வரும் டிசம்பருக்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது. கடந்த 2014-15-ஆம் கல்வியாண்டில் சென்னை, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்பட்டது. பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை.
ஒப்பந்தப்புள்ளிகளில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இந்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பல மாதங்கள் தாமதத்துக்குப் பிறகு ஒப்பந்தப்புள்ளிகள் இறுதிசெய்யப்பட்டு, மடிக்கணினி விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:-
கடந்த ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான மடிக்கணினி விநியோகம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தேனி, நாகப்பட்டினம், திருநெல்வேலி, புதுக்கோட்டை உள்பட 15 மாவட்டங்களில் மடிக்கணினி விநியோகம் நிறைவடைந்துள்ளது.
மீதமுள்ள மாவட்டங்களில் அக்டோபர் முதல் வாரத்துக்குள் மடிக்கணினிகளை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இந்த மடிக்கணினிகளை மாணவர்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். கடந்த நிதியாண்டில் (2014-15) 5.40 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ரூ.1,080 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து ஒப்பந்தப்புள்ளிகள்: ஒப்பந்தப்புள்ளிகளைக் கோருவதில் தாமதம் ஏற்பட்டதால், நிகழ் கல்வியாண்டுக்கும் (2015-16) சேர்த்து ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. எனவே, இந்தக் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 5 லட்சம் பேருக்கும் டிசம்பருக்குள் மடிக்கணினி விநியோகம் செய்யப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்காக நிகழாண்டிலும் (2015-16) ரூ.1,080 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக