டி.என்.பி.எஸ்.சி தேர்வில் பிற மாநிலத்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்புக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (நவம்பர் 19) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 9351 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு பிப்ரவரி 11ல் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டித் தேர்வுக்கு மற்ற மாநிலத்தவரும் விண்ணப்பிக்கும் வகையில் கடந்த ஆண்டு விதிகளைத் திருத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் 80 லட்சம் பேர் படித்துவிட்டு வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு வெளி மாநிலத்தவருக்கும் விண்ணப்பிக்க அனுமதி அளித்துள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது. குஜராத், கர்நாடகம், மராட்டிய மாநிலங்கள் எல்லாம் அம்மாநில மக்களுக்குத் தான் முன்னுரிமை அளிக்கின்றன. தமிழ்நாடு மட்டும் இந்த விதிகளில் திருத்தம் செய்திருப்பது முற்றிலும் நியாயமற்றது. கண்டனத்துக்குரியது. இந்த விதிகளை உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும்" என்றார்.