தமிழகம் முழுவதும், 4,603 நுாலகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்,''
என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை, அண்ணா நுாலகம் சார்பில், 'நுாலகங்கள் மற்றும் தகவல் மையங்களின் முன்னேற்றத்துக்கான சர்வதேச தற்போதைய நிகழ்வுகள்' என்ற தலைப்பிலான, தேசிய மாநாடு, நேற்று துவங்கியது. மாநாட்டை துவக்கி வைத்து, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
அண்ணா நுாற்றாண்டு நுாலக பணிகளுக்கு, ஐந்து கோடி ரூபாய்; மதுரை தமிழ் சங்கத்திற்கு, ஆறு கோடி ரூபாய் நிதி வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும், 312 நிரந்தர நுாலகங்களின் புத்தகங்கள், டிஜிட்டலுக்கு மாற்றப்பட உள்ளன. அவற்றில், 119 நுாலகங்களுக்கு, கணினி இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள, 4,603 நுாலகங்களும் கணினி மயமாக்கப்படும். 32 மாவட்ட நுாலகங்களில், ஐ.ஏ.எஸ்., அகாடமியை, முதல்வர் திறந்து வைக்க உள்ளார். 12 மாவட்டங்களில், நடமாடும் மொபைல் நுாலக திட்டம் துவங்கப்பட உள்ளது.
மொபைல் நுாலகங்கள், காலையில் ஒரு பள்ளி, மாலையில் ஒரு பள்ளி என, மாணவர்களுக்கு புத்தகம் வாசிப்பு பயிற்சி அளிக்கும். பல நுாற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்றையும், கலாச்சாரத்தையும் கூறும் ஓலைச்சுவடிகள், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. தமிழக நுாலகங்களில், மூன்று மாதங்களில், ஒரு லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கை போரில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண நுாலகத்துக்கு, ஒரு லட்சம் புத்தகங்களை அரசு வழங்க உள்ளது.மற்ற நாடுகளில் தமிழர்கள் வாழும் பகுதி நுாலகங்களுக்கு, 2,500 முதல், 5,000 வரையில் புத்தகங்கள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன், பொது நுாலகத்துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன்; இணை இயக்குனர், நாகராஜ முருகன் பங்கேற்றனர்.
நேற்று அமைச்சர்செங்கோட்டையன் அளித்த பேட்டி:
'நீட்' தேர்வில் விலக்கு பெறுவதற்கு, தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை எதிர்கொண்டு, நீட் தேர்வுக்கான விலக்கு பெற, முதல்வர் தலைமையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நுாலகத் துறைக்கான, 'செஸ்' வரி விகிதத்தை, 4 சதவீதமாக, மத்திய பட்ஜெட்டில் உயர்த்தியுள்ளனர். இதன்மூலம், உள்ளாட்சி துறைகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.தற்போது, நுாலகத்துறை வளர்ச்சிக்கு, உள்ளாட்சித்துறை வழியாக கிடைக்கும், செஸ் வரியின் நிலுவைத் தொகையை பெற, தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு, இதுகுறித்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தான் கண்டுபிடித்தது. தேர்வு பணியில் ஈடுபட்ட, டில்லியை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளோம்.வரும் காலங்களில், தேர்வு பணிகளில் தனியார் துறையை ஈடுபடுத்து வது குறித்து, பரிசீலித்து முடிவு எடுப்போம். இந்த பிரச்னையில், நாங்கள் எந்த விதமான விசாரணைக்கும், தயார் நிலையில் உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.