அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில் யாருக்கு அதிகப் பங்கு இருக்கிறது?
கற்க கசடற விற்க அதற்குத் தக!
பாரதி தம்பி, படம்: க.பாலாஜி
அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில் யாருக்கு அதிகப் பங்கு இருக்கிறது? நம் எல்லோருக்குமே இருக்கிறது என்றாலும், கூடுதல் பங்கு அரசு ஆசிரியர்களுக்கு இருக்கிறது. எந்த அரசுப் பள்ளியில் படித்து அந்த வேலையைப் பெற்றார்களோ, எந்த அரசுப் பள்ளியில் பணிபுரிந்து பல்லாயிரம் ரூபாய் ஊதியமாகப் பெறுகிறார்களோ... அந்த அரசுப் பள்ளியின்மீது ஆசிரியர்களுக்கு கொஞ்சம்கூட மரியாதை இல்லை. ஒவ்வொரு நாளும் கடமைக்காக பள்ளிக்குச் சென்று வருபவர்கள்தான் அதிகம்.
ஒரு கிராமத்துப் பள்ளியில் 15 ஆண்டுகள் ஓர் ஆசிரியர் பணிபுரிந்து, அவர் தன் வேலையை ஒழுங்காகச் செய்யாதவராக இருப்பாராயின், ஒரு தலைமுறையின் அறிவு வளர்ச்சி முடமாக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். 'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்பது ஏதோ எதுகை - மோனை வசனம் அல்ல. ஒரு மனிதனின் வாழ்க்கையை நெறிப்படுத்தி, செதுக்குவதில் ஆசிரியர் முதன்மையான பாத்திரம் வகிக்கிறார். ஆனால், இதை உணர்ந்திருக்கும் ஆசிரியர்கள், படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகின்றனர். ஆசிரியர் பணியின்மீது சிறு மதிப்பும் இல்லாமல், வேண்டாவெறுப்பாக பள்ளிக்கு வந்து, மிகுந்த அவநம்பிக்கையுடன் வகுப்பறைக்குள் நுழைகின்றனர். 'இதுங்கல்லாம் படிச்சு என்ன ஜில்லா கலெக்டர் ஆகப்போகுதுங்களா?’ என்று தன் மாணவர்களைப் பார்த்துச் சொல்லும் ஆசிரியர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்குத் தன்மீதும் மதிப்பு இல்லை; தன் பள்ளியின்மீதும் மதிப்பு இல்லை.
ஓர் ஆசிரியர், ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவரிடம் கற்கும் மாணவர்கள், இளமையின் வேகத்துடன் இருக்கின்றனர். புதிய தொழில்நுட்பங்களை, நவீன அறிவியலை மிக எளிதாக உள்வாங்கிக்கொள்கின்றனர். பயிற்றுநர்கள் என்ற அடிப்படையில் ஆசிரியர்களும் அந்த வேகத்தில் ஓடியாக வேண்டும். ஆசிரியர்களுக்கு மட்டும் அல்ல... இது அனைத்து தொழிலுக்கும் பொருந்தும். ஒரு தையல்காரர், 1980-களில் தைத்த 'பெல்பாட்டம் பேன்ட்’போல இன்றும் தைத்துக்கொண்டிருக்க முடியாது. இன்று அவர் ஸ்லிம் ஃபிட் தைத்தாக வேண்டும். இல்லை என்றால் அவருக்குத் தொழில் இல்லை. 'எனக்கு கம்ப்யூட்டர் இயக்கத் தெரியாது. எழுதியே பழகிவிட்டது’ என்று ஒதுங்கி நின்றவர்களை காலம் ஒதுக்கிவிட்டது. அதைப்போலவே இது ஸ்பெஷலிஸ்ட்களின் காலம். வெறும் எம்.பி.பி.எஸ்-க்கு மதிப்பு இல்லை. எம்.டி., எம்.எஸ் என்று ஏதாவது ஒன்றில் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்க வேண்டும். அதற்காக, 'ஸ்பெஷல் தோசையைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது’ என்றாலும் ஹோட்டல் நடத்த முடியாது. உங்கள் ஹோட்டலில் ஸ்பெஷல் தோசைதான் ஸ்பெஷல் என்றாலும், மற்றவையும் அங்கே கிடைக்க வேண்டும். ஏனெனில் இது மல்டிப்ளெக்ஸ்களின் காலம். ஆக, நவீன காலத்துக்கு அப்டேட் ஆவது, தன் துறையில் நிபுணத்துவம் பெறுவது, தன்னைச் சார்ந்துள்ள துறைகளை அறிந்திருப்பது, எப்போதும் புதுமைகளை உள்வாங்கத் தயாராக இருப்பது... இவை அனைத்துமே இன்று அடிப்படைத் தேவை!
சாதாரண ஒரு வேலையைச் செய்யவே இவை அவசியம் என்னும்போது, ஒரு தலைமுறைக்கு அறிவைப் போதிக்கும் பெரும் பணியைச் செய்யும் ஆசிரியர்களுக்கு இந்தத் தகுதிகள் கூடுதலாகவே தேவை. கல்வித் துறையில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள், நம் நாட்டில் உள்ள கல்விமுறைகளின் சாதக-பாதகங்கள், உலக அளவில் முன்னேறிய நாடுகளில் எப்படி கல்வி போதிக்கப்படுகிறது, நவீனத் தொழில்நுட்பங்களை வகுப்பறையில் பயன்படுத்தும் முறை... என எப்போதும் அவர்கள் தேடுதலுடன் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல்போனால், அதன் பாதிப்பைச் சுமப்பது மாணவர்கள்தான். ஒரு தையல்காரர் நவீன மாற்றங்களை உள்வாங்காமல் தொழில் நடத்த முடியாமல்போவது அவருடைய தனிப்பட்ட நஷ்டம். அதுவே ஓர் ஆசிரியர் காலத்தால் பின்தங்கி இருந்தால் நஷ்டம், அந்த வகுப்பறையின் மாணவர்களுக்கு. வகுப்பில் 50 மாணவர்கள் இருந்தால் 50 குடும்பங்களின் வளர்ச்சி பின்தங்கிவிடுகிறது. இத்தகைய பரந்துபட்ட புரிதல் இருக்கும்போதுதான், ஆசிரியர் பணியை ஒட்டுதலுடன் பார்க்க முடியும்.
அனைத்து பள்ளிகளுக்கும் போதுமான எண்ணிக்கையில் கழிப்பறைகள் கட்டித்தர முன்வராத அரசு, லேப்டாப் தருவதில் மட்டும் முனைப்புடன் இருக்கிறதே ஏன்? புதிய டாஸ்மாக் திறக்கும் அரசு, புதிய பள்ளிகளைத் திறந்துள்ளதா? இத்தகைய சிந்தனைமுறை ஆசிரியருக்கு இருக்கும்போதுதான், வகுப்பறையை முதிர்ச்சியுடன் வழிநடத்த முடியும். ஒரு மாணவருக்கு கற்றல் குறைபாடு இருக்கிறது எனில், அதன் பின்னே உள்ள சமூகக் காரணத்தை அப்போதுதான் இனம் காண முடியும். ஆனால் நடைமுறை யதார்த்தத்தை ஒப்பிடும்போது இது வெகுதூரத்தில் ஒரு கனவுக் காட்சியைப்போல் உள்ளது. பல ஆசிரியர்கள் வேலைக்குச் செல்வதையே தியாகம் செய்வதைப்போல உணர்கின்றனர். 10, 15 ஆண்டுகள் சர்வீஸ் போட்டுவிட்ட ஆசிரியர்களுக்கு நிறைய விடுமுறைகள் மிச்சம் இருக்கும். அவர்கள் அற்பக் காரணங்களுக்காக அல்லது காரணமே இல்லாமல்கூட விடுமுறை எடுக்கின்றனர். 'சும்மா அலுப்பா இருக்கு’ என்று 10 நாட்கள் விடுமுறை எடுப்பார்கள். தனியார் பள்ளியில் படிக்கும் தன் சொந்த மகன் அல்லது மகளுக்கு ப்ளஸ் டூ பரீட்சை வரும்போது ஒரு மாதம் மருத்துவ விடுப்பு எடுப்பார்கள். அந்த நேரத்தில், தான் பணியாற்றும் பள்ளியில், தன்னிடம் படிக்கும் பிள்ளைகளுக்கு யார் சொல்லித்தருவது என்பது அவர்களின் எண்ணத்திலேயே இருக்காது.
'பெரும்பாலான ஆசிரியர்கள் இப்படி இருக்காங்கதான். நான் மறுக்கலை. அதுக்காக எங்களுக்கு வேலையே இல்லைங்றதைப்போல சொல்லக் கூடாது. குறிப்பா ஆசிரியர்கள் ஒவ்வொருத்தருக்கும் கற்பித்தல் அல்லாத வேலைகள் (Non-Teaching works) மலைமாதிரி குவிஞ்சுகிடக்கு’ என்று ஓர் ஆசிரியர் சொன்னார். இதிலும் உண்மை உள்ளது!
பாடம் எடுப்பது மட்டுமே இன்றைய ஆசிரியரின் பணி அல்ல. ரெக்கார்டுகள் எழுதிக் குவிக்க வேண்டியுள்ளது. ஆசிரியரின் பெரும்பகுதி நேரம் இதற்கே செலவு ஆகிறது. குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கும் இலவசப் பொருட்களை நிர்வகிக்க வேண்டிய பெரும் சுமை ஆசிரியர்களிடமே இருக்கிறது. சீருடை, நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், சைக்கிள், மாணவிகளுக்கு இலவச நாப்கின், ஃபோலிக் ஆசிட் மாத்திரை, லேப்டாப், வரைபடம், வண்ண பென்சில், ஸ்கூல் பேக், செருப்பு, ஜியாமெட்ரி பாக்ஸ்... போன்ற இந்தப் பொருட்கள் அனைத்தும் ஒரே நாளில் தரப்படுவது இல்லை. ஆண்டு முழுவதும் வெவ்வேறு நாட்களில் இவை வந்துகொண்டே இருக்கும். ஒரு பள்ளியில் 1,000 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு வகுப்புவாரியாகப் பிரித்து இவற்றை வழங்க வேண்டும். அவற்றுக்கான ஆவணங்களைத் தயார்செய்ய வேண்டும். ஒவ்வொரு பருவத்துக்கும் தேவையான நோட்டுப் புத்தகங்களும், பாடப் புத்தகங்களும் மாவட்ட, வட்டாரத் தலைநகரங்களுக்கு வரும். அதைப்போய் எடுத்துவர வேண்டும். அது ஒரே முறையில் முடிந்துவிடாது. 'அறிவியல் புக் அடுத்த வாரம்தான் வரும்’ என்பார்கள். அதற்கு ஒருமுறை மீண்டும் போக வேண்டும். ஒரு பருவத்துக்குக் குறைந்தது 5 முறை அலைய வேண்டியிருக்கும். இதுபோன்ற வேலைகளைச் செய்ய அரசுப் பள்ளிகளில் நிர்வாக ஊழியர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். எல்லா வேலைகளையும் ஆசிரியர்கள்தான் செய்தாக வேண்டியுள்ளது.
இதை மறுக்கவில்லை. ஆனால் அப்படி வேலைப்பளு இருந்தால், அதற்காக ஆசிரியர் சங்கம் மூலம் போராடி நியாயத்தைப் பெற வேண்டும். ஏனெனில், ஆசிரியர்களின் முதன்மையான நோக்கம் பயிற்றுவிப்பதுதான். அதைப் பின்னுக்குத் தள்ளி இதர வேலைகள் தங்களை ஆக்கிரமிப்பதை அனுமதிக்கக் கூடாது. அதேநேரம், 'வேலைக்கு அப்பாற்பட்ட வேலை’ பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஆசிரியர்களுக்கான பிரத்யேக சிக்கல் இல்லை என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்வின் அழுத்தம் அதிகரித்துவிட்ட நவீன காலத்தில், எல்லா துறைகளிலும் இத்தகைய மதிப்புக் கூட்டு வேலைகள் (Value added works) அதிகரித்துவிட்டன. ஒரு மளிகைக் கடை அண்ணாச்சி முன்பு மாதிரி கடையில் உட்கார்ந்துகொண்டு இப்போது தொழில் நடத்த முடியாது. வீட்டுக்குத் தண்ணீர் கேன் போடுவதில் அவருக்கு ஒரு கேனுக்கு 2 ரூபாய்தான் கிடைக்கிறது என்றாலும், மூன்று மாடி ஏறியிறங்கிப் போடுகிறார். அப்போதுதான் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். 'என் வேலை இது மட்டும்தான்’ என்று யாராலும் கறாராகச் சொல்ல முடியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளைக் கடந்து பணிபுரிந்தாக வேண்டிய நிர்பந்தம் அனைத்து பிரிவினருக்கும் இருக்கிறது. இது சரியா, தவறா என்பது தனி விவாதம். இங்கு சொல்லவருவது, இந்தச் சிக்கல் ஆசிரியர்களுக்கு மட்டுமானது இல்லை. அரசுப் பள்ளியில் பிள்ளையைச் சேர்த்துவிட்டிருக்கும் கூலித் தொழிலாளியும் கூடுதல் வேலை செய்துதான் குடும்பத்தை நடத்த வேண்டியுள்ளது.
புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், இத்தகைய சூழலிலும்கூட தாங்கள் ஒரு பாதுகாக்கப்பட்ட பணியில் இருப்பதையும், நல்ல ஊதியம் பெறுவதையும்தான். இன்று மாநிலம் முழுக்க ஆசிரியர் தம்பதிகள் ஏராளமானோர் இருக்கின்றனர். கணவன் 50 ஆயிரம், மனைவி 50 ஆயிரம் என்று குறைந்தபட்சம் 1 லட்சம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் தாங்கள் பணியாற்றும் அரசுப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் என்ன சம்பாதிக்கிறார்கள் என்பது குறித்து யோசித்திருக்கிறார்களா? மிகமிக சாதாரணப் பின்னணியைச் சேர்ந்த ஏழைப் பெற்றோர்கள் அவர்கள். தங்கள் பிள்ளை படித்து வந்து குடும்பத்தைக் கரைசேர்க்கும் என்ற நம்பிக்கையின் பிடிமானத்தில் வாழ்கிறார்கள். ஏதுமற்றோரைக் கடைத்தேற்ற கல்வியைவிட்டால் வேறு நாதி ஏது? அதை வழங்கும் ஆசிரியர்களாகிய நீங்கள் பெற்றோர்களுக்கு தெய்வங்கள். படிக்காத ஒரு தொழிலாளி, ஆசிரியரைப் பார்த்ததும் கையெடுத்துக் கும்பிடுகிறார் என்றால் அது வெறும் மரியாதை அல்ல. நீங்கள் பெற்றிருக்கும் கல்விமீதான பிரமிப்பு. தன் பிள்ளைக்கும் அதைத் தருகிறாரே என்ற நன்றியுணர்ச்சி. அந்த நன்றிக்கு உரியவராக ஆசிரியர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
பள்ளியில் உட்கார்ந்து ரியல் எஸ்டேட், வட்டிக்கு விடுவது போன்ற தலையாயப் பணிகளைப் பார்த்துக்கொண்டிருப்பது ஒரு தலைமுறைக்கே செய்யும் துரோகம் என்ற குற்றவுணர்ச்சி முதலில் வர வேண்டும். பிற்காலத்தில் தன் ஆசிரியரைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது, மாணவனின் மனதில் நல்லவிதமாக நீங்கள் பதிவாக வேண்டும். மாறாக 'வட்டி வாத்தியார்’ என்ற கறுப்பு அடையாளத்துடன் அல்ல!
- பாடம் படிப்போம்...
இப்படியும் சில ஆசிரியர்கள்...
மாநிலம் முழுவதும் பரவியுள்ள தனியார் பள்ளிகள் பலவற்றில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பங்குதாரர்களாக இருக்கின்றனர். அரசுப் பள்ளியில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, தன் 'பங்குதாரர்’ பள்ளியில் பாடம் நடத்துபவர்கள் பலர். அல்லது அரசுப் பள்ளியில் தன் வேலையை செய்ய 5,000 சம்பளத்துக்கு ஓர் ஆசிரியரை உள் வாடகைக்கு நியமித்துவிட்டு இவர் தனியார் பள்ளியில் பாடம் நடத்துவார். பல இடங்களில் இது நடக்கிறது. முக்கியமாக அரசுப் பள்ளிகளில் சில ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் உயிரைக் கொடுத்துப் பாடம் நடத்தி மாணவர்களை நன்றாகப் படிக்கவைப்பார்கள். அதே பள்ளியில் இருக்கும் இந்த 'பங்குதாரர்’ ஆசிரியரோ... யார் நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர் என்பதைக் 'கண்காணித்து’ அவர்களை தன்னுடைய தனியார் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆள்பிடி வேலையைச் செய்வார். ஜூன் மாத ஆரம்பத்தில்தான் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இத்தகைய 'பங்குதாரர்’ ஆசிரியர்கள் பெரும்பாலும் ஜூன் முதல் வாரத்தில் மருத்துவ விடுப்புப் போட்டுவிட்டு தனியார் பள்ளிக்கு அட்மிஷனுக்குப் போய்விடுவார்கள். நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, ஊத்தங்கரை, தருமபுரி பகுதிகளில் இது மிக அதிகம்.
அரசுப் பள்ளியில் பணிபுரிந்து பல்லாயிரம் ரூபாய் ஊதியமாகப் பெறுகிறார்களோ... அந்த அரசுப் பள்ளியின்மீது ஆசிரியர்களுக்கு கொஞ்சம்கூட மரியாதை இல்லை. ஒவ்வொரு நாளும் கடமைக்காக பள்ளிக்குச் சென்று வருபவர்கள்தான் அதிகம்" இது அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் பொருந்தும்.
sundark
இதை அரசு பள்ளி ஆசிரியர்கள் படிப்பார்களா? படித்து ஒரு 10% ஆசிரியர்கள் மாறினாலே மிக பெரிய வெற்றி இந்த கட்டுரைக்கு..
ReachJegan