மின் விபத்தால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, அலட்சியமாக செயல்படும் பொறியாளர்களை,
மின் வாரியம், 'டிஸ்மிஸ்' செய்ய முடிவு செய்துள்ளது.புதிய மின் இணைப்புக்கு லஞ்சம், பணியில் அலட்சியம் உள்ளிட்ட, ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் ஊழியர்கள், பொறியாளர்கள் மீது, மின் வாரியம், இடமாறுதல், 'சஸ்பெண்ட்' ஆகிய நடவடிக்கைகளை எடுக்கிறது. சஸ்பெண்ட் செய்யும் நபர், அரசியல் சிபாரிசுடன், சில தினங்களில், மீண்டும் பணியில் சேர்ந்து விடுகிறார். இதனால், நடவடிக்கை என்பது, கண்துடைப்பு நாடகமாக இருப்பதாக, மக்கள் கருதுகின்றனர்.
சென்னை, கொடுங்கையூரில், நேற்று முன்தினம் நடந்த மின் விபத்தில் சிக்கி,
இரு சிறுமியர் உயிரிழந்தது, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.அதற்கு காரணமான, மூன்று பொறியாளர்கள், ஐந்து ஊழியர்களை, மின் வாரியம் சஸ்பெண்ட் செய்தது. இதற்கு, பலரும் எதிர்ப்பு தெரிவித்து, 'டிஸ்மிஸ்' செய்யும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
சென்னை, தலைமை செயலகத்தில், கொடுங்கையூர் மின் விபத்து தொடர்பாக, மின் துறை அமைச்சர், தங்கமணி மற்றும் மின் வாரிய அதிகாரிகளுடன், நேற்று, முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதில், மின் விபத்தால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, அலட்சியமாக செயல்படும் பொறியாளர்களை, 'டிஸ்மிஸ்' செய்ய, மின் வாரியத்திற்கு, அரசு தரப்பில் ஒப்புதல் அளித்ததாக தெரிகிறது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான், தவறுகள் குறையும். ஆனால், மின் வாரியத் தில், சஸ்பெண்ட் செய்யும் நபர், ஆட்சியாளர் களின் உதவியுடன், இரு தினங்களில்
வேலைக்கு வந்து விடுகிறார். அந்த விபரம், பலருக்கு தெரியாது.இதனால், வழக்கம்போல் பலர் அலட்சியமாக உள்ளனர். இதனால், வாரியத்திற்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, மின் விபத்தால் உயிரிழப்பு ஏற்பட காரணமாகும் பொறியாளர், ஊழியர்கள் மீது, உச்சபட்ச தண்டனையாக, 'டிஸ்மிஸ்' செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்:
சென்னை, கொடுங்கையூரில், மழைநீரில் மின் வினியோக பெட்டி மூழ்கி இருந்தது. அதில் ஏற்பட்ட மின் கசிவால், மழைநீரில் மின்சாரம் பாய்ந்தது. இது தெரியாமல், மழைநீரில் நடந்து சென்ற, பாவனா மற்றும் யுவஸ்ரீ என்ற சிறுமியர், மின்சாரம் தாக்கி, பரிதாபமாக உயிரி ழந்தனர். இந்த சம்பவம் குறித்து, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், வழக்கறிஞர், ஜார்ஜ் வில்லியம்ஸ் முறையிட்டார்.
இதையடுத்து, 'அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது?' என, முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது. அதற்கு, சிறப்பு பிளீடர், ராஜகோபாலன், ''மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என, 8 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர். பலியான சிறுமியரின் குடும்பத்துக்கு, இழப்பீடு வழங்கப்படுகிறது,'' என்றார்.
அதைத் தொடர்ந்து, நீதிபதிகள், 'மனித உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை, அரசு உறுதி செய்ய வேண்டும். இழப்பீடு வழங்குவது உட்பட, சம்பவம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்' என, அரசுக்கு உத்தரவிட்டனர். விசாரணை, இன்றும் தொடர்கிறது.