தமிழகத்தில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில், தென் மாவட்டங்களில் 'ஆசிரியர் சர்பிளஸ்' ஏற்பட்ட நிலையில், வடக்கில் ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் நீடிப்பதால், மாணவர் கல்வித் தரத்தை சமப்படுத்துவது குறித்து கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கல்வித்துறையில், ஒரு மாதமாக நடந்த பொது மாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயனடைந்தனர்.இதனால் கன்னியாகுமரி, நெல்லை, துாத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம்,சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, சேலம் ஆகிய 12 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரம்பின. பாட வாரியாக 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 'சர்பிளஸ்' ஆகவும் உள்ளனர்.
பணியிடங்கள் காலி
ஆனால், வடக்கில் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலுார், நாகபட்டினம், நீலகிரி, வேலுார், விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களில் பாடம்வாரியாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்பணியிடங்கள் காலியாக உள்ளன.நேற்று நடந்த இடைநிலை ஆசிரியருக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்கு முன் உள்ள நிலவரப்படி தமிழ்- 155,ஆங்கிலம்- 75, கணிதம்- 140, அறிவியல்- 263, சமூக அறிவியல்- 469 என வட மாவட்டங்களில் 1,102ஆசிரியர் காலி பணியிடங்கள் இருந்தன. பதவிஉயர்வில்ஒருசில இடம் நிரம்பினாலும், ஆயிரத்திற்கும் மேல் இடங்கள் காலியாக நீடிக்கவே வாய்ப்பு உள்ளது.
சங்கங்கள் எதிர்ப்பு
இதில் கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை, நீலகிரி, விழுப்புரம் மாவட்டங்களில் அதிகபட்ச காலியிடங்கள் உள்ளன.காரணம் என்ன: வடமாவட்டங்களில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பெரும்பாலும், தென் மாவட்டங்களை சேர்ந்தவராக உள்ளனர். கலந்தாய்வில் சொந்த மாவட்டத்தில் காலியிடம் இல்லாதபட்சத்தில், அருகாமை மாவட்டத்தை தேர்வு செய்தனர். முதல்முறையாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பணியிடங்களும் இந்தாண்டு நிரம்பின.மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், துாத்துக்குடி, நெல்லையில் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை காலியிடம் ஏற்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சங்கங்கள் எதிர்ப்புகாரணமாக 'சர்பிளஸ்' ஆசிரியருக்கான, மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலும் நடத்தாததால் இந்நிலை ஏற்பட்டது.தற்போது இப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றால், ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) நடத்த வேண்டும். ஆனால் நீதிமன்ற வழக்கு காரணமாக மூன்று ஆண்டுகளாக இத்தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
2014-15 கலந்தாய்வு காரணமா?
இப்பிரச்னை குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: 2014-15 கல்வியாண்டு நடந்த கலந்தாய்வில் தென் மாவட்ட அரசு பள்ளிகளில் பணியிடம் இல்லாத நிலையிலும் உருவாக்கப்பட்டு அரசியல், அதிகாரிகள் 'சிபாரிசு' அடிப்படையில் நுாற்றுக்கணக்கான இடமாற்றம் நடந்தன. அப்போது ஒரு மாறுதலுக்கு 5 லட்சம் ரூபாய் வரை பேரம் நடந்ததாக குற்றச்சாட்டும் எழுந்தது.ஒரே பணியிடத்தில் இரண்டு ஆசிரியர்களுக்கு கூட உத்தரவு வழங்கி குழப்பம் ஏற்பட்டது. அதன் எதிரொலி தான் தென் மாவட்டங்களில் தற்போது 'சர்பிளஸ்' ஆசிரியர்அதிகரித்துள்ளது. அப்போது இருந்த அதிகாரிகள் சிலரின் நடவடிக்கையால் இப்போது வட மாவட்டங்களில் கல்வித்துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது, என்றனர்.
Related Posts Widget