யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/10/15

தேசிய திறனாய்வு தேர்வு இன்று 'ஹால் டிக்கெட்'

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 8ல் நடக்கிறது. இதற்கான, 'ஹால் டிக்கெட்' 
இன்று வெளியாகிறது.இதுகுறித்து, அரசுத் தேர்வுகள் இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 8ல் நடக்கிறது.இதற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு, இன்று முதல், 'ஹால் டிக்கெட்' வழங்கப்படும். அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர் மூலம், www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ரகசிய எண் மூலம், 'ஹால் டிக்கெட்'களை பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

அனைத்து நாள்களிலும் பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம்கள்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

பள்ளிகளில் விடுமுறை நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் மாணவர்களுக்கு ஆதார் அட்டை பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
 இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:
ஒரு பள்ளியில் ஆதார் எண்ணுக்குப் பதிவு செய்யாத மாணவர்களின் எண்ணிக்கை 100 அல்லது அதற்கு மேல் இருந்தால், அந்தப் பள்ளியில் ஆதார் எண் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 அனைத்து வகைப் பள்ளிகளிலும் இந்தப் பணியை சிறப்பாக நடத்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முதன்மை ஒருங்கிணைப்பாளராக இருந்து, மாவட்டக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் ஆகியோருடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். பள்ளி வேலைநாள்களில் பள்ளி தொடங்கும் நேரம் முதல் மாலை 5.30 மணி வரையில் முகாம் நடத்தப்பட வேண்டும். விடுமுறை உள்பட அனைத்து நாள்களிலும் நடத்த வேண்டும். பள்ளி வேலை நாள்களில் வேலை நேரம் முடிந்த பின்பும், அனைத்து விடுமுறை நாள்களிலும் பொதுமக்கள் ஆதார் எண் பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
 பள்ளி ஆசிரியரையும், வகுப்பறையும் ஒதுக்க வேண்டும்: ஆதார் முகாம்களுக்கான ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர்களில் ஒருவரை அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் நியமிக்க வேண்டும்.
 ஆதார் எண் பதிவு செய்யும் கருவிகளைப் பொருத்த ஒரு வகுப்பறைகளை ஒதுக்கி தேவையான வசதிகளைச் செய்ய வேண்டும். பதிவுகளை மேற்கொள்வதற்கான கால அட்டவணையையும் தயாரிக்க வேண்டும்.
 பதிவு செய்யப்பட வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாக இருக்கிற பள்ளிகளைக் கண்டறிந்து, அந்தப் பள்ளிகளுக்கு அருகில் நடைபெறும் ஆதார் பதிவு செய்யும் முகாமை தொடர்பு மையமாக அமைத்து, இந்த மாணவர்களுக்கு ஆதார் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.
 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 100-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கையைக் கண்டறிந்து அந்தப் பள்ளிகளுக்கு அருகில் நடைபெறும் எந்த முகாமில் அவர்கள் பங்கேற்க வேண்டும் என்ற கால அட்டவணையை மாவட்டக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ஆகியோர் தயார் செய்ய வேண்டும். அந்தப் பள்ளிகளுக்கும் அட்டவணையை முன்கூட்டியே அளிக்க வேண்டும்.
 முக்கியமான இந்தப் பணியில் தனிக் கவனம் செலுத்தி, தங்கள் மாவட்டத்தில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஆதார் அட்டை பெற்றுள்ளார்களா என்பதை உறுதி செய்து 100 சதவீத இலக்கை அடைந்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பெயர் சேர்ப்பு பணி எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல்

சென்னை,: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பித்தவர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பும் பணி துவக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:வாக்காளர் பட்டியல் திருத்தம், செப்டம்பரில் துவங்கியது; 24ல் முடிந்தது. மூன்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மொத்தம், 22.81 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.பெயர் சேர்க்க, தொகுதி மாற்றம் செய்ய, 16.94 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து, பெயர் சேர்க்க கோரி, 11 விண்ணப்பம் வந்துள்ளன.
பெயரை நீக்க, 1.76 லட்சம்; திருத்த, 2.69 லட்சம்; வார்டு மாற்ற, 1.41 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், 7.50 லட்சம் பேர் மட்டும், மொபைல் எண் கொடுத்துள்ளனர்.
இவர்களின் விவரம் அனைத்தும், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் விண்ணப்பங்களும், 'ஸ்கேன்' செய்யப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.இரண்டையும் ஆய்வு செய்து, தவறு இருந்தால் திருத்தம் செய்யப்படுகிறது. இப்பணி பெரும்பாலான மாவட்டங்களில் நிறைவு பெற்று உள்ளது; சென்னையில் மட்டும், 75.38 சதவீத பணி முடிந்துள்ளது.இந்த விவரம், விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம், தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரரின் பெயர், வேறு எங்கும் உள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது. பின், அந்த விண்ணப்பதாரர் பெயரில், 'செக் லிஸ்ட்' தயார் செய்யப்படுகிறது.
ஓட்டுச்சாவடி அலுவலர், அந்த விண்ணப்பதாரர் வீட்டுக்கு சென்று, செக் லிஸ்ட் தகவல் உண்மையா என ஆய்வு செய்வார். அவர் வரும் தகவல், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்படும். அப்போது, மொபைல் எண் கொடுக்காதவர்களிடம், எண்ணை கேட்டு பெறுவார், என்று சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

பெயர் விடுபடும் பிரச்னை தீரும்

'கடந்த தேர்தலில் ஓட்டு போட்டேன்; இப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை' என, ஒவ்வொரு தேர்தலிலும் புகார் எழுவது வாடிக்கை.இதை தவிர்க்க, தேர்தல் பிரிவு அலுவலர்கள், புதிய மென்பொருளை கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை, அதிகாரிகள் தன்னிச்சையாக நீக்க முடியாது. நீக்கத்திற்கான காரணத்தை, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே, நீக்கம் செய்ய முடியும்.
இதன்மூலம், ஒருவடைய பெயர், எதற்காக நீக்கப்பட்டது; நீக்கியது யார்; பரிந்துரை செய்தது யார் போன்ற விவரங்களை, கம்ப்யூட்டர் மூலம் அறிய முடியும்.
எனவே, மொத்தமாக பெயர் நீக்கம் செய்வது தடுக்கப்படும்; அப்படி செய்தால், அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்; எனவே, இனி பெயர் விடுபடும் பிரச்னை தீரலாம்.

கணினி தகுதித்தேர்வு விண்ணப்பிக்க அறிவிப்பு

தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் நடத்தும், கணினி தகுதித்தேர்வுக்கு, நவ., 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசுத் துறையில், சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சர் பணிகளில் சேர, கணினி இயக்கவும் தகுதி பெற வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சர் பணிக்கான தேர்வில், உரிய விதிப்படி தேர்ச்சி பெற்றாலும், கணினி தகுதி சான்றிதழ் படிப்பிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

'கம்ப்யூட்டர் ஆன் ஆட்டோமேஷன்' என, அழைக்கப்படும் இந்த தேர்வு, தமிழக தொழில்நுட்ப இயக்குனரகத்தால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வுக்கு, இயக்குனரக இணையதளமான, http:/www.tndte.com/ota.htmlல், நவ., 16ம் தேதிக்குள், 'ஆன்லைன்' மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து, நவ., 23ம் தேதிக்குள், தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேசிய திறனாய்வுத் தேர்வு:நுழைவுச் சீட்டை SCHOOL LEVEL பதிவிறக்கம் செய்ய.......

தொடக்ககல்வி - மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பு -துவக்க/நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி (TPF) கணக்குகள் மாநில கணக்காயருக்கு மாற்றம் - இயக்குநர் செயல்முறைகள்

SG TO BT பதவி உயர்வு கலந்தாய்வு 30/10/2015 அன்று நடைபெறும் - காலி பணியிட விவரங்கள் வெளியீடு - இயக்குநர் செயல்முறைகள்



28/10/15

பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு

கன்னியாகுமரி மாவட்டத்தில், பிளஸ் 2, 10ஆம் வகுப்புத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஊக்கப்பரிசுத் தொகைகளை, மாவட்ட   ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள லூயி பிரெயிலி கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2014-15ஆம் ஆண்டில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுத்தொகைக்கான காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தொடர்ந்து, பழங்குடியினர் நலவாரிய உறுப்பினர்களாக பதிவு செய்து இயற்கை மரணமடைந்த ஆறுகாணி பகுதியைச் சேர்ந்த அப்புக்குட்டன்காணி, குஞ்சுகிருஷ்ணன் காணி, திவாகரன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகையாக, தலா ரூ. 15 ஆயிரத்துக்கான காசோலைகளையும் ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் சின்னம்மாள், துணை ஆட்சியர் தி.  சுப்பையா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஆர். சிவதாஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

1,310 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை 1,310 பேர் பணியிடமாறுதல் பெற்றனர். பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள் இடமாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 900-த்துக்கும் அதிகமான இடங்கள் இருந்தன. மனமொத்த இடமாறுதல் கோரியவர்களுக்கும் நிறைய இடங்களில் மாறுதல்கள் வழங்கப்பட்டன. 

ஒரு மனமொத்த இடமாறுதல் வழங்கப்பட்டால் அது இரண்டு இடமாறுதல்களாக கணக்கில் கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்ததாக, பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (அக்.27) நடைபெற உள்ளது.
அதன் பிறகு, இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்வதற்கான "ஆன்-லைன்' கலந்தாய்வு அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் அரசுப் பணிகளுக்கான விவரங்கள் வெளியீடு

வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் மத்திய, மாநில அரசுப் பணிக்களுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின்  இணையதள முகவரியில் வேலைவாய்ப்பு புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல் பதிவு போன்ற வசதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
தற்போது, வேலை தேடுவோர்க்கு அவ்வப்போது வெளி வரும் மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வுகள், மத்திய, மாநில அரசு சார் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டு வருகிறது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பாட வாரியான பயிற்சி ஏடுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு குறித்த விவரங்கள், தொழில் நெறிவழிகாட்டுதல் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், தன்னார்வ பயிலும் வட்டத்தால் போட்டித் தேர்வுகளுக்கு நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகள் குறித்த தகவல்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அளிக்கப்படும் குறுகியகால திறன் எய்தும் பயிற்சிகள் குறித்த விவரங்கள்,வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை தேடுவோர், மனுதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ.பி.எஃப். ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழை (life certificate) கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் ஓய்வூதியம் பெறுவோர் நவம்பரில் உயிர் வாழ் சான்றிதழை தங்களது வங்கியின் கிளை மேலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழில் தங்களின் ஓய்வூதிய ஆணை எண்ணையும், செல்லிடப்பேசி எண்ணையும் அவசியம் குறிப்பிட வேண்டும்.


விதவை ஓய்வூதியதாரர்கள் மறுமணம் செய்து கொள்ளவில்லை என்ற சான்றிதழையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். வங்கி சார்ந்த பணிகளுக்குப் பின்னர், உரிய காலத்துக்குள் வங்கிகள் அந்தச் சான்றிதழ்களை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். 
ஆயுள் காலச் சான்றிதழைச் சமர்ப்பிக்காதவர்களுக்கு, 2016-ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வில் காலியிடங்கள் மறைப்பு; ஆசிரியர்கள் புகார்

பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் காலிப் பணியிடங்களை மறைப்பதாக கூறி திங்கள்கிழமை ஆசிரியர்கள்   தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடமாறுதல் கலந்தாய்வு அக்., 26, 27 இல் நடைபெறுகிறது. இதில், மாவட்டத்திற்குள் இடமாறுதலில் செல்லும் கலந்தாய்வு திங்கள்கிழமை சிவகங்கை மருதுபாண்டியர் பள்ளியில் தொடங்கியது.
முதலில் சமூக அறிவியல் பாடத்திற்கு கலந்தாய்வு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் காலிப்பணியிட விபரம் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படவில்லை. இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கலந்தாய்வில கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். பின்னர் கலந்தாயும் நடைபெற்ற அறைக்கு வெளியே கீழே அமர்ந்து கோஷமிட்டபடியே தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். அரைமணி நேர கால தாமதத்திற்கு பின்னர் காலி பணியிட விபரம் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இதையடுத்து மீண்டும் கலந்தாய்வு தொடங்கியது.

நேரடி பணி நியமனத்தில் குளறுபடி

அரசுத்துறைகளில் நேரடி பணி நியமனத்தில் குளறுபடிகள் நடப்பதாக வேலைவாய்ப்புத்துறை ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 85 லட்சம் பேர், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய வரையறைக்கு உட்பட்டதை தவிர மற்ற பணியிடங்கள், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்பட்டன. நீதிமன்ற உத்தரவால், சமீபகாலமாக அந்தந்த அரசு துறைகள் மூலமே காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 

விண்ணப்பத்தின் அடிப்படையில் நேர்முகத்தேர்வு நடத்தி பணியாளர்களை நியமிக்கின்றனர். இதில், 'வேலைவாய்ப்பக பதிவுதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்' என அரசு உத்தரவிட்டுள்ளது. 'இதை துறை அலுவலர்கள் முறையாக பின்பற்றுவதில்லை' என வேலைவாய்ப்புத்துறையினர் புகார் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு வேலைவாய்ப்புத்துறை ஊழியர் சங்க மாநிலத்தலைவர் கணேசமூர்த்தி கூறியதாவது: எங்களிடம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு பட்டியல் பெறப்பட்டாலும், முறையாக பணிநியமனம் செய்வதில்லை. இனசுழற்சி முறையும் பின்பற்றுவதில்லை. இதேநிலை நீடித்தால் இளைஞர்களிடையே, வேலைவாய்ப்பு அலுவலகம் குறித்த நம்பிக்கை போய்விடும். 
இதை கண்டித்து அக்., 28ல் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். தொடர்ந்து சென்னையில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த உள்ளோம், என்றார்.

ஊதிய விகிதக் குறைபாடுகள்: தலைமைச் செயலரிடம் மனு

மத்திய தலைமைச் செயலக உதவியாளர் நிலைக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என தலைமைச் செயலர் கே.ஞானதேசிகனிடம் தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள், உதவிப் பிரிவு அலுவலர்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனர்.இந்த மனுவில் கூறியிருப்பதாவது: தலைமைச் செயலகத்தில் 1,800 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பொறியியல், கணினி உள்ளிட்ட சில பட்டப் படிப்புகளைப் படித்தவர்கள்.


1992-இல் மத்திய தலைமைச் செயலக உதவியாளர்களுக்கு இணையாக, தமிழக தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் உதவிப் பிரிவு அலுவலர்களுக்கு அடிப்படை ஊதியமானது ரூ.1,640-ஆக உயர்த்தப்பட்டது. 2006-ஆம் ஆண்டு மத்திய அரசு உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியத்தை உயர்த்திய நிலையில், தமிழகத்திலும் அடிப்படை ஊதியமானது ரூ.6,500-ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், இப்போது மத்திய தலைமைச் செயலக உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.12,540-ஆகவும், தர ஊதியம் ரூ.4,600-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படுகிறது. இதேபோன்ற அளவில், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர்களுக்கும், ஊதியத்தை உயர்த்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.ஏ., திட்டம் ஏமாறும் மாணவர்கள்

மத்திய அரசின் அனைவருக்கும்கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கைகழுவும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கு முன், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதலில் பயிற்சி தரப்பட்டது.ஆனால், இந்த பயிற்சியில், அரசு உதவிபெறும் பள்ளிகள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், அனைத்து அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களும் பயன்பெற வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், எஸ்.எஸ்.ஏ., திட்டங்களை செயல்படுத்தாமல், எங்களது பள்ளிகள் புறக்கணிக்கப்படுகின்றன. இதனால், மாணவர்கள் ஏமாற்றமடைகின்றனர். எனவே, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தை, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் செயல்படுத்த, திட்ட இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
COURTESY : DINAMALAR

110வது விதியில் அறிவித்த பாடப்பிரிவுகளுக்கு பேராசிரியர் இல்லை

சட்டசபையில், 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட, 959 புதிய பாடப்பிரிவுகளுக்கு, அரசு கல்லுாரிகளில் பேராசிரியர்கள் இல்லை; இதனால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழக அரசு கட்டுப்பாட்டில், 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 1,000 பாடப்பிரிவுகள்; 8,000 பேராசிரியர்கள் உள்ளனர். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு தேவைக்கேற்ப, புதிய பாடப்பிரிவுகளை துவக்க, பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.


இதையடுத்து, நான்கு ஆண்டுகளில், சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வரால், 959 பாடப்பிரிவுகள் புதிதாக அறிவிக்கப்பட்டன. இவற்றில், எம்.பில்., மற்றும் பிஎச்.டி.,யில், 300 பாடப்பிரிவுகளும் அடங்கும். ஆனால், புதிய பாடப்பிரிவுகளுக்கு தனியாக பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை; கூடுதல் வகுப்பறைகளும் இல்லை. கல்லுாரிகளில், ஏற்கனவே உள்ள வகுப்பறையை பிரித்து, கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், புதிய பாடப்பிரிவுக்கான வகுப்பறைகளை ஏற்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது: புதிய பாடப்பிரிவுகளில், இளங்கலைக்கு, ஆண்டுக்கு இரண்டு பேராசிரியர் என, மூன்று ஆண்டுகளுக்கு, ஆறு பேர்; முதுகலைக்கு, ஆண்டுக்கு இரண்டு பேர் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு நான்கு பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அப்படி நியமிக்காததால், புதிய பாடப்பிரிவுகளில் சேர்ந்த மாணவர்கள், வேறு பாடப்பிரிவுகளுக்கு மாறும் அபாயம் உள்ளது. எனவே, தமிழக அரசு, விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
COURTESY : DINAMALAR

மருத்துவக் கல்லூரி குறித்து அறிவிப்பு வராததால் ஏமாற்றம்!

கடலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து தகுதிகளும் இருந்தும், கேப்பர் மலையில் அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவக் கல்லுாரி துவங்காததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்றுவாறு பல்வேறு வகையான நோய்களும் உருவெடுத்து வருகிறது.
இதுவரை கேள்விப்பட்டிராத பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல், எய்ட்ஸ், மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மக்களை துன்புறுத்தி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த தமிழகத்தில் மருத்துவ நிபுணர்கள் குறைவாகவே உள்ளனர்.

கல்லூரியில் புதிய பாடம் அரசிடம் வலியுறுத்த முடிவு

சிக்கண்ணா அரசு கல்லூரியில், புதிதாக பாடப்பிரிவுகள் சேர்க்க, தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்க, கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில், 14 பாடப்பிரிவுகளில், 2,300 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பனியன் தொழில் நகர மாக திருப்பூர் இருப்பதால், ஆடை வடிவமைப்பு, பேஷன் சார்ந்த படிப்புக்கு, பலரும் (காஸ்ட்யூம் டிசைனிங் அண்டு பேஷன் - சி.டி.எப்.,) ஆர்வம் காட்டுகின்றனர்; ஆடிட்டிங் படிக்கவும் பலரிடடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா சார்ந்த படிப்பு படிக்கவும் விரும்புகின்றனர். 


இப்படிப்புகள் சிக்கண்ணா கல்லூரியில் இல்லாதது, மாணவர்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது. இக்கல்லூரியில், பி.ஏ., தமிழ் இலக்கியம், பொருளியல், எம்.எஸ்.சி., சி.டி.எப்., டூரிஸம் அண்டு மேனேஜ்மென்ட், எம்.காம்., சி.ஏ., எம்.ஏ., ஆங்கிலம், எம்.ஏ., வரலாறு, எம்.ஏ., இலக்கியம் உள்ளிட்ட புதிய பாடப்பிரிவுகளுக்கு, அரசிடம் கோரிக்கை வைக்க, கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் போராட்ட ஆயத்த கூட்டம்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக, தர்மபுரியில், போராட்ட ஆயத்த கூட்டம் நடந்தது.


மாநில அமைப்பாளர் ஜனார்தனன் தலைமை வகித்தார். கூட்டத்தில், தொகுப்பூதிய காலத்தை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தேர்வுநிலை தர ஊதியம், ஏற்கனவே உள்ள அரசாணைகள் மற்றும் அரசு கடிதங்களின் படி, 5,400 ரூபாய் வழங்க வேண்டும். 

வெவ்வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்றுள்ள தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 31ம் தேதி, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நடக்கும், ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற் கல்வி ஆசிரியர்கள் கலந்து கொள்வது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்க புதிய வசதி

இ-சேவை மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்க லாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம் மற்றும் 15 மண்டல அலுவலகங்களில், இ-சேவை மையங்களை அமைத்து, நிர்வகித்து வருகிறது. அதன் மூலம், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறும் வசதி, அந்த அட்டை பதிவு செய்யும்போது தெரிவிக்கப்பட்ட அலைபேசி எண்ணை மாற்றும் வசதி மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.


மேலும், புதிதாக, டி.என்.பி.எஸ்.சி.,க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, நிரந்தரப் பதிவு செய்ய, 50 ரூபாய், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, 30 ரூபாய், விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய, ஐந்து ரூபாய், மாறுதல் செய்து விண்ணப்பத்தின் நகல் பெற, 20 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒப்புகை சீட்டு

நிரந்தர பதிவு கட்டணமான, 50 ரூபாய், நிர்ணயிக்கப்பட்ட தேர்வு கட்டணம் ஆகியவற்றையும் இ-சேவை மையங்களில் செலுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது. பணம் செலுத்தியதற்கான, ஒப்புகை சீட்டு, உடனடியாக பெற்று கொள்ளலாம் என, சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.