2018-19 ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் கலந்தாய்வு
ஆன்லைனில் நடத்தப்படும் என்று தமிழக அரசு இன்று (நவம்பர் 9) அறிவித்துள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் என 500 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்கான சுமார் 2 .77லட்சம் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
அனைத்துக் கல்லூரிகளுக்கும் மொத்தமாக மாணவர் சேர்க்கை நடத்துவதால் அதிக பொருட்செலவு, மனிதவளம் தேவைப்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது .இதுதவிர மாணவர்கள் பெற்றோர்கள் அலைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற எம்.இ, எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ கலந்தாய்வு ஆன்லைன் முறையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்றும் பொறியியல் சேர்க்கை செயலாளராக இருந்த இந்துமதி மாற்றப்பட்டு ரைமண்ட் உதிரியராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் முறைக்கு மாற்றப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாரப் பூர்வ அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. இதை உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பால் வெளியிட்டுள்ளார்.