பள்ளிக்கூடத்துக்காகக் கட்டப்பட்ட அறைகளில் வட்டார வளர்ச்சி மையம்
செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு பெரியார் வீதியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்புவரை உள்ளன. சுமார் 306 மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர். பள்ளியில் மொத்தம் 9 வகுப்புகள் உள்ளன. இந்த வகுப்புகள் போதாது, கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என ஏற்கெனவே மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன் பேரில் கூடுதலாக 5 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அப்படிக் கட்டப்பட்ட அறைகளில் வகுப்பறைகள் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப் புதிய அறைகள் கல்வி இயக்கத்தின் வட்டார வளர்ச்சி மைய அலுவலங்களாகச் செயல்பட்டுவருகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இன்று (நவம்பர் 07) காலை வழக்கம்போல் பள்ளிக்கூடம் வந்த மாணவ மாணவிகள் திடீரென வகுப்புகளைப் புறக்கணித்து வெளியே வந்து பள்ளிக்கூடத்தின் முன் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் புதிய அறைகள் வகுப்பறைகளாகச் செயல்பட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகப் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் கோவிந்தராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதாமணி ஆகியோர் இருந்தனர்.