மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில்
19 மாநிலங்களில் ஊதிய பாக்கியில் ரூ.3,066 கோடி இன்னும் வழங்கப்படாமல் இருப்பதாக இந்தியா ஸ்பெண்ட் அறிக்கை கூறுகிறது.
பொதுவேலை செய்ய விருப்பமுள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு அரசின் குறைந்த ஊதியத்துடன் ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்குக் கட்டாய சிறப்புத் திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம்தான் ’மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்’. ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரையில் ஹரியானா மாநிலத்தில் இத்திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு எவ்வித ஊதியமும் வழங்கப்படவில்லை என்று சங்கர்ச் மோர்ச்சா என்ற பொதுநலச் சங்கம் குற்றஞ்சாட்டுகிறது.
இதேபோல, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் செப்டம்பர் 1ஆம் தேதி முதலும், கேரளா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாகவும் ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் 19 மாநிலங்களில் ரூ.3,066 கோடி ஊதிய பாக்கி வழங்கப்படவில்லை. இதனால் 9.2 கோடி ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலைக்கான ஊதியமானது 15 நாட்களில் வழங்கப்படும். ஆனால் மாதக்கணக்கில் ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதால் இந்த வேலையை மட்டுமே நம்பியுள்ள மக்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்காமல் தாமதப்படுத்தினால் அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். கடந்த ஆண்டில் ஊதியம் தருவதில் ஏற்பட்ட தாமதத்திற்கான இழப்பீட்டுத் தொகை ரூ.689 கோடியாக இருந்ததாக அரசு மதிப்பிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக