யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/11/15

செய்முறை பயிற்சி தேர்வு உண்டா 10ம் வகுப்பு மாணவர்கள்குழப்பம்

அறிவியல் செய்முறை புத்தகம் வழங்காததால், அதற்கான பயிற்சி தேர்வுநடைபெறுமா என்ற குழப்பம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.சமச்சீர் கல்வி பாடத்திட்டம் துவங்கிய பின், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் ஆய்வகத்தில், செய்முறை பயிற்சியும், செய்முறை தேர்வும் நடத்தப்படுகிறது. இதற்காக, 75 மதிப்பெண், 'தியரி'க்கும், 25 மதிப்பெண் அறிவியல் செய்முறை பயிற்சிக்கும் தரப்படுகிறது.


இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு தலா, நான்குசெய்முறை பயிற்சிகள் உள்ளன.இவற்றில், தலா, ஒரு பயிற்சி வீதம், மொத்தம், நான்கு கேள்விகள், செய்முறை தேர்வில் இடம் பெறும். இதற்காக, செய்முறை பயிற்சி நோட்டுப் புத்தகமும், பாட புத்தகமும் இலவசமாக வழங்கப்படும். காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்ததும், இந்த புத்தகங்கள் வழங்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படும்.ஆனால், இந்த ஆண்டு, அரையாண்டு தேர்வு நெருங்கி விட்ட நிலையில், இன்னும் செய்முறை புத்தகம் வழங்கவில்லை. அதனால் பாட புத்தகத்தில்பின்பக்கம் உள்ள குறிப்புகளை வைத்து, ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். அதிலும், இந்த ஆண்டு, 16 செய்முறைக்கு பதில், 15 மட்டுமே புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன.'வேதியியல் பாடத்தில் விடுபட்ட, ஒரு பயிற்சி எது என்பதை புத்தகம் வந்ததும் தெரிந்து கொள்ளுங்கள்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், புத்தகம் இன்னும் வராததால், இந்த ஆண்டுசெய்முறை தேர்வு உண்டா, இல்லையா என, மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

மாணவர்கள் கவலை

ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் கூறும்போது, ''புத்தகம் இல்லை என்றால், விடுபட்ட பயிற்சி வினாவை அதிகாரிகள் தெளிவுபடுத்தினால், நோட்டு புத்தகத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். பிப்ரவரியில் செய்முறை தேர்வு வரும் நிலையில், இன்னும் அதற்கான புத்தகமே வழங்காததால், மாணவர்கள் கவலையடைந்துள்ளனர்,'' என்றார்

கணிதத்திறன் போட்டி டிச., 20க்கு மாற்றம்

தமிழக அறிவியல் தொழில் நுட்ப மையம் சார்பில், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு, கணிதத்திறன் தேர்வு நடத்தப்படும். 5ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு மாணவர்கள் வரை பங்கேற்பர். இந்த ஆண்டுக்கான தேர்வு, நவ., 22ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது; கன மழையின் காரணமாக,நவ., 29ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாமல் உள்ளதால், இத்தேர்வு, டிச., 20ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் அய்யம் பெருமாள் அறிவித்துள்ளார். தேதி மாற்றப்பட்டுள்ளதால், விருப்பமுள்ள மாணவர்கள், டிச., 17 வரை, தங்கள் பெயரை பதிவு செய்யலாம் எனவும், அவகாசம் அளிக்கப்பட்டுஉள்ளது.

தொடக்கக்கல்வித் துறை-இரண்டாம் பருவத் தேர்வுகளுக்கான காலஅட்டவணை

தொடக்கக்கல்வித் துறை-இரண்டாம் பருவத் தேர்வுகளுக்கான காலஅட்டவணை:
16.12.2015- தமிழ்.
17.12.2015- English
18.12.2015- கணக்கு
21.12.2015- அறிவியல்.
22.12.2015- சமூகவியல்.
23.12.2015 to 01.01.2016  பள்ளி விடுமுறை..
(As Per List of Holidays)

போட்டித் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு மாவட்ட மைய நூலகங்களில் தனி படிப்பகம் உருவாக்கம்: வெளிப் புத்தகங்களை எடுத்து வரவும் அனுமதி

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட அரசு மைய நூலகங்களி லும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்காக தனி படிப்பகம் அமைக்கப்படுகிறது.தமிழகம் முழுவதும் 32 மாவட்ட அரசு மைய நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களுக்கு தினமும் 500 முதல் 800 வாசகர்கள் வருகின்றனர்.இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும், புத்தகம் படிக்கும் பழக் கத்தை மாணவர்கள், இளைஞர் களிடம் ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 


இதன்படி, நூலகங் கள் நவீனப்படுத்தப்பட்டு கூடுதல் பல்துறை வரலாற்று ஆராய்ச்சி, அறிவியல் புத்தகங்கள் வாங்கப்படு கின்றன.நூலகங்களுக்கு வரும் வாசகர்கள் அங்குள்ள புத்தகங்கள், நாளிதழ்களை மட்டுமே நூலகத்தில் அமர்ந்து படிக்க அனுமதிக்கப்படுவார்கள். வெளியில்இருந்து கொண்டு வரும் புத்தகங்களை நூலகத்துக்குள் வைத்து படிக்க அனுமதியில்லை.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு கள், தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் பிற அரசுத் துறை போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள், உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வு களுக்கு தயாராகும் மாணவர்கள், நூலகங்களில் தங்கள் தேர்வுகள் சம்பந்தமான புத்தகங்களை நூலகரிடம் பெற்று படித்து குறிப் பெடுப்பார்கள். இந்த குறிப்புகளை மற்ற புத்தகங்களுடன் ஒப்பிட்டு படிக்க முடியாது.இந்நிலையில், போட்டித் தேர் வுக்கு தயாராகும் தேர்வர்களுக் கென அமைதியான சூழலில் இடை யூறு இல்லாமல் படிக்க வசதியாக மாவட்ட மைய நூலகங்களில் தனி படிப்பக அறை அமைக்க தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறைமுடிவு செய்துள்ளது.இதுகுறித்து மதுரை மாவட்ட நூலக அதிகாரி சி.ஆர்.ரவீந்திரன் கூறியதாவது:முதல்கட்டமாக சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் அமைந்துள்ள நூலகங்களில் இந்த அறை அமைக்கப்படுகிறது.

அடுத்தகட்டமாக மற்ற நூலகங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. இந்த படிப்பகத்துக்காக 15 முதல் 20 பேர் அமர்ந்து படிக்கும் அளவில் புதிய மேஜை, நாற்காலிகள் வாங்கப்பட்டு ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் அறை அமைக்கப்படுகிறது. இந்த அறைகளில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், மாண வர்கள் நூலகம் திறக்கும் நேரத்தில் இருந்து மாலை மூடப்படும் வரை வெளியில் இருந்து கொண்டு வரும் புத்தகங்களைப் படிக்கலாம். இவர்களுக்கு மற்ற வாசகர்களால் எந்த தொந்தரவும் ஏற்படாது.இந்த அறையில் நன்கொடை யாளர்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

NMMS தேர்வு விண்ணப்ப அறிவிப்பு

NMMS தேர்வு விண்ணப்ப அறிவிப்பு

தற்போது எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுதலாம்SC / ST மாணவர்கள் 7ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களும், மற்ற மாணவர்கள் 55% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

30.11. 2015 to 11. 12. 2015க்குள் மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம் 


15. 12. 2015க்குள் தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்

7. 12. 2015 to 19.12. 2015க்குள் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.50

இணையதள முகவரி www.tndge.in

30 லட்சம் பேருக்கு காஸ் மானியம் 'கட்!'

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு, தமிழகத்தில், 1.60 கோடி வீட்டு சமையல்காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர். மத்திய அரசு, மானிய செலவை குறைக்க, ஜனவரி மாதம், நேரடி மானிய திட்டத்தை அறிமுகம் செய்தது.இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர், சந்தை விலையில், சிலிண்டர் வாங்க வேண்டும். பின், அதற்கான மானியம், அவரின் வங்கி கணக்கில் வரவுவைக்கப்படும். தற்போது, ஆண்டுக்கு, 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.


மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ., - தொழிலதிபர்கள் என, வசதி படைத்த பலர், மானிய விலை சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுக்க, வருமான வரி செலுத்துவோருக்கு, மானியம் ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாட்டில், 16 கோடி காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர். இதில், ஐந்து கோடி பேர், ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுகின்றனர். ஆனால், தற்போது, 36 லட்சம் பேர் மட்டும் தான், காஸ் மானியத்தை விட்டு கொடுத்துள்ளனர். வசதியானவர்கள், விட்டு கொடுக்கும் மானியத்தை பயன்படுத்தி, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, இலவசமாக சிலிண்டர் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், 30 லட்சம் பேர், வருமான வரி செலுத்தி வருகின்றனர். ஆனால், 1 சதவீதம் பேர் கூட, மானியத்தை விட்டு கொடுக்கவில்லை. எனவே, வருமான வரி செலுத்துவோருக்கு, மானிய சிலிண்டரை நிறுத்த, மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு.குவிகிறது அடுத்த ஆண்டு முதல் மீண்டும் அட்மிஷன் சூடு பிடிக்கும்

தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 90 ஆயிரம் இடங்கள் காலியாகி, இன்ஜி., படிப்புக்கு மவுசு குறைந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டது. ஆனால், இந்த ஆண்டு ஏராளமான இன்ஜி., மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதால் நிலைமை மாறி உள்ளது. இதன் மூலம், வரும் கல்வி ஆண்டில் இன்ஜி., படிப்புகளுக்கு மீண்டும் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பிலுள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - -பி.டெக்., படிப்புகளுக்கான பொது கவுன்சிலிங் கில், நடப்பு கல்வி ஆண்டில், ஒருலட்சத்து, 1,620 இடங்கள் நிரம்பின; 91 ஆயிரம் இடங்கள் காலியாகின.அதனால், பல தனியார் இன்ஜி., கல்லுாரிகள் அதிர்ச்சி அடைந்தன. பல கல்லுாரிகள் புதிய பாடப்பிரிவை துவங்கும் முடிவை கை விட்டன. குறைவான மாணவர் சேர்க்கை கொண்ட பாடப்பிரிவுகளை மூடவும், கலைகல்லுாரிகளாக மாற்றவும் முடிவெடுத்தன.மவுசுஇந்நிலையில், இன்ஜி., படிப்புகளுக்கு மீண்டும் மவுசு அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போது, இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தர, ஏராளமான நிறுவனங்கள் முன்வந்து, 'கேம்பஸ் இன்டர்வியூ' எனப்படும் வளாக நேர்காணல் நடத்துகின்றன.'டி.சி.எஸ்., காக்னிசன்ட், இன்போசிஸ், மைக்ரோசாப்ட், டெக் மகேந்திரா' உள்ளிட்ட பல ஐ.டி., நிறுவனங்களுடன், 'கோர்' நிறுவனங்கள் என்று அழைக்கப்படும், 'எல் அண்டு டி.,ரெனோ நிசான், பவர்கிரிட் கார்ப்பரேஷன், ஹுண்டாய், என்.எல்.சி.,' உள்ளிட்ட பல துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை அள்ளி தருகின்றன. அண்ணா பல்கலையில் உள்ள கிண்டி இன்ஜி., கல்லுாரி, எம்.ஐ.டி., கல்லுாரி ஏ.சி.டெக்., திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு கல்லுாரி போன்றவற்றில், இதுவரை நடந்த, இரண்டு வகை வளாக நேர்காணலில், இறுதி ஆண்டு படிக்கும், 1,500 பேர் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர்.எஸ்.ஆர்.எம்., பல்கலை, வி.ஐ.டி., பல்கலை மற்றும் அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, சென்னை மற்றும் புறநகரிலுள்ள தனியார் இன்ஜி., கல்லுாரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு, வளாக நேர்காணலில் பணி வாய்ப்புகள் அளிக்கப்பட்டு உள்ளன.

இதுவரை, 25 ஆயிரம் பேர்பணி ஆணை பெற்றுள்ளனர். சென்னையில் நடந்த சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்கு பின், தமிழகத்திலுள்ள பல பெரிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்தியதால், கூடுதலாக ஆட்கள் எடுப்பதாக, இன்ஜி., கல்லுாரியினர் தெரிவித்தனர். புதிதாக துவங்கப்படும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களும், அதிக அளவு பணி வாய்ப்பு அளித்துள்ளன.வாய்ப்புஇந்த எழுச்சியால், சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள தனியார் இன்ஜி., கல்லுாரிகளில் மீண்டும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர், தற்போதே இன்ஜி., கல்லுாரிகளின் கல்வித்திறன்,கட்டமைப்பு, ஆசிரியர்களின் கல்வித்தகுதி மற்றும் வேலை வாய்ப்பு அளிப்பு போன்றவற்றை ஆய்வு செய்யத் துவங்கியுள்ளனர். தரமான கல்லுாரிகளை பெற்றோர்களும், மாணவர்களும் தேர்வு செய்ய வேண்டும் என, கல்வியாளர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். கல்லுாரிகளுக்குச் நேரில் சென்று கல்லுாரிகளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அங்கு படிக்கும் மாணவர்களிடமும் பேசி தகவல்களை திரட்டிக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

'மேக் இன் இண்டியா'

இந்தியாவிலேயே எல்லா பொருட்களையும் தயாரிக்க வேண்டும் என்ற, 'மேக் இன் இண்டியா' என்ற புதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த திட்டப்படி, பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை, இந்தியாவிலேயே துவக்க முன் வந்துள்ளன. சாலை, மின்சாரம், போக்குவரத்து போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளிலும் அரசு அதிக அளவில் முதலீடுகளை செய்ய துவங்கி உள்ளன. இந்த பணிகளுக்கு ஏராளமான வேலையாட்கள் தேவை. கலைகல்லுாரிகளில் படித்த மாணவர்களால், அந்த பணிகளில் ஈடுபட முடியாது. எனவே, தரமான இன்ஜி., கல்லுாரிகளில் படிப்பை முடித்து விட்டு, வெளியே வரும் மாணவர்களுக்கு, அடுத்த சில ஆண்டுகளில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளன.வரும் ஆண்டுகளில் இன்ஜி., கல்லுாரிகளில் மீண்டும் சேர்க்கை சூடுபிடிக்க துவங்கும்.

மூன்றாம் கட்ட நேர்காணல்

அண்ணா பல்கலையில், மூன்று வித, வளாக நேர்காணல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக, 'ட்ரீம் ஜாப்' எனப்படும், பெரிய ஐ.டி., நிறுவனங்களில்ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய் முதல், 22 லட்சம் ரூபாய் வரையான சம்பளத்துக்கு, நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டது.இரண்டாம் கட்டமாக, ஐ.டி., சார்ந்த நிறுவனங்களில், ஆண்டுக்கு அதிகபட்சமாக, 15 லட்சம் ரூபாய் சம்பளத்தில், 1,250 பேருக்குபணி வாய்ப்பு வழங்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக, நவ., 30ல் வளாக நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வு முடிந்ததும், ஜனவரியில், அனைத்து அரசு இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் தனியார் கல்லுாரிகளில், 250 நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.- நமது நிருபர் -

NMMS EXAM 2016 -NOTIFICATION AND APPLICATION FORM



ஆசிரியர்கள் மறியல் போராட்டம்டிச., 1ல் மனு அளிக்க 'ஐாக்டோ' முடிவு

ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கை குறித்தும், டிச., 28ம் தேதி மறியல் போராட்டம் குறித்தும், வரும் 1ம் தேதி ஜாக்டோநிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில் மனு அளிக்க உள்ளனர்.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, மத்திய அரசுக்கு இணையான இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம், தமிழை முதல் பாடமாக்க அரசாணை உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான ஜாக்டோ, கடந்த பிப்ரவரி முதல் போராட்டம் நடத்துகிறது.

அக்., 8ல் ஜாக்டோ நடத்திய, மாநில அளவிலான வேலை நிறுத்தத்தால், பள்ளிகள் செயல்படாமல் முடங்கின. ஆனாலும், அரசு அவர்களை அழைத்து பேச்சு நடத்தவில்லை.இந்நிலையில், அடுத்த கட்டமாக டிச., 28 முதல் 30 வரை தொடர் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, வரும் 1ம் தேதி தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வி முதன்மை செயலரை, ஜாக்டோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சந்தித்து, மனு அளிக்க உள்ளனர். அதன்பின், அரசு தரப்பில் பேச்சு நடத்தினால் போராட்டத்தை வாபஸ் பெற, ஆசிரியர் குழு முடிவு செய்துள்ளது.

உதவி பேராசிரியர் தேர்வு:பட்டதாரிகள் ஓராண்டு காத்திருப்பு

அரசு இன்ஜி., கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு அறிவித்து ஓராண்டாகியும் தேர்வு நடத்தாததால், விண்ணப்பதாரர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழகத்திலுள்ள இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், காலியாக இருந்த, 139 உதவி பேராசிரியர் பணியிடத்தை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த, ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டது.


முதுகலை பட்டத்துடன், எம்.பில்., ஸ்லெட், நெட், முடித்தவர்கள் என, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரிகள், விண்ணப்பித்திருந்தனர். இதற்கான எழுத்து தேர்வு, கடந்த, 2014, அக்டோபரில் நடத்தப்படும் என அறிவித்து, அதற்கான பாடத்திட்டமும் ஆன்லைனில் வெளியிட்டிருந்தனர். ஆனால், எம்.பில்., மட்டும் முடித்தவர்கள், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடாது என, ஸ்லெட், நெட் முடித்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அதேசமயம், 2009க்கு முன், எம்.பில்., படிப்பு முடித்தவர்களுக்கு ஸ்லெட், நெட் தேவையில்லை என, மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது. தற்போது, ஓராண்டுக்கு மேல் ஆகியும் எழுத்து தேர்வு பற்றி எந்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இதுகுறித்து, விண்ணப்பதாரர்கள் கூறும்போது, 'ஸ்லெட், நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, உதவி பேராசிரியாக பணியாற்ற முடியும்' என, நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது. ஆனாலும், இன்னும் தேர்வு குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை,'என்றனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'சட்டப்பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, அரசிடமிருந்து அனுமதி வந்தால் தேர்வு அறிவிக்கப்படும்,' என்றனர்.

உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய முடிவு!!!

அரையாண்டுத் தேர்வு நேரத்தில், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு 
பள்ளிகளில் ஆசிரியர்களின் வருடாந்திர பணியிட மாற்றம் மற்றும் உபரி ஆசிரியர்கள் கலந்தாய்வு கடந்த மாதம் தான் முடிந்தது. ஆசிரியர்கள் புதிய இடத்துக்கு சென்று, பாடங்களை நடத்துகின்றனர்.

இந்நிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கைக்கான தேவையை விட அதிகமாக இருக்கும், உபரி ஆசிரியர்களை, விரைவில் பணியிட மாற்றம் செய்ய உள்ளதாக கல்வித்துறையில் தகவல்கள் வெளியாகிஉள்ளன.

தற்போது கல்வி ஆண்டின் பெரும்பாலான வேலை நாட்கள் முடிந்து, அரையாண்டுத் தேர்வு நெருங்கியுள்ளது. ஆனால், நிறைய பாடங்கள் பாக்கி உள்ளதால், சிறப்பு வகுப்பு மற்றும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தி, போர்ஷன் முடிக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களை இடம் மாற்றினால், மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்.பல பள்ளிகளிலும் புதிய ஆசிரியர்கள் இடம் மாறும்போது, பாடங்கள் நடத்துவதில் பின்னடைவு ஏற்படும் என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

நுழைவுத் தேர்வுப் பயிற்சி வகுப்புகள் அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாள்களில் நடத்த திட்டம்!!!

அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுப் பயிற்சி வகுப்புகள் அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாள்களிலும் நடத்தப்பட உள்ளன. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், தமிழகம் முழுவதும் 9-ஆம் வகுப்பு 
மாணவர்களுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டன.

இந்தத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி விரிவுபடுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வட்டார அளவில் நடத்தப்படும் இந்தப் பயிற்சி வகுப்புகளில் 6,400 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு, மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் தமிழகத்தில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்வு பெற்று வருகின்றனர். இதையடுத்து அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களுக்கு இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு "டான் எக்ùஸல்' திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இந்தப் பயிற்சியில் பங்கேற்க மாணவர்கள் ஆர்வமாக உள்ளதால் அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாள்களிலும் பயிற்சி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!!

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் வழங்கப்பட்ட 7வது 
ஊதியக் குழுவின் பரிந்துரையில் குறைந்தபட்ச ஊதியம் அறிவிக்க்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த வீட்டு வாடகைப்படி உள்ளிட்டவையும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.

அதைத்தொடர்ந்து, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ரயிலவே துறையை தனியார் மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 56 கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அதேபோல, தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும் ரயில்வே ஊழியர்கள் சங்கமான எஸ்.ஆர்.எம்.யூ. யூனியன் சார்பில் இன்று கருப்பு தினமும் அனுசரிக்கப்படுகிறது.

மாணவர்களை மூன்று வகையாக பிரித்து பயிற்சி!!!

அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெற, மூன்று வகை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் முதல் வாரம் துவங்க உள்ளது. பிளஸ் 2 தேர்வில், நான்கு 
ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்கள், மாநில ரேங்க் பெறவில்லை; தேர்ச்சி சதவீதத்திலும், பின்தங்கினர்.

10ம் வகுப்பு தேர்வில் மட்டும், மாநில ரேங்க் பெற்று, ஆறுதல் அளித்தனர்.ஒவ்வொரு ஆண்டும், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்தும், அரசு பள்ளிகள் தேர்ச்சியில் பின்தங்குவது, பள்ளி கல்வித் துறை அதிகாரிகளுக்கு, தலைகுனிவை ஏற்படுத்தியது. அதனால், இந்த ஆண்டு தேர்வுகளில், தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு, அரசு பள்ளிகள் தேர்ச்சியும், மதிப்பெண்ணும் பெற வேண்டும் என, அதிகாரிகளும், ஆசிரியர்களும், உறுதி எடுத்துள்ளனர்.

அதன்படி, தனியார் பள்ளிகளைப் போல், மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்ப, அவர்களுக்கு மூன்று வகை சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் படி, அனைத்து அரசு பள்ளிகளிலும், அரையாண்டுத் தேர்வுக்கு முன், அனைத்து பாடங்களையும் முடிக்க வேண்டும் என, கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளது.

அரையாண்டுத் தேர்வுக்குப் பின், பிப்ரவரி வரையிலான இரண்டு மாதங்களும், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர். இதில் மாணவ, மாணவியர், மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றனர்.

நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு, மாநில ரேங்க் பெறுவது குறித்தும்; சராசரி மாணவர்களுக்கு, 80 சதவீத மதிப்பெண் பெறுவது குறித்தும்; தேர்ச்சிக்கே தடுமாறும் மாணவர்களுக்கு, எந்த பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், தேர்ச்சி அடையலாம் என்பது குறித்தும், மூன்று வகைகளில் பயிற்சி அளிக்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்

8ம் வகுப்புக்குள் படிப்பை நிறுத்திய மாணவர் பட்டியலை கணக்கெடுக்க உத்தரவு!!!

பள்ளிகளில், 8ம் வகுப்புக்குள் படிப்பை நிறுத்திய மாணவர் பட்டியலை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின், கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி, 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், இலவசமாக, 
கட்டாயம் கல்வி வழங்க வேண்டும்; இதற்கு மத்திய அரசு மூலம் நிதி உதவி அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், மாணவர், இடையில் படிப்பை விடாமல் பார்த்து கொள்ளவும், படிப்பை விடும் மாணவர்களை, தாமதமின்றி, அவர்களின் நிலையை அறிந்து, கல்வி வழங்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதன்படி, இந்த ஆண்டு இதுவரை பள்ளிகளில் சேர்ந்து, 8ம் வகுப்புக்குள், பள்ளிக்கு வராமல் இடையில் நின்ற மாணவர் பட்டியலை தயாரிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், தங்கள் பகுதிகளில், 14 வயதுக்கு உட்பட்ட, பள்ளிக்கு படிக்கவே வராத மாணவர் பட்டியலை தயாரித்து அனுப்பும்படியும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

டிச.22-ல் தேர்வுகள் முடிக்கப்பட்டு விடுமுறை அறிவிக்கப்படுகிறது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும்!!!

அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, அரையாண்டு விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.


விடுமுறையால் அரையாண்டுத் தேர்வு தேதியை ஒரு வாரம் தள்ளி வைத்து, விடுமுறை நாட்களைக் குறைக்க அதிகாரிகள் ஆலோசித்தனர். ஆனால், விடுமுறையை ரத்து செய்யக் கூடாது என பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்ததால், அரையாண்டுத் தேர்வை திட்டமிட்டபடி நடத்த, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மாலை அவசர, அவசரமாக பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, ஏற்கனவே அறிவித்த படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 -விற்கு டிச.7-ம் தேதியும்; 10ம் வகுப்புக்கு டிச.9-ம் தேதியும், மாற்றமின்றி தேர்வு நடத்தி முடிக்க வேண்டும். இதேபோல், சமச்சீர் கல்வி பாடத் திட்டப்படி, 9-ம் வகுப்புக்கு டிச.9-ம் தேதியும், 6ம் வகுப்பு முதல், 8-ம் வகுப்புகளுக்கு டிச.14-ம் தேதியும் இரண்டாம் பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும். அனைவருக்கும் டிச.22-ல் தேர்வுகள் முடிக்கப்படுகிறது.

இதையடுத்து, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான தொடர் விடுமுறை அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பணிநிரவலால் பதறும் 2 ஆயிரம் ஆசிரியர்கள்: 'கவுன்சிலிங்' நடத்தப்படுமா!

மாநிலம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்- மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, உபரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர், கலந்தாய்வு இல்லாமல் விரைவில் பணிமாற்றம் செய்யப்பட உள்ளதால் கலக்கமடைந்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் உள்ளதுபோல், உதவி பெறும் பள்ளிகளிலும் உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள உதவிபெறும் பள்ளிகளில், பணிநிரவல் செய்யப்படுகின்றனர். பணிநிரவலில் மாவட்ட கல்வி அலுவலர்கள் முடிவு செய்யும் பள்ளியே, இறுதி செய்யப்படுகின்றன. இதில் பாரபட்சம் இருப்பதால் சிலருக்கு அருகில் உள்ள பள்ளிகளிலும், சிலருக்கு தொலைவிலுள்ள பள்ளிகளிலும் பணிமாற்றம் கிடைக்கிறது என சர்ச்சை எழுந்தது.

இதனால், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்துவதுபோல் கலந்தாய்வு மூலம் பள்ளிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கடந்தாண்டு கோரிக்கை எழுந்தது. ஆனால், நடவடிக்கை இல்லை. இந்தாண்டும் கல்வி அலுவலர்களே பள்ளிகளை முடிவு செய்ய உள்ளனர். இதனால் பட்டியலில் உள்ள 2 ஆயிரம் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்பாளர் நாகசுப்பிரமணி, மாவட்ட செயலாளர் முருகன் கூறுகையில், "உதவிபெறும் பள்ளிகளில், பொதுவாக ஆசிரியர்கள் மறைமுகமாக லட்சக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்து தான் பணியில் சேருகின்றனர். இவர்களை, 'உபரி' என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பள்ளிக்கு மாற்றம் செய்கின்றனர். அரசு ஆசிரியர்களுக்கு உள்ளதுபோல், இந்த ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடத்தி, பணிமூப்பு அடிப்படையில் பள்ளிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்," என்றனர்.

பொதுத்தேர்வு தொடர்பாக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி!!!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி எழுதி வாங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் முதல் வாரத்தில் பொதுத்தேர்வு நடக்க 
உள்ளது. இதற்காக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து வாங்கி, தேர்வுத் துறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மாணவரும், 'பள்ளி பாடப் புத்தகத்தின் பின்பக்க கேள்விகள் மற்றும் வினா வங்கி புத்தங்களை மட்டும் படித்தால், 'சென்டம்' மதிப்பெண் வாங்க முடியாது என, எங்களுக்கு தெரியும்' என, எழுதி கையெழுத்திட்டு தர வேண்டும். இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:கடந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 பொருளியல் மற்றும் வணிகவியல் தேர்வுகளில், புத்தகத்தில் இல்லாத கேள்விகள், வினாத்தாளில் இடம் பெற்றதாக கூறி, அதற்கு மதிப்பெண் வழங்க கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும், மாணவர்கள் புத்தகத்தின் கேள்விகள் மற்றும் நுால் வழிகாட்டி புத்தகங்கள் மற்றும் வினா வங்கிகளையே, அதிகம் படிக்கின்றனர். பாடத்திட்டப்படி வழங்கப்படும் புத்தகத்தில், பல பகுதிகளை படிப்பதில்லை. எனவே, இந்த ஆண்டு வழக்கு பிரச்னைகளை தடுக்கவும், மாணவர்களை பாடப் புத்தகங்களை முழுமையாக படிக்க வைக்கவும், இந்த உறுதிமொழி எழுதி வாங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

யார் தவறு செய்தாலும் ஆசிரியர்களுக்கு தண்டனையா??? ஆசிரியர் என்றால் ஏளனமா?

திருச்செங்கோடு அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் மது அருந்திவிட்டு வகுப்பறைக்கு வந்து வாந்தியெடுத்த 7 மாணவிகளை பள்ளியிலிருந்து நீக்கிய தலைமையாசிரியர் மற்றும் வகுப்பாசிரியர் மீது நடவடிக்கை 
எடுக்கும் விதமாக கல்வித்துறை
அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் செயல்படுவது மிகவும் வெட்கக்கேடான நிகழ்வாகும்.

மாணவர்களின் மது அருந்தும் பழக்கத்தை நியாயப்படுத்துவதுபோல TVயில் கட்சிக்காரர்களும், சமூக ஆர்வலர் என்ற பெயரில் திரியும் மேதாவிகளின் பேச்சு வெந்த புண்ணில் வேலினைப் பாய்ச்சுவதுபோல உள்ளது.

ஏற்கனவே மனிதர்களில் பெரும்பான்மையோரை குடி நோய்க்கு அடிமையாக்கிவிட்ட அரசாங்கம் தற்போது மாணவர்களையும் இந்த இழிநிலைக்கு அழைத்துச்செல்ல ஆயத்தப்படுத்துவது மிகவும் அபாயகரமான செயலாகும்.

அரசிற்கு மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானமும், மக்களின் சிந்திக்க திறனற்ற நிலை இரண்டுமே போதும் அவர்களின் ஆட்சியை நடத்துவதற்கு.

இந்தச் சமுதாய சீரழிவை தட்டிக்கேட்க முடியாத நிலையையும் காவல்துறையை ஏவல்துறையாக மாற்றி அரசு மிக எளிதாக செய்துகொண்டு வருகிறது.

பள்ளிக்கு மது அருந்திவிட்டு வரும் மாணவர்கள் மேல் நடவடிக்கை எடுக்காமல் வேறு என்ன செய்ய வேண்டுமென்பதை ஆணையாக வழங்கிவிட்டு போதுமான பயிற்சியையும் எங்களுக்கு வழங்கிவிட்டால் போதும் அதன்படி மிகச்சிறப்பாக செயல்படுவோம். இப்படி தேவையில்லாமல் மாணவிகள் மீது நடவடிக்கை எடுத்து கல்வித்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்த மாட்டோம்.

யாரோ குற்றம் செய்ய அதனை மறைப்பதற்கு கடைசியில் பலிகடா நமது ஆசிரிய இனம்தான் கிடைத்ததா?

அரசு மாணவர்களுக்கு நலத்திட்டங்களில் விலையில்லா மதுவையும் சேர்த்து வழங்கிவிட்டால் போதும் இதுபோன்ற தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய அவசியம் ஆசிரியர்களுக்கு ஏற்படாமல் போய்விடும். நீங்களும் தொடர்ந்து ஆட்சிசெய்து வரலாம்.

இந்த கொடுஞ்செயலை அரசு இனிமேலாவது தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சமுதாயச் சீரழிவு ஏற்படாமல் இருக்க்கும்.

ஆசிரியர்கள் மீது தேவையில்லாமல் நடவடிக்கை எடுக்கும் அரசின் செயல்பாட்டை கண்டித்து ஆசிரிய இனம் ஒட்டுமொத்தமாக போராடினால் மட்டுமே கல்விச்சூழல் இனிதாக அமையும்

23.11.2015 அன்று தினமணி நாளிதழில் மத்திய அரசு அறிவித்த ஏழாவது ஊதியக்குழு அறிக்கை தொடர்பாகவும,அரசு அலுவலர்களுக்கு ஊதியம் அறிப்பது ’’தேவையற்ற சுமை” என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டது. அத்தலையங்கத்திற்கு-மாநிலத் தலைவர்,தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வேதனை மற்றும் விளக்கம்

23.11.2015 அன்று தினமணி நாளிதழில் மத்திய அரசு அறிவித்த ஏழாவது ஊதியக்குழு அறிக்கை தொடர்பாகவும,அரசு அலுவலர்களுக்கு ஊதியம் அறிப்பது ’’தேவையற்ற சுமை” என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டது. அத்தலையங்கத்திற்கு பதில் : தமிழகத்தில் தொண்ணுற்று ஐந்து ஆண்டு காலம் பாரம்பரியமிக்கதும்,தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற சங்கங்களில் முதன்மையானதாக திகழ்ந்து வருவதும்,தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளதும்,தமிழக அரசு அலுவலர்களின் பாதுகாப்பு அரணாக திகழ்ந்து வரும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் என்ற முறையில் இந்தக் கடிதத்தினை தினமணி நாளிதழ் ஆசிரியர் அவர்களின் கனிவான பார்வைக்கு வைக்க விரும்புகின்றேன். 23.11.2015 திங்கள் கிழமையன்று வெளிவந்த ”தினமணி” நாளிதழில் ”தேவையற்ற சுமை” என்ற தலைப்பில் வெளிவந்த தலையங்கத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் கண்டனம் என்று தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினாலும் நாகரீகம் கருதி எங்களது வேதனையை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசில் பணிபுரியும் 47 லட்சம் அரசு அலுவலர்கள் 52 லட்சம் ஓய்வூதியர்கள் ஆகியோருக்கான ஏழாவது ஊதியக்குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இவ்வறிக்கையினால் மத்திய அரசிற்கு ரூ.1 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கை தொடர்பாக தங்களது தலையங்கம் உடியாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற அவசரத்திலும்,அரசு அலுவலர்களின் பணி பற்றி தவறாக சிந்தித்தும்,குற்றம் சாட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும் அரைவேக்காட்டுத்தனமாக சித்தரிக்கப்பட்ட தலையங்கமோ? என்று தான் நாங்கள் எண்ணத் தோன்றுகின்றது. தலைங்கம் பற்றி எங்கள் கருத்தினை தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறோம். தற்போது வெளிவந்திருக்கும் இந்த ஏழாவது ஊதிய குழு அறிக்கை 1.1.2006க்கு பின்னர் 10 ஆண்டுகளுக்கு 1.1.2016ல் வெளிவரும் அறிக்கையாகும். மேலும், மத்திய அரசில் உள்ள ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து நிலை ராணுவ வீரர்களுக்கும் இவ்வூதியக்குழு பொருந்தும். இந்த ஊதியக்குழு பரிந்துரைகளின்படி அரசு அலுவலர்களின் ஊதியம் ”எங்கோ உயரப்போகிறது” என்ற கற்பனை யாருக்கும் வேண்டாம். ஒரு சிறு கணக்கீடு மத்திய அரசில் பணிபுரியும் ஓர் அடிப்படைப்ப்ணியாளர் தற்போது பெற்று வரும் ஊதியம் ..ரூ.5200+1800=7000. இந்த 7000த்தினை 2.57ல் பெருக்கி வரும் தொகை ரூ.17,990 ஆக ரூ.18,000 இதன் மூலம் ஒரு பணியாளருக்கு ரூ.11,000 ஊதியம் கூடும் என கற்பனை செய்ய வேண்டாம். 1.1.2016ல் அவ்வலுவலர் பெற்று வரும் அகவிலைப்படி 1.1.2016ல் 125 சதவீதம் ஆகும். இந்த 125 சதவீத அகவிலைப்படியும் அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படவேண்டும் என்றும் 1.1.2016ல் அகவிலைப்படி 0 சதவீதம் மட்டும் தான் என்பதையும் அறிக்கையில் தெளிவாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஓர் அடிப்படை அலுவலர் 1.1.2016ல் பெறும் ஊதியம் + அகவிலைப்படி ரூ.5200 + 1800 + = 8750 = ரூ.15750 ஆகும். ஆக ஏழாவது ஊதியக்குழு அறிக்கையின்படி 2.57சதவீதம் உயர்வின் மூலம் கிடைக்கும் ஊதியம் ரூ.18,000 அகவிலைப்படி 125 சதவீதத்தினை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வரும் தொகை ரூ.15,750 = 2,250/- ஆக 10 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசின் அடிப்படை பணியாளருக்கு கிடைக்கும் ஊதிய உயர்வு ரூ.2,250/- மட்டுமே என்பதை ”தினமணி” சரியாக புரிந்து கொள்ள வேண்டும். 10 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.2000/- மட்டும் ஊதிய உயர்வு பெறும் அலுவலர்களின் ஊதியம் தங்களின் பார்வையில் ”தேவையற்ற சுமையா” மத்திய அர8சாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் சரி அவ்வரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தினை வழங்குவது ”தேவையற்ற செவினம்” என்று கருதும் தினமணிக்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தெரிவித்த கருத்தையே பதிலாக முன் வைக்கின்றேன். ”அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ” வருவாய் செலவினம்” என்று கருதக்கூடாது. அது திட்ட ”முதலீட்டு செலவினம்” ஒரு திட்டத்தினை தீட்டும் பொழுது அத்திட்டத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வழங்கும் ஊதியத்தினை முதலீட்டு செலவினமாக எடுத்துக் கொள்வது போல் அரசு தீட்டும் பல மக்கள் நல திட்டங்களுக்காக பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு வழங்கும் ஊதியத்தினையும் அரசின் முதலீட்டு செலவினமாகத்தான் கருத வேண்டும்” என்று அன்றைக்கு தமிழக முதலமைச்சராக இருந்த பொழுது தமிழக சட்டசபையில் தெரிவித்த கருத்து இதுவாகும். ஆக, ஓர் அரசு மக்களுக்காக செயல்படுத்தும் மக்கள் நலத்திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கு எடுத்து செல்லப் பணிபுயும் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தங்கள் பார்வை ”தேவையற்ற சுமையா?” நாளிதழ் என்பது அனைத்து பிரச்னைகளையும் அவரவர் பார்வையில் பார்த்து, ஒவ்வொரு நிகழ்வினையும் ஆராய்ந்து, அதனை தனது பார்வையால் தீர்வு சொல்ல வேண்டிய நிலையில் இருப்பது. ஆனால், அரசு அலுவலர்களின் ஊதிய உயர்வு விஷயத்தில் எங்களது நிலையிலிருந்து இதனை ஆய்வு செய்யாமல் ஏற்கனவே ஒரு முடிவினை முடிவு செய்து கொண்டு தலையங்கம் தீட்டி இருப்பதும், மக்களுக்காக உழைத்து வரும் எங்களை ”தேவையற்ற சுமை” என்று விமர்சிப்பதும், பாரம்பரியமிக்க ”தினமணி”-யின் பார்வையில் கோளாறு ஏற்பட்டு விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஐந்து உரிமைகளை வழங்கியுள்ளது. (1) குடியுரிமை (2) காப்புரிமை (3) வாக்குரிமை (4) பேச்சுரிமை (5) எழுத்துரிமை. ஆனால், இந்திய குடிமக்களில் ஒருவராக வாழ்ந்து இந்திய குடிமக்களுக்காக உழைத்து வரும் அரசு அலுவலர்களுக்கு ”வாக்குரிமை” தவிர வேறு எந்த உரிமையும் இல்லை ”நடத்தை விதிகள்” என்ற பெயரில் எங்களது அனைத்து உரிமைகளையும் மறைமுகமாக பறிக்கப்பட்டுது என்பதை ”தினமணிக்கு” தெரியுமா? இந்திய நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களின் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகியவர்கள் தங்களுக்கு தாங்களே உயர்த்திக் கொள்ளும் நிலைப்பற்றி யாரும் வாய் திறக்காமல், அரசு அலுவலர்களின் ஊதியம் உயர்த்தப்படும் போது மட்டும், விமர்சித்து கருத்துக்களை தெரிவிப்பது ஏன்? அரசிற்காகவும், மக்களுக்காகவும் உழைத்து வரும் எங்களின் ஊதியம் மட்டும் எப்படி தங்களின் பார்வையில் ” தேவையற்ற சுமையாகும்?” இந்த இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் மத்திய, மாநில அரசு அலுவலர் சமுதாயம் அபரிதமான உழைப்பினை அளித்துள்ளார்கள் என்பதை ”தினமணி” நன்கு உணர வேண்டும். நாட்டில் நிகழும் இயற்கை சீற்றத்தின் காரணமாக நடக்கும் பேரிடர் நிகழ்வுகளால் ஏற்படும் இடர்பாடுகளிலிருந்து மக்களை காப்பாற்றியும், மீண்டும் இயல்புநிலை திரும்புவதற்கு அடிப்படை பணிகளிலிருந்து அனைத்துப் பணிகளையும் தங்களது பசியறியாது பணிபுரியும் அலுவலர்கள் என்பதை ”தினமணி” மறுக்க முடியுமா? இன்று உலகின் மிகப்பெரிய ராணுவங்களில் ஒன்று என்று பெருமையுடன் கருதப்படும் இந்திய ராணுவத்தின் அனைத்துப் படைகளிலும் அதன் பிற துறைகளிலும் பணிபுரிபவர்கள் அரசு அலுவலர்க்ளே. இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள தீவிரவாதத்தை தடுத்தல், பேரிடர் மேலாண்மை என்றும், எல்லையே இந்த நாட்டினை காக்க கண் துஞ்சாது, பசியறியாது பணிபுரியும் ராணுவ வீரர்கள் தினமணி-யின் பார்வையில் ”தேவையற்ற சுமையா” தமிழகத்தில் சுனாமி ஏற்பட்ட பொழுது தொற்று நோய் பரவும் என்ற உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தபோது சுனாமியால் ஏற்பட்ட தாக்கத்தினை சீர் செய்ததோடு மட்டுமல்லாது, அச்சுமியினால் ஏற்படும் தொற்று நோயால் ஒருவர் கூட மரிக்காமல் சீரமைத்த அற்புதத்தினை படைத்தவர்கள் எங்கள் அரசு அலுவலர்கள். பெரியம்மை, பிளேக், காலரா, தொழுநோய் போன்ற நோய்களை அடியோடு அகற்றி புதிய மறுமலர்ச்சியை உருவாக்கியது எங்கள் அரசு அலுவலர்கள். வெண்மை புரிட்சி, கல்விபுரட்சி, பசுமைபுரட்சி, தொழில் புரட்சி என்று சாசுவதமான எத்தனையோ புரட்சி வெற்றி பெற விதையாக இருப்பவர்களும் நாங்கள். மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும் அறிவிக்கும் மக்கள் நலத்திட்டங்கள் வெற்றி பெற்றுள்ளது என்று உங்கள் போன்ற ஊடகங்கள் தெரிவிக்கும் போது அவ்வெற்றிக்கு பின்னர் நிற்பது யார்? அரசு அலுவலர்கள் தான். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே அரசு அலுவலர்களுக்கான அறிவிப்பு வெளியிடும் பொழுதெல்லாம் ”அரசின் அச்சாணியாக செயல்படும் அரசு அலுவலர்கள்” என்று விளித்து கூறுவார்கள். அதன்படி ஓர் அரசின் அச்சாணியாக மாண்புமிகு முதலமைச்சர் பார்வையில் திகழும் நாங்கள் ”தினமணி”-யின் பார்வைக்கு மட்டும் எப்படி ”தேவையற்ற சுமை”யானோம். அரசு அலுவலர்கள் அனைவரும் கையூட்டு வாங்குகிறார்கள் இல்லை என்ற தாங்களே தலையங்கத்தில் கூறிவிட்டு கையூட்டாக பெறும் தொகை என்று ஓர் தனியார் நிறுவன ஆய்வினை சுட்டிக் காட்டியுள்ளீர்கள். பத்திரிக்கை உலகிலும், ஊடகங்களிலும் தங்களைப் போன்ற பாரம்பரியமிக்க நிறுவனங்கள் செயல்படும் வேளையில், போலி பத்திரிக்கைகளும், நிலவி வரும் போது ஒட்டு மொத்தமாக அனைவரையும் குறைசொல்ல இயலாது அல்லவா? அதைப்போல யாரோ சிலர் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த அரசு அலுவலர் சமுதாயத்தினை குறை சொல்வது ”தினமணி” -க்கு அழகல்ல.. இவ்வாறு குறிப்பிட்டது ஒரு சிறு துளி தான்.. .. .. மேலும் குறிப்பிட்டு எழுத முடியும், ஆனால், நாட்களும்,தாட்களும் பத்தாது.. .. .. இறுதியாக,, இந்தியாவில் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் போலியான பெயரில் உலவும் வணிக நிறுவனங்கள், பல பணக்காரர்கள் வரியினை ஏய்ப்பு செய்கிறார்கள் என்று ”தினமணி” போன்ற பத்திரிக்கைகளில் செய்தி வருவதை தொடர்ந்து நாங்கள் பார்த்து வரகிறோம். ஆனால், இந்த இந்தியாவில் வருமான வரியினை ஒழுங்காக கட்டி வரும் ஒரே சமுதாயம் அரசு அலுவலர் சமுதாயம் மட்டுமே என்பதை தங்கள் பார்வைக்கு சுட்டி காட்ட கடைமைப்பட்டுள்ளோம் என்பதோடு வரி ஒழுங்காக கட்டி வரும் எங்களை பற்றியும் தினமணி எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம். ”தேவையற்ற சுமை” என்று எங்களை விளித்தது வேதனை தந்தாலும் இந்த விளக்கத்தினை தங்கள் பார்வைக்கு தெரிவிக்க விழைந்தமைக்கு அத் தலையங்கத்திற்கு நன்றி. அய்யா, நாங்கள் அரசிற்கும் மக்களுக்கும் ”தேவையற்ற சுமை” அல்ல ’சுமைதாங்கிகள்’ அன்புடன் (இரா.சண்முகராஜன்) மாநிலத் தலைவர் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்