சமீபத்திய மழை, வெள்ளத்தால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட மாணவ, மாணவியர், தங்களின் பாட புத்தகம், நோட்டு போன்றவற்றை இழந்துள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும், இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகம் கிடைக்காத நிலை உள்ளது. இந்நிலையில், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கில பாடப் புத்தகங்களை, 'நம்ம ஊரு அறக்கட்டளை' அமைப்பு சார்பில், 'நம்ம கல்வி' என்ற பெயரில், இலவசமாக கணினியில் வெளியிடப்பட்டுள்ளது.அறக்கட்டளைநம்ம ஊரு அறக்கட்டளையின், http://clsl.cu/ என்ற இணையதள இணைப்பில், இந்த புத்தகங்களை, ஆன் - லைனில் பார்க்க முடியும்.
இதுகுறித்து, அறக்கட்டளை நிறுவனர் நடராஜன் கூறியதாவது:வெறும் வாசித்தல் என்ற முறைக்கு கூடுதலாக, மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும் வகையில், பாடங்களை விளக்கும் பின்னணி குரலுடன், பாட வரிகள் மற்றும் படங்களை, 'வீடியோ' மூலம் திரையில் விளக்கும் வகையில், கணினி வழியில் வெளியிட்டுள்ளோம்.எளிதில் படிக்கலாம்
பாடம் முடிந்ததும், பாடம் குறித்து மாணவர்கள் புரிந்து கொண்டது குறித்த கேள்விகளும், விடைகளும், கணினி திரையில் இடம் பெறுகிறது. சமச்சீர் பாட புத்தகத்தின் அம்சங்களில், எந்த மாற்றமும் இன்றி, இந்த கணினி வழி பாடங்களை பதிவேற்றம் செய்து உள்ளதால், புத்தகம் உள்ளவர்களும், இல்லாதவர்களும் எளிதில் படிக்கலாம்.
தமிழ் மற்றும் ஆங்கில வழியில், 6 முதல் 8ம் வகுப்பு வரை, புத்தகங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. கணினி இல்லாதவர்கள், எங்கள் சிறப்பு அப்ளி கேஷனை மொபைல் போனில், பதிவிறக்கம் செய்து, பாடங்களை படிக்கலாம். விரைவில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான பாடங்களை வெளியிட உள்ளோம். எங்கள் தளத்தை பயன்படுத்த, எந்த கட்டணமும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்