டியாங்காங்-1 எனப்படும் சீன விண்வெளி ஆய்வு நிலையம், நொறுங்கி இன்று பசிபிக் கடலில் விழுந்துவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் முதல் விண்வெளி ஆய்வுக்கூடம் ‘டியாங்காங்-1’ என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா டியாங்காங்-1 (Tiangong-1) என்ற விண்வெளி ஆய்வு நிலையத்தை 2011ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பியது. அன்று முதல் 2016ஆம் ஆண்டு வரை அந்த விண்வெளி நிலையத்தைச் சீனா பராமரித்துவந்தது. ஆனால் அதன் பிறகு விண்வெளி நிலையம் தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகச் சீனா 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த டியாங்காங்-1 ஆய்வு நிலையம் மார்ச் 30ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் பூமியை நோக்கி நொறுங்கி விழும் என ஏற்கனவே விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். மேலும் வளிமண்டல உராய்வின் காரணமாக இந்த ஆய்வு நிலையம் எரிந்து சிதைந்துவிடும் என்றும், சிதைவுகள் மட்டுமே பூமியின் மீது விழ வாய்ப்பிருப்பதாகவும் விஞ்ஞானிகள் அப்போது தெரிவித்திருந்தனர்.
அதன்படி, இன்று அதிகாலை இந்திய நேரப்படி 4 மணியளவில் பூமியின் வளிமண்டலத்துக்குள் டியாங்காங்-1 விண்வெளி ஆய்வு நிலையம் வெடித்துச் சிதறியதாகவும், அதன் சிதைவுகள் தென் பசிபிக் கடலில் விழுந்துவிட்டதாகவும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விண்வெளி மையத்தின் பெரும்பாலான பாகங்கள் அழிந்துவிட்டதாலும், கடலில் விண்வெளி ஆய்வுக்கூட பாகங்கள் விழுந்திருப்பதாலும் பூமிக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக