யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/6/17

3-லிருந்து 67 மாணவர்கள்...! அரசுப் பள்ளியைச் சீராக்கிய ஆசிரியை!

மூன்று மாணவர்கள் மட்டுமே இருப்பதால், இந்த அரசுப் பள்ளி மூடப்படும்' என்று அறிவிக்கப்பட்ட அரசு தொடக்கப் பள்ளி ஒன்றை, தனது அர்ப்பணிப்பு மிக்க உழைப்பால் மீட்டிருக்கிறார் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை. இன்று அந்தப் பள்ளியில் 67 மாணவர்கள் படிக்கிறார்கள்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது மட்டங்கிப்பட்டி. சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் இந்த ஊர் கிராமத்தின் அரசு தொடக்கப் பள்ளியில் ஆரம்ப காலத்தில் நிறைய மாணவர்கள் படித்தார்கள். அங்குள்ள இளைஞர்கள், பெண்கள் பலரும் அங்கே படித்தவர்கள்தான். ஆனால், ஆங்கில மோகம் மற்றும் தனியார் பள்ளி ஈர்ப்பு காரணமாகப் படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இரண்டு ஆசிரியர்கள் இருக்கும் பள்ளியில் மூன்றே மூன்று மாணவர்கள்தான் என்ற நிலை. இனி, இப்பள்ளி மூடப்பட்டுவிடும் என்ற நிலையில் தீவிரமாகக் களம் இறங்கியிருக்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியை பாரதி மலர்.


''இந்தக் கிராமத்தில் இருக்கிற பிள்ளைங்க பக்கத்து ஊரில் இருக்கிற தனியார் பள்ளிக்குப் போயிட்டாங்க. அதனால், ஸ்கூலை மூடறதா அரசாங்கம் முடிவு பண்ணிடுச்சு. இதைப் பத்தி ஊரில் இருக்கிற ஒவ்வொரு குடும்பத்தையும் நேரில் சந்திச்சு சொன்னேன். 'ஊரிலிருக்கும் ஒரு பள்ளியை மூடறதால் என்னென்ன விஷயங்களை இழப்பீங்க தெரியுமா?'னு எடுத்துச் சொன்னேன். கொஞ்ச பேர் புரிஞ்சுக்கிட்டாங்க. ஆனாலும், நாங்கதான் சரியாப் படிக்கலை. எங்க குழந்தைகளாவது இங்கிலீஷ் மீடியத்துல படிக்கணும்னு ஆசைப்படறோம்னு சொன்னாங்க. தண்ணீர், கழிப்பறை வசதி இல்லைன்னு பலவற்றையும் சொன்னாங்க. அவங்களோட உணர்வைப் புரிஞ்சுக்கிட்டேன். 'இந்த ஸ்கூலிலேயே இங்கிலீஷ் மீடியத்தைக் கொண்டுவரேன். மற்ற வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யறேன்'னு அவங்களுக்கு உறுதி தந்தேன்.
ஊரின் பெரியவங்க சிலரைப் பலமுறை சந்திச்சு அரசுப் பள்ளியின் முக்கியத்துவத்தைச் சொன்னேன். 'சரிம்மா, நாங்க கூட்டம் போட்டு இந்த ஸ்கூலில் பசங்களைச் சேர்க்கணும்னு ஊர்க்கட்டுப்பாடு விதிக்கிறோம்'னு சொன்னாங்க. கூட்டமும் நடந்துச்சு. அங்கே வந்த மக்கள், 'நீங்க கொஞ்ச நாள் இந்த ஸ்கூலில் வேலை செஞ்சுட்டு மாறுதலாகி போயிருவீங்க. அப்புறம் நாங்க என்ன செய்யறது? நீங்க சொல்ற வசதிகள் எங்க பிள்ளைகளுக்குக் கிடைக்கும்னு எப்படி நம்பறது?'னு கேட்டாங்க. நானும் என்னோடு வேலை செய்யும் டீச்சரும் 'இந்தப் பள்ளிக்கான வசதிகள் வர்ற வரைக்கும் நாங்க வேற இடத்துக்கு மாறமாட்டோம்'னு உறுதியா சொன்னோம். ஸ்கூல் முன்னேற்றத்துக்காக ஒரு கமிட்டி உருவாக்கி அதுக்கு இந்த ஊரைச் சேர்ந்த பழனி முருகன் என்பவரை தலைவரா நியமிச்சோம்'' என்கிறார் பாரதி மலர்.

''ஊர்மக்களை சம்மதிக்கவைக்கிறது அவ்வளவு லேசா நடக்கலைங்க'' என்றபடி பேச ஆரம்பித்தார் பழனி முருகன். ''என் பிள்ளைகளையும் பக்கத்து ஊர் தனியார் பள்ளியில்தான் படிக்கவெச்சுட்டு இருந்தேன். ஆனா, நான் படிச்சது இந்த ஸ்கூல்லதான். இந்த ஊரில் இருக்கிற என் தலைமுறை ஆளுங்க எல்லோருமே இங்கேதான் படிச்சோம். அப்படியிருக்கிறப்ப நம்ம பிள்ளைகளை மட்டும் தனியார் பள்ளியில் சேர்த்துட்டு, ஒரு ஸ்கூலையே மூடவைக்கிறோமேனு நினைச்சு வெட்கப்பட்டேன். இங்கிலீஷ் மீடியம் வரணும். கராத்தே, யோகா கிளாஸ்களைக் கொண்டுவரணும்னு மக்கள் சொன்ன விஷயங்களைச் செய்யறதுனு முடிவுப் பண்ணினோம். இதுக்கெல்லாம் பத்து லட்சம் ரூபாயாவது தேவைப்படும்னு தெரிஞ்சது. எங்க ஊரைச் சேர்ந்தவங்க பலரும் அபுதாபி, துபாய்னு வெளிநாட்டுல வேலைப் பார்க்கிறாங்க. அவங்கக்கிட்ட பேசி நிதி திரட்ட ஆரம்பிச்சோம். 'மட்டங்கிபட்டி வாட்ஸ்அப் குரூப்' என ஒன்றை ஆரம்பிச்சு தொடர்புகொண்டோம். நிறைய பேர் பண உதவி செஞ்சாங்க. எங்க ஊரு எம்எல்ஏ., எட்டு லட்சம் கொடுத்தார்'' என்கிறார்.
''அந்தப் பணத்தைவெச்சு செயலில் இறங்கினோம். பள்ளியின் புது வகுப்பறைகளைக் கட்டும் எல்லா வேலைகளையும் ஊர்மக்களே செஞ்சாங்க. புதிய வகுப்பறைகள், குழந்தைகளுக்கு மினரல் வாட்டர் என எல்லா வசதிகளையும் செஞ்சுட்டோம். பலரும் பிள்ளைகளை இங்கே சேர்த்தாங்க. இதைப் பார்த்து அரசாங்கத்திலிருந்து புதுசா இரண்டு டீச்சர்களை நியமிச்சாங்க. வசதிகளையும் செஞ்சுத் தர முடியாது. குழந்தைகளுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கத்துத்தர்றதுக்காகப் பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்து நாங்களே ஒரு டீச்சரை நியமிச்சோம். யோகா, கராத்தே வகுப்புகளும் நடத்துறோம். டீச்சர்கள் எல்லோரும் சேர்ந்து ராத்திரி, பகலா கண் முழிச்சு வகுப்பறை சுவர்களில் ஓவியங்களை வரைஞ்சாங்க. அதேமாதிரி அரசு கொடுக்கும் இலவச சீருடை, செருப்புகளில் அளவு குறைவா இருக்கிற பிள்ளைகளுக்கு நாங்களே ஏற்பாடு செஞ்சு கொடுத்தோம். இப்போ, பள்ளிக்குச் சுற்றுச் சுவர் வேணும். அதை அரசாங்கம் செஞ்சு கொடுக்கும்னு எதிர்பாக்கிறோம்'' என்கிறார் தலைமை ஆசிரியை பாரதி மலர்.
மட்டங்கிபட்டியைப் போல ஒவ்வொரு கிராமத்து மக்களும் ஆசிரியர்களும் அக்கறையுடன் ஒன்றிணைந்தால், அரசுப் பள்ளிகள் கம்பீரமாக உயர்ந்து நின்று குழந்தைகளுக்குத் தரமான கல்வியை அளிக்கும்!
படங்கள்: வீ. சதீஷ்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக