யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/12/15

வி.ஏ.ஓ., தேர்வு தேதி மாற்றம்

சென்னை:வி.ஏ.ஓ., தேர்வு, பிப்., 28க்கு மாற்றப்பட்டுள்ளது.இதுகுறித்து, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு:கிராம நிர்வாக அதிகாரி எனப்படும், வி.ஏ.ஓ., பதவிக்கான தேர்வு, 2016 பிப்., 14ல் நடக்க இருந்தது. மழை காரணமாக, பிப்., 28க்கு மாற்றப்பட்டு உள்ளது.

நெடுஞ்சாலை துறையில், 213 உதவி பொறியாளர் (கட்டடவியல்) காலி பணியிடங்களுக்கு, செப்., 6ல் நடந்த தேர்வில், 424 பேர் தற்காலிகமாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, டிச., 28 முதல், 30ம் தேதி வரை சரிபார்ப்பு நடக்கும். அழைப்பாணை விவரம், தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

தேசிய உதவித்தொகை தகுதி தேர்வு ஜன. 23ல் நடக்கிறது

விருதுநகர்,:எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி படிப்பு உதவி தொகை தகுதித்தேர்வு ஜன.,23ல் நடக்கிறது.ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தேசிய வருவாய் வழி படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு மாதந்தோறும் 500 ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது. இத்திட்டத்தில் உதவி பெற, தகுதித் தேர்வு ஜன.,23ல் நடக்கிறது.

இத்தேர்வு எழுதும் மாணவர்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்க வேண்டும். ஏழாம் வகுப்பு இறுதி தேர்வில் 55 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 1.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
மாணவர்கள், தலைமை ஆசிரியரிடம் விண்ணப்ப படிவத்தை பெற்று, 50 ரூபாய் தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச.,24க்குள் தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும்.

தேர்வுத்துறைக்கு புதிய இயக்குனர்

சென்னை: தமிழக அரசு தேர்வு துறையின் புதிய இயக்குனராக, வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.அரசுத் தேர்வுத்துறையின் இயக்குனராக பணியாற்றிய தேவராஜன், கடந்த ஜூலையில் ஓய்வுபெற்றதை அடுத்து, காலியாக இருந்த பதவிக்கு, தமிழ்நாடு ஆசிரியர் வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே, தேர்வுத்துறை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனராக இருந்த உமா, பதவி உயர்வு பெற்று, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ஆகியுள்ளார்.

புத்தகங்கள் இழந்தோருக்கு 'டிஜிட்டல்' பாடம்

சமீபத்திய மழை, வெள்ளத்தால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட மாணவ, மாணவியர், தங்களின் பாட புத்தகம், நோட்டு போன்றவற்றை இழந்துள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும், இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

ஆனால், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகம் கிடைக்காத நிலை உள்ளது. இந்நிலையில், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கில பாடப் புத்தகங்களை, 'நம்ம ஊரு அறக்கட்டளை' அமைப்பு சார்பில், 'நம்ம கல்வி' என்ற பெயரில், இலவசமாக கணினியில் வெளியிடப்பட்டுள்ளது.அறக்கட்டளைநம்ம ஊரு அறக்கட்டளையின், http://clsl.cu/ என்ற இணையதள இணைப்பில், இந்த புத்தகங்களை, ஆன் - லைனில் பார்க்க முடியும். 

இதுகுறித்து, அறக்கட்டளை நிறுவனர் நடராஜன் கூறியதாவது:வெறும் வாசித்தல் என்ற முறைக்கு கூடுதலாக, மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும் வகையில், பாடங்களை விளக்கும் பின்னணி குரலுடன், பாட வரிகள் மற்றும் படங்களை, 'வீடியோ' மூலம் திரையில் விளக்கும் வகையில், கணினி வழியில் வெளியிட்டுள்ளோம்.எளிதில் படிக்கலாம்

பாடம் முடிந்ததும், பாடம் குறித்து மாணவர்கள் புரிந்து கொண்டது குறித்த கேள்விகளும், விடைகளும், கணினி திரையில் இடம் பெறுகிறது. சமச்சீர் பாட புத்தகத்தின் அம்சங்களில், எந்த மாற்றமும் இன்றி, இந்த கணினி வழி பாடங்களை பதிவேற்றம் செய்து உள்ளதால், புத்தகம் உள்ளவர்களும், இல்லாதவர்களும் எளிதில் படிக்கலாம்.

தமிழ் மற்றும் ஆங்கில வழியில், 6 முதல் 8ம் வகுப்பு வரை, புத்தகங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. கணினி இல்லாதவர்கள், எங்கள் சிறப்பு அப்ளி கேஷனை மொபைல் போனில், பதிவிறக்கம் செய்து, பாடங்களை படிக்கலாம். விரைவில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான பாடங்களை வெளியிட உள்ளோம். எங்கள் தளத்தை பயன்படுத்த, எந்த கட்டணமும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்

கிறிஸ்துமஸ் விடுமுறைபள்ளிகளுக்கு உண்டா?

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட, மழை விடுமுறையை கணக்கில் கொண்டு, அரையாண்டு தேர்வு, ஜனவரிக்கு மாற்றப்பட்டது. அதன் பின், தேர்வு மற்றும் விடுமுறை குறித்து, எந்த அறிவிப்பும் இல்லை.இந்நிலையில், நான்கு மாவட்டங்களில், 14ம் தேதி முதல், வகுப்புகள் துவங்கியுள்ளன.
எனவே, கிறிஸ்துமஸ், மீலாடி நபி மற்றும் புத்தாண்டு விடுமுறை உண்டா என, பள்ளிகள் எதிர்பார்ப்பில் உள்ளன. ஏற்கனவே, மழை விடுமுறை அறிவிப்பில், முன்கூட்டியே திட்டமிடாமல், தினமும் விடுமுறை அறிவித்த கல்வித்துறை, தற்போது, திட்டமிடப்பட்ட பண்டிகை கால விடுமுறை அறிவிப்பிலும், மெத்தனமாக உள்ளது.
இதுகுறித்து, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: வெள்ளம் பாதித்த மாவட்டங்களை தவிர மற்ற, 28 மாவட்டங்களில், திட்டமிட்ட படி பாடங்கள் முடிக்கப்பட்டுள்ளன. எனவே, கல்வி ஆண்டின் படி, 22ம் தேதி செவ்வாய் கிழமையுடன், 2ம் பருவ மற்றும் அரையாண்டு வேலை நாட்கள் முடிகின்றன. 23 முதல் ஜனவரி, 1 வரை, மீலாடி நபி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை என, கல்வி ஆண்டுக்கான காலண்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பை அறிவித்த கல்வித்துறை, விடுமுறை குறித்து எந்த முடிவும் அறிவிக்காமல் உள்ளதால், குழப்பம் நீடிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு விரைவில் தேர்வு?

நடப்பு கல்வியாண்டு, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.வரும், 2016ல், தமிழக சட்டசபை தேர்தல் வருவதால், பொதுத் தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில், சென்னை உட்பட, 32 வருவாய் மாவட்டங்களில், பிளஸ் 2க்கு, 2,400; 10ம் வகுப்புக்கு, 3,500 மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பள்ளிகளை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது.பிளஸ் 2 தேர்வில், தனித்தேர்வர்கள் உட்பட, 8.5 லட்சம் பேர்; 10ம் வகுப்பு தேர்வில், 10.5 லட்சம் பேர் பங்கேற்கலாம் என தெரிகிறது. இதேபோல், வினாத்தாள் தயாரிப்பு, பார் கோடுடன் கூடிய விடைத்தாள் மற்றும் முகப்பு சீட்டு தயாரிப்பு போன்ற பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில், தேர்வு தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்
படுகிறது. இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:மழை வெள்ளத்தால், நடப்பாண்டு, அரையாண்டு தேர்வு நடப்பதில் சிக்கல் உள்ளது. ஆனாலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஏற்கனவே பாடங்கள் நடத்தி முடித்துவிட்டனர். அதனால், முன்கூட்டியே தேர்வு நடத்தினால், மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்; எனினும், அது குறித்து ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆசிரியர்களின் தொடர் மறியல் ஒத்திவைப்பு

வெள்ள பாதிப்பைக் கருத்தில்கொண்டு, ஆசிரியர் இயக்கங்கள் டிசம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படவிருந்த தொடர் மறியல் போராட்டம் ஜனவரி 30, 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜாக்டோ) மாநிலத் தொடர்பாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

 மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், வெள்ள பாதிப்புக்காக போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
 மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நீண்ட நாள்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால், சிறப்பு வகுப்புகள் நடத்தவும் "ஜாக்டோ'வின் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக இளங்கோவன் தெரிவித்தார்.

அரசுத் தேர்வுகள் இயக்குநராக தண்.வசுந்தராதேவி மீண்டும் நியமனம்

அரசுத் தேர்வுகள் இயக்குநராக தண்.வசுந்தராதேவி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
 இவர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்- செயலராக இருந்தார். அரசுத் தேர்வுகள் இயக்குநராக இருந்த கே.தேவராஜன் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்பையும் வசுந்தராதேவி கூடுதலாக கவனித்து வந்தார். மார்ச் மாதத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளதால், முழு நேரமாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 இவர் 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்- செயலராக இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 புதிய உறுப்பினர் செயலர்: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கூடுதல் உறுப்பினராக இருந்த டி.உமா (பள்ளிக் கல்வி இணை இயக்குநர்), உறுப்பினர்-செயலராக (பள்ளிக் கல்வி இயக்குநர்) பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் (பணியாளர் நலன்) உள்ளிட்டப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம்: தமிழக அரசு புதிய உத்தரவு

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியத்தை அளிப்பதற்கான உத்தரவில் சில நடைமுறைகளை தமிழக அரசு எளிதாக்கியுள்ளது.
 மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியத்தை அளிக்க தமிழக அரசு டிசம்பர் 13-இல் ஒரு உத்தரவு பிறப்பித்தது. 
 அதில், ஒரு நாள் அல்லது விரும்பும் நாள்களைத் தெரிவித்து அதற்கான தொகையைப் பிடித்தம் செய்து கொள்ள ஒப்புதல் அளிக்கலாம். இதற்கான ஒப்புதல் கடிதத்தை அளிக்க வேண்டும். தொகையைப் பிடித்தம் செய்து அதற்கான காசோலையையும், ஊதியம் பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்கள் விவரங்கள் அடங்கிய பட்டியலையும் சம்பந்தப்பட்ட துறைக்கே கருவூலம்-கணக்குத் துறை அதிகாரிகள் அனுப்பி வைப்பர்' என்று தமிழக அரசின் குறிப்பிடப்பட்டிருந்தது.

 மேலும், கருவூலத் துறை அதிகாரியால் அனுப்பப்படும் காசோலையும், பெயர்ப் பட்டியலும் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியால் தமிழக அரசுக்கு அனுப்பப்படும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நடைமுறை இப்போது மாற்றப்பட்டுள்ளது.
 இதுகுறித்து, பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலர் பி.டபிள்யூ.சி. டேவிதார் அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:-
 ""டிசம்பர் மாதத்துக்கான அரசு ஊழியர்களின் ஒருநாள் அல்லது அதற்கு மேற்பட்ட (அவர்கள் விரும்பினால்) ஊதியம் எவ்வளவு என்பதை கணினி வழியிலான சம்பளக் கணக்கு பட்டியலில் கணக்கிட்டுக் கொள்ளலாம். இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகையை, நேரடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான சேமிப்புக் கணக்குக்கு அனுப்பி வைக்கலாம். மாத ஊதியத்தை வரவு வைக்கும் போது இந்த நிதியைக் கணக்கில் செலுத்தலாம். இதுகுறித்த தகவலை மாவட்ட அதிகாரிகள், துறைத் தலைவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

உயர் கல்வித்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரனை

அரசு, அரசு உதவி பெறும், அரச உதவி பெறாத கலை மற்றும் அறிவியல் ககல்லூரிகளில் மாணவர் சேர்கையில் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறிப்பிட்டுள்ளன. அதன்படி கல்லூரிகள்தகுதி(மெரிட்) அடிப்படை முறை பின்பற்ற வேண்டும் என்று சட்டம் உள்ளது.
ஆனால் சில ஆயிரம் விண்ணப்பங்களை விற்பனை செய்து மாணவர்களின் மதிப்பெண், மாணவர்களின் தகுதி (மெரிட்) அடிப்படையில் பட்டியலை லயோலா கல்லூரி வெளியீடமால் தன்னிச்சையாகதேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பட்டியலை லயோலா கல்லூரி வெளியிட்டுள்ளது.
2015-16 கல்வி ஆண்டின் நடைப்பெற்றுள்ள மாணவர்களின் சேர்க்கையை இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை நீதிபதி சத்தியநாராயணா அவர்கள் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி லயோலே கல்லூரி மாணவர்கள் சேர்க்கை குறித்த உயர் கல்வித்துறை 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை மனுதாராருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால், நினைவூட்டால் கடிதம் கொடுத்தும் இன்று வரை இதனை உயர் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை செய்து அறிக்கையை வழக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர் கல்வித்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று (17.12.2015) விசாணைக்கு வருகின்றது.

அடுத்தடுத்து தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி?

சென்னையில் கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாகப் பள்ளிகள் நீண்ட விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், அடுத்தடுத்து தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் கவலை பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக தொடர்ந்து 33 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 14 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அரையாண்டு தேர்வு மற்றும் பொதுத்தேர்வு அடுத்தடுத்து எதிர்கொள்ள உள்ள நிலையில் மாணவர்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

தேர்வை ஒத்தி வைக்கக்கூடாது என்றும் தேர்வை எளிமையாக நடத்த வேண்டும் என்றும் ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு மனநல ஆலோசகர் மூலம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் மாணவர்களிடையே ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்ற அளவில் மாணவர்களிடையே பலவித கேள்விகள் நிலவி வருகின்றது. இதற்கு, தமிழக அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ள பாதிப்பு: பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களில் சிறப்பு வகுப்புகள் இலவசமாக நடத்தப்படும் என ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கம் மேகநாதன் கூறினார்.
 இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியது:
 சென்னையில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் பள்ளி மாணவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக எங்களது கல்வி நிறுவனங்களின் சார்பில் ஸ்ரீபெரும்புதூர், கீழ்ப்பாக்கம், ராமாபுரம் ஆகிய இடங்களில் முக்கியப் பாடங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.

 இந்த வகுப்புகளை பேராசிரியர் முத்துசாமி ஒருங்கிணைப்பார். இதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் hod.maths@rajalakshmi.edu.in என்ற இ மெயிலில் பதிவு செய்து கொள்ளலாம். இவர்களுக்கு டிசம்பர் 19 முதல் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். வார இறுதி நாள்களில் இந்த வகுப்புகள் நடைபெறும்.
 அதேபோல், இந்த வெள்ளத்தில் அனைத்தையும் இழந்த தள்ளுவண்டி வியாபாரிகள், சிறு, குறு வியாபாரிகள் ஆகியோருக்கு உதவியும், வங்கிக் கடன் பெற ஆலோசனையும் இலவசமாக வழங்கப்படும். இதற்கான ஒருங்கிணைப்பாளராக எஸ்.கௌதம் செயல்படுவார். இவரை 8939528028 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் தற்கொலையில் 2வது இடத்தில் தமிழகம்!

கடந்த 2014ம் ஆண்டில் 8,068மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இப்பட்டியலில் தமிழகம் 2வது இடம் பிடித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ராஜ்யசபாவில் தெரிவித்ததாவது: மனஅழுத்தம் மற்றும் பல்வேறு காரணங்களால், கடந்த 2014ம் ஆண்டில் 8,068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் பல்வேறு மாநிலங்களில் 7,753 மாணவர்களும், யூனியன் பிரதேசங்களில் 315 மாணவர்களும் அடங்குவர். தமிழகம் 2வது இடம் : இதில் முதல் மூன்று இடங்கள் முறையே மகாராஷ்டிரா, தமிழகம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன.

மகாராஷ்டிராவில் 1,191 மாணவர்களும், அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 853 மாணவர்களும், மேற்கு வங்கத்தில் 709 மாணவர்களும் தற்கொலை செய்துள்ளனர். 2013லும் மகாராஷ்டிரா முதலிடம் : 2013ம் ஆண்டில் நாடெங்கிலும் 8,423 மாணவர்கள் தற்கொலை செய்து இறந்தனர். இதிலும் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,141 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். 2012ல் 6,654 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதில் மேற்குவங்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் விவரம் கணக்கில் இல்லை. இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 11-ல் அரையாண்டு தேர்வு: தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு வரும் ஜனவரி மாதம் 11-ம் தேதி துவங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தன. ஜனவரி 11-ம் தேதி துவங்கும் தேர்வு அந்த மாதம் 27-ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மீறி ஜனவரி 11-ம் தேதிக்கு முன்னரே அரையாண்டு தேர்வை நடத்தினால், தேர்வு நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

CPS news : உயர்நீதிமன்றம் உத்தரவு :

புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற
தேனி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தொட்டப்பன், கற்பகவல்லி , சுகிர்தா மற்றும் புஷ்பம் ஆகியோர்

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஓய்வூதியம் வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்தனர். இம்மனுக்களை விசாரணை செய்த நீதியரசர். ராஜா இவர்களுக்கு 2 மாத காலத்தில் ஓய்வூதிய தொகை வழங்க  உத்தரவு பிறப்பித்தார்.
திண்டுக்கல் எங்கெல்ஸ்

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 

இவ்வழக்குகளை க.பரமத்தி ஒன்றிய ஆசிரியர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு எண் விவரம். WP.15724, WP.15725, WP.15726, WP.15727, WP.15728/2014.

NMMS ஊக்கத்தொகை தேர்வில் சிக்கல்:

பள்ளிக் கல்வி முடிக்கும் வரை, இடைநிற்றல் இல்லாமல் படிக்க, உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, தேசிய திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு, மாதம், 500 ரூபாய் வீதம், பிளஸ் 2 முடிக்கும் வரை வழங்கப்படும்.

இந்த ஆண்டு தேர்வுக்கான விண்ணப்பங்களை, 24ம் தேதி வரை, தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என, தலைமை ஆசிரியர்களுக்கு, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்தார். ஆனால், இணையதளத்துக்கான, 'பாஸ்வேர்டு' வழங்கப்படவில்லை. அதனால், மாணவர்களின் விவரங்களை, இணையதளத்தில் பதிவேற்ற முடியாமல், தலைமை ஆசிரியர்கள் திணறுகின்றனர்.

பி.எப்., பணத்தை உடனே எடுக்கலாம்!

பி.எப்., சந்தாதாரர்கள், அவர்களது கணக்கில் இருந்து பணம் எடுக்க, புது வசதிஅறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதுகுறித்து, பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக வட்டாரம் கூறியதாவது:ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும், பி.எப்., தொகைக்கு, பொது கணக்கு எண் எனப்படும், யு.ஏ.என்., வழங்கப்படுகிறது. நாட்டில், நான்கு கோடி தொழிலாளர்களுக்கு, யு.ஏ.என்., அளிக்கப்பட்டு உள்ளது.

இதில், இரண்டு கோடி தொழிலாளர்கள், யு.ஏ.என்., முறையை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர்.மீதம் உள்ளவர்களுக்கு, யு.ஏ.என்., பயன்பாட்டு முறை பற்றி போதியதகவல்கள் இல்லை. இவர்களும், விரைவில், யு.ஏ.என்., முறையை பயன்படுத்த கற்றுத் தரப்படுவர். பொது கணக்கு எண்ணுடன், ஆதார் மற்றும் வங்கி கணக்கு எண்களை இணைக்க, சந்தாதாரர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதன்படி, ஆதார் மற்றும் வங்கிக் கணக்குகளை இணைத்த சந்தாதாரர்கள், அவர்களுடைய இருப்புத் தொகையில் இருந்து, தேவையான தொகையை, அவர்களே எடுத்துக்கொள்ளலாம். இதற்கு, வேலை அளிக்கும் நிறுவனத்தின் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. இத்திட்டம் மூலம், பி.எப்., தொகையை, வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்க முடியாது. மேலும், மூன்றாம் நபர் மூலம், பி.எப்., தொகை எடுப்பதால் ஏற்படும் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது

பாதிக்கப்பட்டவர்கள் வங்கி கணக்கில் 10 நாட்களுக்குள்நிவாரண தொகை:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 10 நாட்களுக்குள், வங்கி கணக்கில் நிவாரண தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சென்னை மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தலா, 5,000 ரூபாய் வழங்கப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார்.
கடந்த எட்டு நாட்களுக்கு முன், சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து, தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் வீடு வீடாகசென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் ஆதார் எண், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய எண்களை பிரத்யோக விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்து, அந்த குடும்ப உறுப்பினர்களிடம் கையொப்பம் பெற்று வருகின்றனர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அரசின், 'லினக்ஸ்' மென்பொருளில், பதிவுசெய்வதற்காக தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் துறை எழுத்தர், 'டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்'களால் கணிப்பொறியில் பூர்த்தி செய்யப்படுகிறது. முதல் மூன்று நாள் சென்னை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும், 250 ஊழியர்கள் பணிபுரிந்தனர். அவர்கள், ஒவ்வொருவரும் நாள் ஒன்றுக்கு, 300 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.விரைவாக நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என்பதற்காக, நான்காவது நாளிலிருந்து, பிற மாவட்டங்களில் இருந்து ஊழியர்கள், 130 பேர் சென்னை வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு இரவு பணி வழங்கப்பட்டு உள்ளது. ஊழியர் ஒருவர் தினமும், 200 விண்ணப்பங்களை பதிவு செய்யவேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, 9.85 லட்சம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதாக தெரிகிறது. விண்ணப்பங்களை மென்பொருளில் பதிவு செய்யும் பணியை, மேலும் விரைவு படுத்த, 500 கல்லுாரி மாணவர்கள் நேற்று முன்தினம் முதல் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வரும், ௧0 நாட்களுக்குள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கணக்குகளில் வெள்ள நிவாரண தொகை கிடைத்து விடும் என, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

யு.பி.எஸ்.சி தேர்வு தேதியை மாற்ற முடியாது: மத்திய அரசு:

மதுராந்தகத்தைச் சேர்ந்த வினோத் குமார் என்பவர் இன்று காலை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலை சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில் தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை (யு.பி.எஸ்.சி. மெயின்) தள்ளிவைக்க வேண்டும் என்றார்.

இதற்கு மத்திய அரசும், பணியாளர் தேர்வாணையமும் மதியத்திற்குள் பதிலளிக்குமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். பிற்பகலில் நீதிபதி முன்பு ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் ஜி.ராஜகோபால், யு.பி.எஸ்.சி. வழக்கறிஞர் அருணன் ஆகியோர், தமிழகத்திலிருந்து 855 பேர் மட்டுமே தேர்வு எழுதுகின்றனர். மேலும், மனுதாரர் தேர்வு எழுதவில்லை என்றனர்.மேலும், தேர்வு நடைபெறும் மையங்கள் ஏதும் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். இதையடுத்து வினோத் குமாரின் முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், புஷ்பா சத்தியநாராயண ஆகியோர், இதை வழக்காக தாக்கல் செய்தால் விசாரிப்பதாகவும் கூறினர்.