி விழித்துக் கொள்ளுங்கள்       

மூடப்படும் அபாயத்திலிருந்து பிழைத்தெழுமா அரசுப் பள்ளிகள்?




சமூகத்தின் அரசியல், பொருளியல், கல்வி செயல்பாடுகளில், சமூகத்தின் அரசியல், பொருளியல், கல்வி செயல்பாடுகளில், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமயச் சார்பின்மை, சமூக, அரசியல், பொருளாதார நீதி போன்றவை பிணைந்திருக்க வேண்டும். அறநெறிகளையும், விழுமியங்களையும் கல்வியின் மூலமே பயிற்றுவிக்க முடியும். ஆனால், நமது கல்வி அமைப்பில் இந்த நோக்கங்கள் படிப்படியாக தேய்ந்து வருகின்றன.

அனைத்து துறைகளிலுமான தனியாரின் வளர்ச்சியின் விளைவே அரசுப் பள்ளிகள் மூடப்படுவதும், தனியார் பள்ளிகள் பெருகுவதற்குமான காரணம்" என்கிறார் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும், திருப்பூர் மாவட்ட அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியருமான சு.மூர்த்தி.

ஜனநாயகத்தின் விளை நிலங்களான அரசுப் பள்ளிகள் மூடப்படும் சூழல் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, சற்றும் யோசிக்காமல் பதில் அளிக்கிறார் சு.மூர்த்தி.

கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் எந்த அளவில் நடைமுறையில் உள்ளது?

2009-ல் குழந்தைகளுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 6 முதல் 14 வரையுள்ள குழந்தைகள் கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது தனியார் பள்ளிகளில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. மழலையர் வகுப்புக்கே ஒன்றிரண்டு லட்சங்கள் வரை கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளும் உள்ளன. 

கல்வி உரிமைச் சட்டம் காகிதச் சட்டமாகவே உள்ளது. மதிப்பெண் மட்டுமே படிப்புக்கான அளவீடாக பார்க்கும் சூழலில், தனியார் பள்ளியில் படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற கருத்து நிலைபெற்றுள்ளது. பிளஸ் 2 வகுப்புக்கு மட்டும் பொதுத் தேர்வு என்றிருந்த நிலையில், தனியார் சுயநிதிப் பள்ளிகள் பிளஸ் 1 வகுப்புப் பாடங்களே அவசியமில்லை எனக் கைவிடப்பட்டது எவ்வளவு பெரிய அபத்தம்?

அரசுப் பள்ளிகளோ, நிர்வாகச் சீர்கேடு, வசதிக் குறைபாடு, மாணவர் எண்ணிக்கை குறைவு என தொடர் தாக்குதல்களில் அகப்பட்டு,ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் 812 கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த மாணவர்கள் பொதுத் தேர்வில் எப்படி தேர்ச்சி பெற முடியும்? இதுபோன்ற காரணங்களே தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கவேண்டிய கட்டாயத்துக்கு பெற்றோரை உள்ளாக்குகின்றன.

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்ட பின் மாணவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதா?

நிச்சயமாக இல்லை. தமிழ் வழியில் சேரும் மாணவர்கள் சிலர், ஆங்கில வழிக்கு மாற்றப்பட்டுள்ளனர். வீட்டிலும், வெளியிலும் பயன்படுத்தாத ஆங்கில மொழி மூலம் கற்பிப்பதால், புரிந்துகொள்ளுதல் இல்லாமல், மனப்பாடம் மட்டுமே நிகழ்கிறது. புதிதாக ஒரு தனியார் பள்ளி திறக்கப்பட்டால், சுற்றியுள்ள 10, 15-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறையும்.

ஆனால், தனியார் பள்ளிகளோ, 20, 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் வாகனங்களில் குழந்தைகளை அழைத்து வந்து விடுகின்றனர். கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, தனியார்பள்ளிகளில் நுழைவு வகுப்புகளில் 25 சதவீதம் ஏழைக் குழந்தைகளைச் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் மாணவர் எண்ணிக்கை குறைந்து, அரசுப்பள்ளிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளை காக்க என்ன வழிகள் உள்ளன?

அனைத்து குழந்தைகளுக்கும், தரமான, சமவாய்ப்பிலான கல்வியை, அவரவர் தாய்மொழியில் கட்டணமின்றி கிடைக்கச் செய்வதே அரசின் கடமை என்பதை எல்லா அரசியல் கட்சிகளும் உணரவேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு பட்ஜெட்டில் 12 % வரை நிதி ஒதுக்கப்படுகிறது. இதில் பாதிகூட கல்விக்கு ஒதுக்கப்படுவதில்லை. எனவே, நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, நவோதயாபோல, மாவட்டந்தோறும் மாதிரிப் பள்ளிகளை அமைப்பதால் மட்டும் பயனில்லை. அரசுப் பள்ளிகள் அனைத்துமே மாதிரிப் பள்ளி நிலைக்கு உயர வேண்டும்.
 - சு.மூர்த்தி.

தாய் மொழிக் கல்வி, ஆளுமைகளை உருவாக்குமா?

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழ் வழியில் படித்துவிட்டு, கல்லூரிபடிப்பை மட்டுமே ஆங்கில வழியில் படிக்கும் நிலைதான் இருந்தது. அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தை மொழிப் பாடமாகப் படித்த பலர், அனைத்து துறைகளிலும் பெரிய ஆளுமைகளாக உருவாகினர்.அப்துல் கலாம், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ தலைவர் கே.சிவன் ஆகியோர் தமிழ் வழிக் கல்வி மூலம் படித்தவர்களே. இவற்றை மக்களிடம் எடுத்துக்கூறி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது கல்வித் துறைதான்.

அரசுப் பள்ளிகள் குறைவதற்கு வேறு காரணங்கள் என்ன?

அதிகாரம் உள்ளவர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்காததே சீர்கேட்டுக்கு வழியமைத்தது. ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும், தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டுமென 2015-ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சமத்துவம், சமூக நீதி பேசுவோரும், அரசுப்பள்ளிகளை மூடக்கூடாது என்று அறிக்கை விடுவோரும், இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்திப் போராட வேண்டும்.

10 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பள்ளிகளாக இருந்தாலும் மூடக்கூடாது என்று சிலர் கோரிக்கை வைக்கின்றனர். இது, சரியான நிர்வாக முறையல்ல. அரசு செலவழிக்கும் பணம், மக்களின் வரிப்பணமே. எனவே, குறைந்தபட்சம் வகுப்புக்கு ஒரு ஆசிரியர், பாடத்துக்கு ஒரு ஆசிரியர், கல்வி இணைச் செயல்பாடுகளுக்கு முழு நேர ஆசிரியர்கள், முழுநேரத் துப்புரவுப் பணியாளர் மற்றும் பாதுகாப்பான குடிநீர், சுகாதாரமான கழிப்பிடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவற்றுடன், மூன்று கிலோமீட்டருக்கு ஒரு நடுநிலைப் பள்ளி அமையும் வகையில், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை இணைப்பது சரியான தீர்வாக இருக்கும்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த காலகட்டத்தில் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து வரும் குழந்தைகளுக்கு அரசின் பொறுப்பில் வாகன வசதி செய்துதர வேண்டும். வளர்ந்த முன்னேறிய நாடுகளில் பின்பற்றப்படும் அருகாமைப் பள்ளி முறை மற்றும் பொதுப் பள்ளி முறைகளைப் பின்பற்றுவதே அனைத்துச் சிக்கல்களுக்கும் நிரந்தரத் தீர்வாக அமையும். தனியார் பள்ளிகளை இந்த முறைக்குள் கொண்டுவர புதிய கல்விச் சட்டம் இயற்ற வேண்டும்.