தமிழகம் முழுவதும், 11 லட்சம் போலி வாக்காளர்களின் பெயர்களை,
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது; ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டும், 30 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், ஆண்டு தோறும், அக்டோபர் முழுவதும், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடத்தப்பட்டு, ஜனவரி, 5ல், இறுதி வாக்காளர் பட்டியில் வெளியிடப்படும்.
சிறப்பு முகாம்
அதன்படி, இந்தாண்டு அக்டோபரில், தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி துவங்கியது. இரண்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன; ஆன் - லைனிலும் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.
0:00
இதன்படி, ஒரு மாதத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி, 4.60 லட்சம்; நீக்கக்கோரி, 1.58 லட்சம்; முகவரி மாற்றக் கோரி, ஒரு லட்சம்; திருத்தம் கோரி, 51 ஆயிரத்து, 84 என, மொத்தம், 7.69 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவம்பர், 30 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விரும்புவோர், ஆர்.டி.ஓ., மற்றும் தாலுகா அலுவலகங்களில், விண்ணப்பம் அளிக்கலாம். தேர்தல் கமிஷன் இணையதளத்தில், ஆன் - லைன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில், 'சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள, 40 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்' என, தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனில், மனு அளிக்கப்பட்டது. இது குறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில், 30 ஆயிரத்து, 495 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்; தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது.
விசாரணை:
தமிழகம் முழுவதும், ஒன்றுக்கும் மேற்பட்டஇடங்களில் உள்ள பெயர்கள், இடம் மாறிசென்றவர்கள், இறந்தவர்கள் என, 9.45 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அக்டோபரில், பெயர் நீக்கக் கோரி, 1.58 லட்சம் விண்ணப்பங்கள் பெறபட்டுள்ளன. இவற்றையும் சேர்ந்து, மொத்தம், 11.03 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட உள்ளன.
இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி கூறுகையில், ''11.03 லட்சம் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று, அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர். நீக்க வேண்டியவை என, உறுதி செய்து, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்,'' என்றார்.