யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/5/18

FLASH NEWS - தூத்துக்குடி ஆட்சியர் SSA கூடுதல் இயக்குனராக நியமனம் - தமிழக அரசு உத்தரவு

தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷை அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் இயக்குனராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. SSA (SAMAGRA SIKSHA ABHIYAN) SSA + RMSA இணைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய திட்டமாகும்

`அரசுப் பள்ளிகளை மூடுவது தனியாருக்குச் சாதகம்!' - கொதிக்கும் கல்வியாளர்கள்

தமிழகத்தில் உள்ள 836 அரசுப் பள்ளிகள் மூடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. `தனியார் பள்ளிகளின் நலனுக்காகவே இப்படியொரு நடவடிக்கையை அரசு மேற்கொள்ள உள்ளது' எனக் கொதிக்கின்றனர் கல்வியாளர்கள்.


 தமிழகத்தில் மொத்தம் 44, 214 பள்ளிகள் உள்ளன. மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க, தமிழக அரசு சார்பில் மத்திய உணவுத் திட்டம், சீருடைகள், புத்தகங்கள் காலணிகள் உள்ளிட்ட பல இலவச நலத்திட்டங்கள் நடைமுறையில் செயல்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் உயர்ந்ததாகத் தெரியவில்லை. இதனால், 10-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் அரசு தொடக்கப்பள்ளிகளை மூடிவிடலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நேற்று கல்வி அலுவலர்கள் கூடி ஆலோசித்தனர் என்ற தகவல் வெளியாகியது.

இது குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம், ``தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைந்துள்ளதுக்கான காரணம் என்ன? முறையான கட்டமைப்பு வசதி பள்ளிகளில் இருக்கிறதா? சத்துணவுத் திட்டம் சரியாகச் செயல்படுகிறதா ? மாணவர்களுக்குப் போதிய பாதுகாப்பு உள்ளதா? பெற்றோர்கள் மத்தியில் அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? கழிப்பறை வசதி பள்ளிகளில் உள்ளனவா? இவை, எதையும் பள்ளிக் கல்வித்துறை கவலைப்படவில்லை. அதற்கான ஆய்வு நடவடிக்கைகளைத் தொடரவில்லை. ஆனால், 10-க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் அரசு தொடக்கப்பள்ளிகளை மூடுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கையில் ஒன்றுக்குப் பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும்'' என்றார்.

இதனையடுத்து, தமிழ்நாடு பெற்றோர் மாணவர் நலச் சங்க மாநிலத் தலைவர் அருமைநாதனிடம் பேசினோம். `தமிழக அரசின் இந்த நடவடிக்கை தனியார் பள்ளிகளுக்குச் சாதகமாக எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையானது 45 சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும் பல பகுதிகளில் ஒரு அரசுப் பள்ளியைச் சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளின் கல்வித்தரங்களை உயர்த்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபடவில்லை. ஆர்வமும் காட்டவில்லை. இதனால், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அருகிலிருக்கும் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல், தனியார் பள்ளிகள் வசூலிக்கும் அதிகக் கல்விக் கட்டணத்தால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தமிழக அரசு மறைமுகமாகக் கல்வியைத் தனியாரிடம் ஒப்படைத்து வருகிறது. தனியார்ப் பள்ளிகளை ஊக்குவித்தும் வருகிறது'' என்றார்.

``அரசின் இந்த நடவடிக்கை ஆசிரியர்களையும் பாதிக்கும்'' என்கிறார் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைப்பொதுச் செயலாளர் க.சாந்தகுமார். இது குறித்து அவர் பேசுகையில், ``தனியார்ப் பள்ளிகளில், 25 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஒதுக்கீட்டின் கீழ் பெரும்பாலும் அரசுப் பள்ளி மாணவர்கள்தாம் விண்ணப்பிக்கின்றனர். சுமார் ஒரு லட்சத்து முப்பத்து இரண்டாயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் தற்போது தனியார் பள்ளிகளுக்குப் படிக்கச் சென்றுவிட்டனர். இதனால், 4,400-க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் தமிழகத்தில் காலியாக இருக்கின்றது. எனவே, தமிழக அரசு கல்வியைத் தனியார் மயமாக்கி வருகிறது'' என்றார்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளிடம் பேசினோம், ``தமிழக அரசின் இயக்குநரகம் கட்டுப்பாட்டில் அரசுப் பள்ளிகள் - 629 மாநகராட்சிப் பள்ளிகள் - 436, நகராட்சிப் பள்ளிகள் - 839 மற்றும் நர்ஸரி மற்றும் பிரைமரிப் பள்ளிகள் - 6308, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு நலத்துறைப் பள்ளிகள் எனத் தமிழகத்தில் மொத்தம் 44, 214 பள்ளிகள்உள்ளன. இதில், பத்துக்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் தொடக்கப்பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்குச் சம்பளமாக லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. இதனால்தான் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளோடு இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். தற்போதைய சூழலில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு அரசுப் பள்ளி செயல்படுகிறது. இதனால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும், கடந்த கல்வி ஆண்டிலும் அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகின்றன. இதனால் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு கல்வி ஆண்டும் அதிகரித்துத்தான் வருகின்றன. இதனை இன்னும் அதிகரிக்கவே கணக்கெடுப்பு நடத்தப்பட்டது'' என்றார். பள்ளிகள் மூடப்படுவதாக வெளியான தகவலை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், `அரசு தொடக்கப் பள்ளிகளை மூடும் எண்ணமில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

1,6,9,11 வகுப்புக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் தற்போது வெளியீடு செய்யவில்லை. மே 31 அன்று வெளியிடப்படும்.

ஆபத்தில் 900க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள்: என்ன சொல்கிறது அரசு?

மாணவர் எண்ணிக்கையைக் காரணம் காட்டி 900க்கும் மேற்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகளை தமிழக அரசு மூட இருப்பதாக வெளியான ஒரு தகவல் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது குறித்த அரசாணைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும் போது அவ்வப்போது வெளியிடப்பட்ட அரசாணைகள், குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்விச் சட்டம் 2009-ல் வகுக்கப்பட்ட நெறிமுறைகள் மனிதவள மேம்பாட்டுத் துறையின் வழிகாட்டுதல்கள் ஆகிய அனைத்தையும் பரிசீலித்து தற்போதைய நிலையில் மாணவர்களின் கல்வித் தரத்தையும், கற்பித்தலை மேம்படுத்துவது குறித்தும் கருத்தில் கொண்டு ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்திட வேண்டும்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பிரிவுகளுக்கு 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், 60 மாணவர்கள் வரையில் 2 ஆசிரியர்களும், 61 முதல் 90 மாணவர்கள் இருந்தால் 3 ஆசிரியர்களும், 91 முதல் 120 மாணவர்கள் இருந்தால் 4 ஆசிரியர்களும் இதேபோன்று ஒவ்வொரு 30 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர் கூடுதலாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 அடிப்படையில் நடுநிலைப்பள்ளிகளில் அதாவது 6 முதல் 8-ம் வகுப்பு வரையில் குறைந்தபட்சம் 3 ஆசிரியர் பணியிடங்களை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
தமிழகத்தில் 37,211 அரசுப் பள்ளிகளும், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 12,419 தனியார் சுயநிதி பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒரு கோடியே 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.
தொடக்கக் கல்வித்துறையின் கீழ் 529 அரசுப் பள்ளிகளும், 436 மாநகராட்சிப் பள்ளிகளும், 839 நகராட்சிப் பள்ளிகளும், 6,589 நிதி உதவிபெறும் பள்ளிகளும், 28 ஆயிரத்து 42 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளும்,1471 நலத்துறைப் பள்ளிகளும், 6,308 நர்சரி பிரைமரிப் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 36 லட்சத்து 99 ஆயிரத்து 826 மாணவர்கள் படிக்கின்றனர்.
ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் 18 லட்சத்து 32 ஆயிரத்து 403 மாணவர்கள் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் படிக்கின்றனர். நர்சரி பிரைமரிப் பள்ளிகளில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 639 மாணவர்கள் படிக்கின்றனர்.
அவற்றிலும் குறிப்பாக ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 1-ம் வகுப்பில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 621 மாணவர்களும், 2-ம் வகுப்பில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 332 மாணவர்களும், 3-ம் வகுப்பில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 997 மாணவர்களும், 4-ம் வகுப்பில் 3 லட்சத்து 25ஆயிரத்து 699 மாணவர்களும், 5-ம் வகுப்பில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 82 மாணவர்களும் படித்து வருகின்றனர்.
ஆனால் அதேநேரத்தில் நர்சரி பிரைமரி பள்ளிகளில் 1-ம் வகுப்பில் 2 லட்சத்து 167 மாணவர்களும், 2-ம் வகுப்பில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 962 மாணவர்களும், 3-ம் வகுப்பில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 330 மாணவர்களும், 4-ம் வகுப்பில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 776 மாணவர்களும், 5-ம் வகுப்பில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 135 மாணர்களும் படித்து வருகின்றனர் என தொடக்கக் கல்வித்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில், நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களையும், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையையும் கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, மாணவர் சேர்க்கை குறைந்த பள்ளிகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மாணவர் கூட இல்லாமல் 29 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. 892 தொடக்கப் பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் இருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டது. இந்தப் பள்ளிகளில் பெரும்பாலும் தலைமை ஆசிரியர் மட்மே பணியாற்றி வருகிறார். ஒரு சில பள்ளிகளில் மட்டும் ஒரு தலைமை ஆசிரியரும், ஒரு இடைநிலை ஆசிரியரும் பணியாற்றி வருகின்றனர்.
இதனால் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடும் முடிவில் தமிழக அரசு இருப்பதாகவும் செய்தி வெளியானது. அந்தப் பள்ளி மாணவர்களை அருகிலுள்ள பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க முடுவெடுத்திருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இதுபோன்ற மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகில் உள்ள அரசுப் பள்ளியுடன் இணைப்பதற்கான நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறையின் அறிவுறுத்தலின் படி தொடக்கக் கல்வித்துறை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது. வேறு பள்ளியுடன் இணைக்கும் போது அந்தப் பள்ளியின் மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தருவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவதற்கு முக்கியக் காரணம் அங்கு போதுமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது ஆகும். மாணவர்கள் தங்களின் பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசுவதை விரும்புகின்றனர் என அரசு காரணம் கூறினாலும், கிராமப்புறங்களில் உள்ள எந்த தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் சரளமாக ஆங்கிலம் பேசுவது கிடையாது என்பதுதான் உண்மை.
இந்த சூழலில் நாம் இன்னொன்றையும் கூர்ந்து கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.
தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்துப் பள்ளிகளிலும் ஆரம்ப வகுப்பில் 25 சதவீதம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அதன்படி, 2013- 14 ஆம் கல்வி ஆண்டில் 49,864 மாணவர்களும், 2014-15 ஆம் கல்வி ஆண்டில் 86,729 மாணவர்களும், 2015-16 ஆம் கல்வியாண்டில் 94,811 மாணவர்களும், 2016-17 ஆம் கல்வியாண்டில் 98,474 மாணவர்களும், 2017-18 ஆம் கல்வியாண்டில் 90,607 மாணவர்களும் படித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது 2018- 19 ஆம் கல்வியாண்டில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்காக 1,32,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
2013-14 முதல் 2016- 17 ஆம் கல்வியாண்டு வரை இலவச கட்டாய கல்விச்சட்டத்தின் 25% இட ஒதுக்கீட்டின் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத் தொகை ரூ.401.98 கோடி மாநில அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 900க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளை அருகில் உள்ள பள்ளியுடன் இணைப்பதை தவிர்த்து, இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்திற்கு அளிக்கும் நிதியைக் கொண்டோ அல்லது அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த அதிக நிதியையோ பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கலாம் என்று கல்வி ஆர்வலர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளை மூடும் நோக்கம் இல்லை: செங்கோட்டையன்
''அரசுப் பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை. அனைத்துப் பள்ளிகளும் இயங்கும். தற்போது பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச சீருடைகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மூலம் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
அரசின் நோக்கம் சரியானதுதான். ஆனால், அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதும், நர்சரி பிரைமரிப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர் சேர்க்கை குறைவதற்கான காரணங்களை ஆய்வு செய்து கண்டறிய வேண்டும். அரசுப் பள்ளிகளில் கூடுதலாக எப்படி மாணவர்களைச் சேர்ப்பது, எண்ணிக்கை குறையாமல் இருப்பதற்கு எப்படி வழி வகை செய்யலாம் என்பதை அரசு பரிசீலிக்க வேண்டியது அவசியம்.a

23/5/18

அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்


அரசின் பல்வேறு துறைகளிடம் இருந்து சம்பளம், பணியிட விவரங்களை சேகரிக்கும் எம்.ஏ.சித்திக் குழு ஜூலையில் அறிக்கை தாக்கல் செய்ய திட்டம்

அரசுசெலவினங்களை குறைக் கும் நோக்கில் அமைக்கப்பட்ட பணியாளர் சீரமைப்புக் குழு, துறைகள் தோறும் பணியாளர்கள், சம்பளம் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருகிறது.

தமிழக அரசில் தற்போது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 12 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசின் ஒட்டுமொத்த வருவாயில் 70 சதவீதம் ஊழியர், ஆசிரியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியமாக வழங்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வருவாய் செலவினங்களைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அரசுப் பணிகளில் தேக்கத்தை குறைக்கவும் தேவையில்லாத பணியிடங்களை நீக்கவிட்டு, தேவை யான பணியிடங்களில் புதியவர்களை நியமிக்கவும் சில பணியிடங்களில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிக்கவும் அரசு முடிவெடுத்தது. இதையடுத்து, நிதித் துறை (செலவினம்) செயலாளர் எம்.ஏ.சித்திக் தலைமையில் ஒரு நபர்பணியாளர் சீரமைப்புக் குழுவை அரசு அமைத்தது. ஆனால், இந்தக் குழுவுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் சித்திக் குழு தனதுபணிகளைத் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, துறை தோறும்உள்ள பணியிடங்கள், பணியா ளர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து வருகிறது.

இதுதொடர்பாக அரசுத்துறைகள், தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் உட்படஅனைத்து துறைகளின் செயலர்களுக்கும் குழுவின் தலைவர் சித்திக் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘தேவையில்லாத பணியிடங்களைக் குறைத்து, அவுட்சோர்சிங் அல்லது ஒப்பந்த அடிப்படையில் தேவையான பணியாளர்களை நியமிக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே, தங்கள் துறைகளில் உள்ள நிர்வாகச் செலவினங்கள், பணியாளர்கள், பணியிடங்கள் குறித்த விவரங்களைத் தரவேண்டும்’ என கோரியுள்ளது. மேலும், துறைகளின் தலைவர்கள், அந்தந்த துறைகளில் நிர்வாகச் செலவுகளை குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை கள் குறித்த பரிந்துரைகளையும் தருமாறு தெரிவித்துள்ளார்.

 தலைமைச் செயலகத்தை பொறுத்தவரை, பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத் தத் துறையிடம் இருந்து தலை மைச் செயலகத்தில் பணியாற்று வோர் விவரங்கள், காலிப் பணியிடங்கள், ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட விவரங்களைக் கோரியுள்ளது. இதற்காக 15 கேள்விகள் அடங்கிய பட்டியலையும் துறைகளுக்கு அனுப்பியுள்ளது. இந்த பணியாளர் சீரமைப்புக்குழு, தனது பணிகளை நிறைவு செய்து, வரும் ஜூலையில் அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்யும் என கூறப்படுகிறது.

புதிய பாடத்திட்ட நூல்கள்: இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

புதிய பாடத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட 1, 6, 9, 11 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களை புதன்கிழமை முதல் இணையதளத்தில் படிப்படியாகப் பதிவிறக்கம் செய்யலாம் என பள்ளிக் கல்வித் துறை
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பள்ளிகளுக்கான மாநிலப் பாடத் திட்டம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்டது.


ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள், வல்லுநர்களின் வழிகாட்டுதலில் உருவான புதிய பாடத் திட்ட நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் கடந்த மே 4-ஆம் தேதி வெளியிட்டனர். இதையடுத்து வரும் கல்வியாண்டில் 1, 6, 9, 11 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடநூல்களின் அடிப்படையில் கற்றல், கற்பித்தல் பணிகள் நடைபெறவுள்ளன.

இந்தநிலையில் மாணவர்கள், பெற்றோர் நலன் கருதி 1, 6, 9, 11 ஆம் ஆகிய வகுப்புகளுக்கான பாடநூல்கள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன (எஸ்சிஇஆர்டி) வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பதிவேற்றம் செய்யப்பட்ட புதிய பாடத்திட்ட நூல்களை www.tnscert.org என்ற இணையதள முகவரியில் புதன்கிழமை முதல் பதிவிறக்கம் செய்யலாம். வழக்கமான புத்தகங்களில் உள்ள தகவல்களைக் காட்டிலும் இதில் கூடுதல் தகவல்கள் இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்புத்தேர்வு பாடவாரியாக தேர்ச்சி விகிதம்.!!!

10ஆம் வகுப்பு தேர்வில் 94.5% தேர்ச்சி! - சிவகங்கை மாவட்டம் முதலிடம்!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.1% விழுக்காடு கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 9.5 லட்சம் பேரில் 8.97 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 92.6% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.4% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் 98.5% தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. ஈரோடு மாவட்டம் 98.38% பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டம் 98.26% பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளது. 5,584 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 5,456 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன என கூறினார்.

மேலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன் 28ஆம் தேதி மறுதேர்வு எழுதலாம் என அவர் கூறியுள்ளார்.

பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம்

வேலைவாய்ப்பு: வருமான வரித் துறையில் பணி!வேலைவாய்ப்பு: வருமான வரித் துறையில் பணி!

மத்திய வருமான வரித் துறையில் காலியாக உள்ள வருவாய் வரி ஆய்வாளர், வரி உதவியாளர், எம்டிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள தமிழக விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 32

பணியிடம்: சென்னை

வயது வரம்பு: 01.04.2018 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: ஸ்போர்ட்ஸ் டிரெயல் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.06.2018

மேலும் விளையாட்டுத் துறைகள், வயது வரம்பு, கல்வித் தகுதி போன்ற முழுமையான விவரங்களுக்கு வருமான வரித் துறை இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.


மத்திய வருமான வரித் துறையில் காலியாக உள்ள வருவாய் வரி ஆய்வாளர், வரி உதவியாளர், எம்டிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள தமிழக விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 32

பணியிடம்: சென்னை

வயது வரம்பு: 01.04.2018 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: ஸ்போர்ட்ஸ் டிரெயல் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.06.2018

மேலும் விளையாட்டுத் துறைகள், வயது வரம்பு, கல்வித் தகுதி போன்ற முழுமையான விவரங்களுக்கு வருமான வரித் துறை இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி வழியில் படிப்போருக்கு 26 முதல் தேர்வு,இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!!!

Tnpsc கேள்விதாள் எப்படி தயாரிக்கபட்டன? அதில் எவ்வாறு முறைகேடு நடைபெற்றது?(தினகரன் நாளிதழ்)

கேள்வித்தாள்களை 50 பேராசிரியர்கள் தயாரித்துள்ளனர். அதில், சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் 45க்கும் மேற்பட்டவர்கள் கேள்வித்தாள் தயாரித்துக் கொடுத்தனர். இவர்கள் அனைவரையும் பரிந்துரை செய்தது கல்லூரியின் முதல்வர் பிரமானந்தபெருமாள். ஒவ்வொரு பேராசிரியரும் 3 கேள்விகளை மட்டுமே தயாரிக்க வேண்டும். அதன்படி இவர்கள் 45 பேரும் என்ன கேள்விகள் தயாரித்துக் கொடுத்தோம் என்பதை கல்லூரியின் முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். அதன்பின் கல்லூரியின் முதல்வர், அவ்வளவு கேள்விகளையும் சாம் ராஜேஸ்வரனுக்கு கொடுத்துள்ளார்.
சாம் ராஜேஸ்வரன், அந்த கேள்விகளை தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன் 2 முறை தனது பயிற்சி மையத்தில் பயன்படுத்தியுள்ளார். இந்த கேள்விகள் மூலம் மட்டுமே குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களை பெற முடியும் என்று தெரியவந்தது. இதனால் கேள்விகளை தயாரித்த கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் முதல்வருடன் அடிக்கடி சாம் ராஜேஸ்வரன் பேசி வந்துள்ளார். செல்போனில் அவர்கள் தொடர்ந்து பேசி வந்ததற்கான ஆவணங்களை போலீசார் தற்போது கைப்பற்றியுள்ளனர். இந்த உதவிக்குப் பலனாக பேராசிரியர்களுக்கு பெரிய அளவில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிமுதல்வரின் உறவினர் ஒருவரை இந்த பயிற்சி மையம் மூலம் தேர்வு பெற ஏற்பாடு செய்துள்ளனர்.

அதன்பின் 2வது கட்டமாக தேர்வு எழுதும் மையத்தில் முறைகேடு செய்துள்ளனர்.  டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் இருந்து காலை 6 மணிக்கு கேள்வித்தாள்கள் அனைத்தும் தேர்வு நடைபெறும் மையத்துக்கு கொண்டு செல்லப்படும். அனைத்து கேள்வித்தாள்களும் 7 மணிக்குள் ெகாண்டு செல்ல வேண்டும். தேர்வு மையத்தில் 8 மணிக்கு தேர்வு தொடங்கும். இந்த இடைப்பட்ட ஒரு மணி நேரத்தில், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் துணையுடன் கேள்வித்தாள் கவர்களை பிரித்து கேள்விகளை வாங்கி, தனது மையத்தில் படிப்பவர்களுக்கு சாம் ராஜேஸ்வரன் அனுப்பியுள்ளார். அதிலும் பெருமளவில் மார்க்குகள் கிடைக்கும். இந்த இரு கட்ட தேர்வுகளையும் அதிகாரிகள் மூலம் சாம் ராஜேஸ்வரனே தேர்வு செய்கிறார். 

 அதைத் தொடர்ந்து 3வது கட்டமாக நேர்முகத்தேர்வு நடைபெறும். இந்த நேர்முகத் தேர்வின் தலைவராக இருப்பவர் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர். அதைத் தவிர ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவியில் உள்ள தலா ஒரு அதிகாரி, ஒரு பேராசிரியர், ஒரு மருத்துவர் என மொத்தம் 5 பேர் இருப்பார்கள். இவர்கள் கேள்விகளை கேட்பார்கள். அதில், சாம் ராஜேஸ்வரன் நடத்தும் மனிதநேயம்-அப்பல்லோ பயிற்சி மையத்துடன் இணைந்த ஒரு அரசியல் பிரமுகர் இந்த 3ம் கட்ட தேர்வுக்கு உதவி செய்வார். அவர், பல ஆண்டுகாலம் அரசியலில் இருப்பதால், டிஎன்பிஎஸ்சியில் அவருக்கு தெரிந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள், அரசியல்வாதிகள்தான் உறுப்பினர்களாக இருப்பார்கள். அவர்கள் மூலம் 3ம் கட்ட தேர்வில் மதிப்பெண் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. 

அதில் குறிப்பாக நேர்முகத்தேர்வு நடைபெறும் அன்று ஒரு குறிப்பிட்ட கலரில் ஆண்கள், பெண்கள் உடையணிந்து செல்ல வேண்டும் என்பது ரகசிய குறியீடாக இருக்கும். 2016ம் ஆண்டு நீல நிறத்தில், உடையணிந்து செல்ல வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  அதன்படி 62 பேரும், நீல நிற உடையணிந்து சென்று வந்தனர். அப்போது நேர்முகத்தேர்வை நடத்துகிறவர்கள், நீல நிற உடையணிந்து வருகிறவர்களுக்கு மார்க்குகளை வாரி வழங்குவார்கள். இந்த 3 கட்டத்தில் மார்க்குகள் அதிக அளவில் கிடைத்து
விடும்.
அதையும் மீறி சிலர் குறைவாக மதிப்பெண் எடுத்தால், 4வது கட்டத்தை தேர்ந்தெடுப்பார்கள். அதில் மனித நேயம்-அப்பல்லோ பயிற்சி மையத்தில் படிப்பவர்கள் மை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் தமிழகம் முழுவதும் தற்போது தேர்வு எழுதுகிறவர்கள் பால் பாய்ன்ட் பேனா மூலம்தான் எழுதுகின்றனர். இதனால் மை பேனாவை பயன்படுத்தினால் அந்த கேள்வித்தாள் மனிதநேயம்-அப்பல்லோ பயிற்சி மையத்தில் படிப்பவர்கள் என்று அர்த்தம். அந்த விடைத்தாள்களுக்கு திருத்துகிறவர்கள் அதிக மதிப்பெண்களை போடுவார்கள். இவ்வாறு 4 கட்டமாக இந்த முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலம் 62 பேர் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று, தற்போது டிஎஸ்பிக்களாகவும், டிஆர்ஓக்களாகவும் பணியாற்றி வருகின்றனர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

33 தொடக்க பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்கவில்லை - அதிர்ச்சி தகவல்:

அதிக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து : 'பீஸ்' விபரத்தை பள்ளிகளில் ஒட்ட உத்தரவு

தனியார் பள்ளிகளில், கல்வி கட்டண விபரத்தை, பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். ''அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிகமாக வசூலிக்கும் பள்ளிகள் மீது, அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட 
நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.தமிழக அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவது, நிர்வாக முறைகளை சீரமைப்பது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. இதில், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், முதன்மை செயலர் பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வி இயக்குனர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, புதிய பாடத்திட்டத்தை, முறைப்படி மாணவர்களுக்கு கற்றுத் தருவது, காலி பணியிடங்களை கண்டறிந்து, ஆசிரியர்களை நியமிப்பது போன்ற விஷயங்கள் குறித்து, இக்கூட்டத்தில், பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
பின், அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: அரசு தொடக்க பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில், இலவச, 'அட்மிஷன்' கேட்டு, 1.32 லட்சம் பேர், பதிவு செய்துள்ளனர். 
கடும் நடவடிக்கை : விரைவில் குலுக்கல் நடத்தி, இவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். அரசு நடத்திய பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவ - மாணவியர், 'நீட்' நுழைவுத்தேர்வு எளிதாக இருந்ததாக கூறியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், மாசிநாயக்கன் பள்ளி யில், பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும், தோல்வி அடைந்துள்ளனர். இதற்கு, அவர்கள் தெலுங்கு மொழி பேசுவோர் என்பதும் காரணம். அந்த பள்ளியில், தெலுங்கு தெரிந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளித்து, துணை தேர்வில் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.தனியார் பள்ளிகளில், அதிக கட்டணம் வசூலிப்பதாக, பெற்றோர் புகார் அளித்தால், அந்த பள்ளிகளின் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளின் அறிவிப்பு பலகையில், அரசு நிர்ணயித்துள்ள கட்டண விபர பட்டியலை ஒட்ட வேண்டும். 
சிறப்பு பயிற்சி: அதிக கட்டணம் வாங்கினால், அந்த பள்ளிக்கான தடையில்லா சான்றிதழ் ரத்து மற்றும் அங்கீகாரம் ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். புதிய பாடத்திட்டத்தை பயிற்றுவிப்பது குறித்து, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். ஜூன், 1ல், திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் வெப்பம் நிலவி வருகிறது. பிற மாவட்டங்களில் மழை பெய்து வெப்பத்தை தணித்து வருகிறது. புதிய பாடத்திட்டத்தின்படி பாடங்களை மாணவர்கள் கற்க வேண்டும் என்பதால், கோடை விடுமுறையை நீட்டிக்க முடியாது. திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளி மாணவர்கள் சீருடை : பெற்றோர் குழப்பம்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 1ல் மீண்டும் துவங்க உள்ளன. அரசு, உதவிபெறும் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு சீருடைகள் வண்ணமும், அமைப்பும் 
மாற்றப்பட்டுள்ளன. ஆனால் 1முதல் 8 வரை படிக்கும் மாணவர்களின் சீருடை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இதனால் அவர்களின் பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.அவர்கள் கூறுகையில், 'சீருடை வண்ணம் குறித்து கல்வி அதிகாரிகளுக்கு முறையான தகவல் இல்லாததால் எங்களிடம் தெளிவாக கூற முடியவில்லை. புதிய சீருடை வாங்குவதில் குழப்பம் நீடிக்கிறது,' என்றனர்.

890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை

10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 890 அரசு பள்ளிகளை இயங்காமல் நிறுத்தி வைப்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

தமிழக அரசு சார்பில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.

தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. குழந்தைகளின் தொடக்கக்கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக மதிய உணவு திட்டம், விலையில்லா சீருடைகள், புத்தகங்கள், காலணி போன்ற திட்டங்களை அரசு செயல் படுத்தி வருகிறது.

எனினும் அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் மிகவும் குறைவாக இருப்பதாக தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கம், தொடக்கக்கல்வி இயக்கம் ஆகியவை ஆய்வு நடத்தி கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து அரசு தொடக்கப்பள்ளிகளில் எத்தனை குழந்தைகள் படிக்கிறார் கள்? எத்தனை ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள்? எத்தனை சத்துணவு ஆயாக்கள் இருக்கிறார்கள்? போன்ற விகிதாச்சார விவரங்களை தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை கணக்கில் எடுத்தது.

அரசு நடத்திய ஆய்வில் 890 தொடக்கப்பள்ளிகளில் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக இருப்பது தெரிய வந்தது. 29 பஞ்சாயத்து யூனியன் தொடக் கப்பள்ளி, 4 நகராட்சி தொடக் கப்பள்ளி என 33 தொடக்கப்பள்ளிகளில் ஒரு மாணவ- மாணவி கூட படிக்கவில்லை என்பதும், அங்கு ஆயாக்கள் மட்டுமே தினமும் வந்து செல்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தது.

பெரும்பாலான பள்ளிகளில் ஒற்றை இலக்கில் மாணவ- மாணவிகள் எண்ணிக்கை இருந்தது தெரிய வந்தது. இதனால் அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பள்ளிகளில் படிக் கும் மாணவ-மாணவிகளை வேறு பள்ளிகளில் சேர்த்துவிட அரசு முடிவு செய்துள்ளது.

அப்படியே அந்த மாணவர் கள் அருகில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று விட்டாலும், இயங்காமல் இருக்கும் இந்த பள்ளிக்கூடங்களை, மாணவர்கள் அங்கு வந்து படிப்பதற்கு நன்கு வசதி உள்ள இடங்களாக மாற்றுவதற்கு அரசு உத்தேசித்துள்ளது.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் 32 மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் 10-க்கும் குறைவான மாணவ-மாணவிகள் படிக்கும் 890 தொடக்கப்பள்ளிகளில் மாற்றுத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே 890 தொடக்கப்பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர்கள் போராட வேண்டாம்: அமைச்சர் வேண்டுகோள்

ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை விட்டு பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆசிரியர்கள் பணியிடங்களை குறைக்கக் கூடாது என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்படுகிறது

ஆசிரியர்கள் ஸ்டிரைக் என்று சொன்னால் மக்கள் ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று கேட்கிறார்–்கள். 365 நாட்கள் பணி நாட்கள் உள்ள நிலையில் 210 நாட்கள் தான் பள்ளி நடக்கிறது. அதிலே தேர்வுக்காக குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் 170 முதல் 175 நாட்கள் தான் பள்ளி நடக்கிறது. புதிய பாடங்களை நடத்துவதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது

பள்ளிகளை உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வசதியாக தொடக்கப் பள்ளிகள்  30 பள்ளிகளாக பிரிக்கப்பட்டு  அவர்கள் ஆண்டுக்கு 2 முறையாவது நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்

மேலும், பள்ளிகள் மீது குற்றம் குறைகள் மற்றும் புகார்கள் வந்தால் அடுத்த 1 மணி நேரத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பதில் கொடுத்தாக வேண்டும். அதற்கான தீர்வுகளையும் அவர்கள் உடனடியாக செய்ய வேண்டிய அனுமதியும் வழங்கப்படுகிறது. வேகமாக பணி நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு

அரசுக்கு நிதி நெருக்கடி உள்ள நிலையில், ஒரு நபர் கமிட்டியிடம் ஆசிரியர்கள் அலுவலர்கள் உங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இந்நிலையில் பள்ளி திறந்த பிறகு ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர்

அதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே ஆசிரியர்கள் உண்ணா விரதம் போன்ற போராட்டங்களை கைவிட்டு பள்ளிகள் சிறப்பாக செயல்பட ஒத்துழைக்க வேண்டும்

கட்டாயகல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க ஆன்லைன் மூலம் 1 லட்சத்து 32 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன

இரண்டு நாட்களில் குழு அமைத்து அவற்றுக்கு தீர்வு காணப்படும். தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவற்றை பள்ளி தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும்

கூடுதல் கட்டணம் கேட்டால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணகிரியில் உள்ள பள்ளி ஒன்றில் 29 மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்று தெரியவந்துள்ளது

அங்கு தெலுங்கு மொழி ஆசிரியர் இல்லை. அதனால் இந்த நிலை. எனவே அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து ஜூன் 25ம் தேதி நடக்க உள்ள தேர்வில் தேர்ச்சி பெற ஏற்பாடு செய்யப்படும்

பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  ஜூன் மாத இறுதிக்குள் நிரப்பப்படும். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு குறிப்பிட்ட நாளில் வெளியாகும்


பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதி பிளஸ் 1 வகுப்பில் சேர்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

காலமுறை ஊதியம் கேட்டு மாற்றுத்திறன் ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டம்

                              


காலமுறை ஊதியம் கேட்டு மாற்றுத்திறன் ஆசிரியர்கள் திங்களன்று (மே 21) சென்னை பள்ளிக் கல்வி இயக்ககத்தில் (டிபிஐ) காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.2012ம் ஆண்டு அரசுப்பள்ளிகளில் 6, 7, 8ஆம் வகுப்புகளுக்கு ஓவியம், இசை, தையல் உள்ளிட்ட கலைப்


பாடங்களை கற்பிக்க சுமார் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டனர். இவர்களில் 200 பேர் மாற்றுத் திறனாளிகள். 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தியில் நிர்ணயிக்கப் பட்ட இந்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு தற்போது 7 ஆயிரத்து 700 ரூபாய் வழங்கப்படுகிறது.தமிழக அரசின் துறைகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்க 2008ம் ஆண்டு அரசாணை 151 வெளியிடப்பட்டது. இதற்கு தடையாக உள்ள விதிகளை நீக்கிக் கொள்ளும் அதிகாரத்தையும் துறையின் தலைவருக்கு வழங்கப் பட்டுள்ளது. இந்த அரசாணை பள்ளிக்கல்வித்துறையில் அமலாகவில்லை.அரசாணை 151ஐ செயல்படுத்தகோரி பள்ளிகல்வித் துறை அமைச் சர், தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உள்ளிட்ட உயர்அதிகாரிகளிடம் மாற்றுத்திறன் ஆசிரியர்கள் மனு அளித்துள்ளனர். அதேசமயம் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரும் அரசாணையை செயல்படுத்துமாறு பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதன் பிறகும் அரசாணை அமலாக்கப்படவில்லை.இந்நிலையில் அரசாணை 151ன்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை பணிவரன் முறை செய்ய வேண்டும், 6 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் கலைப் பாடங்களை கற்பிக்கும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப்போராட்டம் நடைபெறுகிறது.தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கிளை அமைப்பான பகுதிநேர மாற்றுத்திறன் ஆசிரியர்கள் சங்கம் இந்தப்போராட்டத்தை நடத்தி வருகிறது. அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் ஆசிரியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி அழைத்துச் சென்றனர்.