23.11.2015 அன்று தினமணி நாளிதழில் மத்திய அரசு அறிவித்த ஏழாவது ஊதியக்குழு அறிக்கை தொடர்பாகவும,அரசு அலுவலர்களுக்கு ஊதியம் அறிப்பது ’’தேவையற்ற சுமை” என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டது. அத்தலையங்கத்திற்கு பதில் : தமிழகத்தில் தொண்ணுற்று ஐந்து ஆண்டு காலம் பாரம்பரியமிக்கதும்,தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற சங்கங்களில் முதன்மையானதாக திகழ்ந்து வருவதும்,தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளதும்,தமிழக அரசு அலுவலர்களின் பாதுகாப்பு அரணாக திகழ்ந்து வரும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் என்ற முறையில் இந்தக் கடிதத்தினை தினமணி நாளிதழ் ஆசிரியர் அவர்களின் கனிவான பார்வைக்கு வைக்க விரும்புகின்றேன். 23.11.2015 திங்கள் கிழமையன்று வெளிவந்த ”தினமணி” நாளிதழில் ”தேவையற்ற சுமை” என்ற தலைப்பில் வெளிவந்த தலையங்கத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் கண்டனம் என்று தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினாலும் நாகரீகம் கருதி எங்களது வேதனையை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசில் பணிபுரியும் 47 லட்சம் அரசு அலுவலர்கள் 52 லட்சம் ஓய்வூதியர்கள் ஆகியோருக்கான ஏழாவது ஊதியக்குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இவ்வறிக்கையினால் மத்திய அரசிற்கு ரூ.1 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கை தொடர்பாக தங்களது தலையங்கம் உடியாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற அவசரத்திலும்,அரசு அலுவலர்களின் பணி பற்றி தவறாக சிந்தித்தும்,குற்றம் சாட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும் அரைவேக்காட்டுத்தனமாக சித்தரிக்கப்பட்ட தலையங்கமோ? என்று தான் நாங்கள் எண்ணத் தோன்றுகின்றது. தலைங்கம் பற்றி எங்கள் கருத்தினை தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறோம். தற்போது வெளிவந்திருக்கும் இந்த ஏழாவது ஊதிய குழு அறிக்கை 1.1.2006க்கு பின்னர் 10 ஆண்டுகளுக்கு 1.1.2016ல் வெளிவரும் அறிக்கையாகும். மேலும், மத்திய அரசில் உள்ள ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து நிலை ராணுவ வீரர்களுக்கும் இவ்வூதியக்குழு பொருந்தும். இந்த ஊதியக்குழு பரிந்துரைகளின்படி அரசு அலுவலர்களின் ஊதியம் ”எங்கோ உயரப்போகிறது” என்ற கற்பனை யாருக்கும் வேண்டாம். ஒரு சிறு கணக்கீடு மத்திய அரசில் பணிபுரியும் ஓர் அடிப்படைப்ப்ணியாளர் தற்போது பெற்று வரும் ஊதியம் ..ரூ.5200+1800=7000. இந்த 7000த்தினை 2.57ல் பெருக்கி வரும் தொகை ரூ.17,990 ஆக ரூ.18,000 இதன் மூலம் ஒரு பணியாளருக்கு ரூ.11,000 ஊதியம் கூடும் என கற்பனை செய்ய வேண்டாம். 1.1.2016ல் அவ்வலுவலர் பெற்று வரும் அகவிலைப்படி 1.1.2016ல் 125 சதவீதம் ஆகும். இந்த 125 சதவீத அகவிலைப்படியும் அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படவேண்டும் என்றும் 1.1.2016ல் அகவிலைப்படி 0 சதவீதம் மட்டும் தான் என்பதையும் அறிக்கையில் தெளிவாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஓர் அடிப்படை அலுவலர் 1.1.2016ல் பெறும் ஊதியம் + அகவிலைப்படி ரூ.5200 + 1800 + = 8750 = ரூ.15750 ஆகும். ஆக ஏழாவது ஊதியக்குழு அறிக்கையின்படி 2.57சதவீதம் உயர்வின் மூலம் கிடைக்கும் ஊதியம் ரூ.18,000 அகவிலைப்படி 125 சதவீதத்தினை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வரும் தொகை ரூ.15,750 = 2,250/- ஆக 10 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசின் அடிப்படை பணியாளருக்கு கிடைக்கும் ஊதிய உயர்வு ரூ.2,250/- மட்டுமே என்பதை ”தினமணி” சரியாக புரிந்து கொள்ள வேண்டும். 10 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.2000/- மட்டும் ஊதிய உயர்வு பெறும் அலுவலர்களின் ஊதியம் தங்களின் பார்வையில் ”தேவையற்ற சுமையா” மத்திய அர8சாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் சரி அவ்வரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தினை வழங்குவது ”தேவையற்ற செவினம்” என்று கருதும் தினமணிக்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தெரிவித்த கருத்தையே பதிலாக முன் வைக்கின்றேன். ”அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ” வருவாய் செலவினம்” என்று கருதக்கூடாது. அது திட்ட ”முதலீட்டு செலவினம்” ஒரு திட்டத்தினை தீட்டும் பொழுது அத்திட்டத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வழங்கும் ஊதியத்தினை முதலீட்டு செலவினமாக எடுத்துக் கொள்வது போல் அரசு தீட்டும் பல மக்கள் நல திட்டங்களுக்காக பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு வழங்கும் ஊதியத்தினையும் அரசின் முதலீட்டு செலவினமாகத்தான் கருத வேண்டும்” என்று அன்றைக்கு தமிழக முதலமைச்சராக இருந்த பொழுது தமிழக சட்டசபையில் தெரிவித்த கருத்து இதுவாகும். ஆக, ஓர் அரசு மக்களுக்காக செயல்படுத்தும் மக்கள் நலத்திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கு எடுத்து செல்லப் பணிபுயும் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தங்கள் பார்வை ”தேவையற்ற சுமையா?” நாளிதழ் என்பது அனைத்து பிரச்னைகளையும் அவரவர் பார்வையில் பார்த்து, ஒவ்வொரு நிகழ்வினையும் ஆராய்ந்து, அதனை தனது பார்வையால் தீர்வு சொல்ல வேண்டிய நிலையில் இருப்பது. ஆனால், அரசு அலுவலர்களின் ஊதிய உயர்வு விஷயத்தில் எங்களது நிலையிலிருந்து இதனை ஆய்வு செய்யாமல் ஏற்கனவே ஒரு முடிவினை முடிவு செய்து கொண்டு தலையங்கம் தீட்டி இருப்பதும், மக்களுக்காக உழைத்து வரும் எங்களை ”தேவையற்ற சுமை” என்று விமர்சிப்பதும், பாரம்பரியமிக்க ”தினமணி”-யின் பார்வையில் கோளாறு ஏற்பட்டு விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஐந்து உரிமைகளை வழங்கியுள்ளது. (1) குடியுரிமை (2) காப்புரிமை (3) வாக்குரிமை (4) பேச்சுரிமை (5) எழுத்துரிமை. ஆனால், இந்திய குடிமக்களில் ஒருவராக வாழ்ந்து இந்திய குடிமக்களுக்காக உழைத்து வரும் அரசு அலுவலர்களுக்கு ”வாக்குரிமை” தவிர வேறு எந்த உரிமையும் இல்லை ”நடத்தை விதிகள்” என்ற பெயரில் எங்களது அனைத்து உரிமைகளையும் மறைமுகமாக பறிக்கப்பட்டுது என்பதை ”தினமணிக்கு” தெரியுமா? இந்திய நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களின் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகியவர்கள் தங்களுக்கு தாங்களே உயர்த்திக் கொள்ளும் நிலைப்பற்றி யாரும் வாய் திறக்காமல், அரசு அலுவலர்களின் ஊதியம் உயர்த்தப்படும் போது மட்டும், விமர்சித்து கருத்துக்களை தெரிவிப்பது ஏன்? அரசிற்காகவும், மக்களுக்காகவும் உழைத்து வரும் எங்களின் ஊதியம் மட்டும் எப்படி தங்களின் பார்வையில் ” தேவையற்ற சுமையாகும்?” இந்த இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் மத்திய, மாநில அரசு அலுவலர் சமுதாயம் அபரிதமான உழைப்பினை அளித்துள்ளார்கள் என்பதை ”தினமணி” நன்கு உணர வேண்டும். நாட்டில் நிகழும் இயற்கை சீற்றத்தின் காரணமாக நடக்கும் பேரிடர் நிகழ்வுகளால் ஏற்படும் இடர்பாடுகளிலிருந்து மக்களை காப்பாற்றியும், மீண்டும் இயல்புநிலை திரும்புவதற்கு அடிப்படை பணிகளிலிருந்து அனைத்துப் பணிகளையும் தங்களது பசியறியாது பணிபுரியும் அலுவலர்கள் என்பதை ”தினமணி” மறுக்க முடியுமா? இன்று உலகின் மிகப்பெரிய ராணுவங்களில் ஒன்று என்று பெருமையுடன் கருதப்படும் இந்திய ராணுவத்தின் அனைத்துப் படைகளிலும் அதன் பிற துறைகளிலும் பணிபுரிபவர்கள் அரசு அலுவலர்க்ளே. இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள தீவிரவாதத்தை தடுத்தல், பேரிடர் மேலாண்மை என்றும், எல்லையே இந்த நாட்டினை காக்க கண் துஞ்சாது, பசியறியாது பணிபுரியும் ராணுவ வீரர்கள் தினமணி-யின் பார்வையில் ”தேவையற்ற சுமையா” தமிழகத்தில் சுனாமி ஏற்பட்ட பொழுது தொற்று நோய் பரவும் என்ற உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தபோது சுனாமியால் ஏற்பட்ட தாக்கத்தினை சீர் செய்ததோடு மட்டுமல்லாது, அச்சுமியினால் ஏற்படும் தொற்று நோயால் ஒருவர் கூட மரிக்காமல் சீரமைத்த அற்புதத்தினை படைத்தவர்கள் எங்கள் அரசு அலுவலர்கள். பெரியம்மை, பிளேக், காலரா, தொழுநோய் போன்ற நோய்களை அடியோடு அகற்றி புதிய மறுமலர்ச்சியை உருவாக்கியது எங்கள் அரசு அலுவலர்கள். வெண்மை புரிட்சி, கல்விபுரட்சி, பசுமைபுரட்சி, தொழில் புரட்சி என்று சாசுவதமான எத்தனையோ புரட்சி வெற்றி பெற விதையாக இருப்பவர்களும் நாங்கள். மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும் அறிவிக்கும் மக்கள் நலத்திட்டங்கள் வெற்றி பெற்றுள்ளது என்று உங்கள் போன்ற ஊடகங்கள் தெரிவிக்கும் போது அவ்வெற்றிக்கு பின்னர் நிற்பது யார்? அரசு அலுவலர்கள் தான். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே அரசு அலுவலர்களுக்கான அறிவிப்பு வெளியிடும் பொழுதெல்லாம் ”அரசின் அச்சாணியாக செயல்படும் அரசு அலுவலர்கள்” என்று விளித்து கூறுவார்கள். அதன்படி ஓர் அரசின் அச்சாணியாக மாண்புமிகு முதலமைச்சர் பார்வையில் திகழும் நாங்கள் ”தினமணி”-யின் பார்வைக்கு மட்டும் எப்படி ”தேவையற்ற சுமை”யானோம். அரசு அலுவலர்கள் அனைவரும் கையூட்டு வாங்குகிறார்கள் இல்லை என்ற தாங்களே தலையங்கத்தில் கூறிவிட்டு கையூட்டாக பெறும் தொகை என்று ஓர் தனியார் நிறுவன ஆய்வினை சுட்டிக் காட்டியுள்ளீர்கள். பத்திரிக்கை உலகிலும், ஊடகங்களிலும் தங்களைப் போன்ற பாரம்பரியமிக்க நிறுவனங்கள் செயல்படும் வேளையில், போலி பத்திரிக்கைகளும், நிலவி வரும் போது ஒட்டு மொத்தமாக அனைவரையும் குறைசொல்ல இயலாது அல்லவா? அதைப்போல யாரோ சிலர் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த அரசு அலுவலர் சமுதாயத்தினை குறை சொல்வது ”தினமணி” -க்கு அழகல்ல.. இவ்வாறு குறிப்பிட்டது ஒரு சிறு துளி தான்.. .. .. மேலும் குறிப்பிட்டு எழுத முடியும், ஆனால், நாட்களும்,தாட்களும் பத்தாது.. .. .. இறுதியாக,, இந்தியாவில் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் போலியான பெயரில் உலவும் வணிக நிறுவனங்கள், பல பணக்காரர்கள் வரியினை ஏய்ப்பு செய்கிறார்கள் என்று ”தினமணி” போன்ற பத்திரிக்கைகளில் செய்தி வருவதை தொடர்ந்து நாங்கள் பார்த்து வரகிறோம். ஆனால், இந்த இந்தியாவில் வருமான வரியினை ஒழுங்காக கட்டி வரும் ஒரே சமுதாயம் அரசு அலுவலர் சமுதாயம் மட்டுமே என்பதை தங்கள் பார்வைக்கு சுட்டி காட்ட கடைமைப்பட்டுள்ளோம் என்பதோடு வரி ஒழுங்காக கட்டி வரும் எங்களை பற்றியும் தினமணி எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம். ”தேவையற்ற சுமை” என்று எங்களை விளித்தது வேதனை தந்தாலும் இந்த விளக்கத்தினை தங்கள் பார்வைக்கு தெரிவிக்க விழைந்தமைக்கு அத் தலையங்கத்திற்கு நன்றி. அய்யா, நாங்கள் அரசிற்கும் மக்களுக்கும் ”தேவையற்ற சுமை” அல்ல ’சுமைதாங்கிகள்’ அன்புடன் (இரா.சண்முகராஜன்) மாநிலத் தலைவர் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்
- Home
- TET
- TRP
- TNPSC
- CCE
- Forms
- GO
- Results
- Teachers Profile Form
- NHIS CARD DOWNLOAD
- KNOW UR GPF,TPF STATUS
- ஆதார் எண்ணை பதிவு செய்வது எப்படி?
- CPS A/C SLIP ONLINE
- EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை
- EMIS TNSCHOOLS
- பொருள் வாங்காத குடும்ப அட்டை
- தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தொகுப்பு
- தமிழில் எழுத
- பள்ளிகள் பற்றிய விவரங்கள்
- INCOMETAX INDIA
- தேசிய திறனறித் தேர்வு
- NMMS ON LINE ENTRY
- EMIS இணையதளம்
- தேசிய கல்வி உதவித் தொகை
- கல்விச் செய்திகள்
- தகவல் துளிகள்
- பொதுஅறிவுகட்டுரை
- உடல்நலம் மருத்துவம்
- சிந்தனை கதைகள்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.
Download
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக