பெரம்பலுார் : பார்வையற்ற பெண் ஆசிரியை
, அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு ஆங்கில பாடம் கற்பித்து அசத்தி
வருகிறார்.
பெரம்பலுார் மாவட்டம், பொம்மனப்பாடி கிராமத்தில் உள்ள யூனியன் நடுநிலைப் பள்ளியில், ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை, 107 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியை உட்பட, எட்டு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு, பாப்பாத்தி, 29, என்பவர், ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக, 2012 முதல், பணியாற்றி வருகிறார். ஆங்கிலத்தில், எம்.ஏ., - பி.எட்., முடித்துள்ள பாப்பாத்தி, பார்வையற்றவர். துவக்கப் பள்ளி முதல், 'பிரெய்லி' முறையில் படித்தவர். தற்போது, எம்.பில்., பட்டப் படிப்பும் படித்து வருகிறார். ஆறு ஆண்டுகளாக, இங்கேயே பணியாற்றி வருகிறார்.
பாப்பாத்தி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஆங்கில பாடம் நடத்துகிறார். மாணவ - மாணவியருக்கு எளிதில் புரியும் படியும், ஆடிப் பாடியும் எளிமையாக பாடம் நடத்துகிறார். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், உரையாடவும் பயிற்சி அளிக்கிறார்.
'தனியார் பள்ளி மாணவர்களுடன், அரசு பள்ளி மாணவர்கள் போட்டியிடும் வகையில், இவரது ஆங்கிலம் போதிக்கும் திறன் உள்ளது' என, அவருடன் பணியாற்றும் சக ஆசிரியர்களே பெருமிதம் கொள்கின்றனர்.
ஆசிரியை பாப்பாத்தி கூறியதாவது: எனக்கு ஒன்றரை வயதில், மூளைக் காய்ச்சலால் பார்வை பறிபோனது. கலெக்டராக வேண்டும் என்பதே என் ஆசை. பார்வையற்றவர், ஐ.ஏ.எஸ்., ஆக முடியாது என்பதால், என் ஆசிரியை ரூபி என்பவரின் வழிகாட்டுதலின்படி, ஆங்கில பாடப்பிரிவு எடுத்து படித்தேன். பெற்றோர் இறந்து விட்டனர். இரண்டு அண்ணன், அக்கா உள்ளனர். என் முயற்சிக்கு, பெரிய அண்ணன் குடும்பத்தினர், மிகவும் உறுதுணையாக இருந்தனர்.
பாடப் புத்தகங்களை, பிரெய்லி முறையில் தான் வைத்துள்ளேன். ஆங்கிலம் வாசித்தல் மற்றும் உச்சரிப்பு, உரையாட பயிற்சி கொடுக்கிறேன். மதிய உணவு இடைவேளை உட்பட, நேரம் கிடைக்கும் போதெல்லாம், மாணவர்களுக்கு, 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்பும் எடுக்கிறேன். என் ஊரிலிருந்து, 15 கி.மீட்டரில் உள்ள பள்ளிக்கு, பஸ்சில் தனியாகவே வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
பாடம் நடத்துவதில் மட்டுமின்றி, பள்ளிக்கு சரியான நேரத்தில், வந்து செல்வதையும் பாப்பாத்தி வழக்கமாக வைத்து உள்ளார்.