அ.தி.மு.க.,வில் சசிகலா மற்றும் அவரது அக்கா மகன் தினகரனுக்கு ஆதரவாக இருந்த அமைச்சர்கள்
திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயக்குமார் ஆகியோர் மீது, சசிகலா குடும்பத்தினர் கோபம் அடைந்துள்ளனர்.
இருவரும் துரோகிகள்; இருவரையும் அரசியலில் இருந்து ஒழித்தே தீர வேண்டும். அதற்காக என்னன்ன செய்ய வேண்டுமோ, அனைத்தையும் செய்யுங்கள் என, ஆதரவாளர்களுக்கு தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, அ.தி.மு.க.,வின் சசிகலா ஆதரவாளர் ஒருவர் கூறியதாவது:
கோபம்:
அ.தி.மு.க., துணைப் பொதுச் செயலர் பொறுப்பில் இருக்கும் தன்னை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதிப்பதில்லை என்று, தினகரனுக்கு வருத்தம் இருக்கிறது.
ஆனால், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ஆர்.பி.உதயக்குமார் ஆகிய இருவரும், தங்களுடைய தீவிர விசுவாசிகளாக இருப்பர் என்று நம்பினார். அதனால்தான், கட்சியின் பொருளாளராக இருந்த பன்னீர்செல்வம் தனி அணியாக சென்றதும், அவரது பொறுப்பில், திண்டுக்கல் சீனிவாசனை, தினகரன் நியமித்தார். அதேபோல, அமைச்சர் உதயக்குமாரும் தங்கள் குடும்பத்துக்கு கடைசி வரை விசுவாசமாக இருப்பார் என்று நினைத்தார் தினகரன்.
அவர்கள் இருவரும், திடுமென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சேர்ந்து கொண்டு, சசிகலா குடும்பத்தினரை மறைமுகமாக விமர்சிக்கத் துவங்கி இருப்பது, அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.
அதனால், அவர்கள் இருவரையும் அரசியலில் இருந்து ஒழித்தாக வேண்டும் என்று, ஆதரவாளர்களுக்கு தினகரன் உத்தரவிட்டுள்ளார். இப்படி உத்தரவிட்ட கையோடுதான், திண்டுக்கல் சீனிவாசன், சசிகலா காலில் விழுந்த படத்தை வெளியிட வேண்டியிருக்கும் என, தினகரன் ஆத்திரமாக கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்து பேசிய சீனிவாசன், துணைப் பொதுச் செயலர் ஆனதும், என் காலிலும், செங்கோட்டையன் காலிலும் விழுந்தவர் தினகரன். என் படத்தை வெளியிடும்போது, இந்தப் படங்களையும் சேர்த்து வெளியிடலாம் என சவால் விடுவது போல கூறினார்.
இதனால், தினகரனின் கோபம் உச்சத்தை அடைந்துள்ளது. உதயக்குமார் மற்றும் சீனிவாசன் ஆகியோர் துறைகளில் நடக்கும் முறைகேடுகளைதோண்டி எடுத்து வெளியிடுமாறு, ஆதரவாளர்களுக்கு கூறியுள்ளார். அந்தப் பணியை, தினகரன் ஆதரவாளர்கள் துவக்கி உள்ளனர்.
ஜெயக்குமார் அடுத்த இலக்கு:
இதற்கிடையில், சசிகலா குடும்பத்தினரை விமர்சித்து வரும் அமைச்சர் ஜெயக்குமாரை நோக்கியும் இலக்கு வைத்து வீழ்த்துமாறு, ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் தினகரன். ஆனால், இது குறித்தெல்லாம், மூன்று அமைச்சர்களும் கொஞ்சமும் கவலைப்படவில்லை என்பது, தினகரன் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்