மாணவர்களின் விபரங்களை, ஆன்லைனில் பதிவு செய்ய, 200 ரூபாய்
மட்டுமே
ஒதுக்கியுள்ளதால், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளிகள், 5,500க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் படிக்கும் மாணவர்களின் விபரங்கள், கல்வி மேலாண்மை தொகுப்பு எனும், 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு, இணையதள செலவாக, துவக்க பள்ளிகளுக்கு, 200 ரூபாய், நடுநிலை பள்ளிகளுக்கு, 400, உயர்நிலை பள்ளிகளுக்கு, 600, மேல்நிலை பள்ளிகளுக்கு, 800 ரூபாய், ஒருமுறை செலவினமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
தற்போது, அலுவல் தொடர்பாக, அனைத்து விபரங்களை அனுப்புவது, பெறுவது, கணினி மூலம் நடக்கிறது. இதுமட்டுமின்றி, 'எமிஸ்' இணையதளத்தில், மாணவர்களின் விபரங்களை பதிவேற்ற, பல மணி நேரம் பிடிக்கிறது. சர்வர் கோளாறால், பல நாட்களை செலவழிக்க வேண்டியுள்ளது. இதற்கெல்லாம், தலைமையாசிரியர்கள் தங்கள் சொந்தப்பணத்தை செலவழிக்க வேண்டியிருந்தது.
தற்போது, அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், ஒரு பள்ளிக்கு, 200 ரூபாய் ஒதுக்கியுள்ளனர். ஆண்டு முழுவதும் இணையதள பயன்பாடு தேவைப்படும்போது, 200 ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும். துவக்கப்பள்ளிகளுக்கு கணினி வசதியும் இல்லை. இதனால், பிரவுசிங் சென்டர்களை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும், கணினி, இணையதள வசதி ஏற்படுத்தி தர வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்குவதுபோல், மாதந்தோறும் இணையதள வசதிக்கு நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்