கொச்சி:நாடு முழுவதும், 73 கோடி பேர், சுகாதாரமற்ற
இடங்களில், இயற்கை உபாதைகள் கழிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிஉள்ளது. கழிப்பறை வசதி இல்லாததால், 35 கோடி பெண்கள், பாதுகாப்பற்ற இடங்களில் இயற்கை உபாதைகளை கழிப்பதாகவும், ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'வாட்டர் எய்டு' எனப்படும், சர்வதேச தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:தனிநபர் சுகாதாரம் மற்றும் கழிப்பறை பயன்பாடு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், பல தகவல்கள் கிடைத்துள்ளன.உலக மக்கள் தொகையில், இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவோர் அதிகம் உள்ளனர்.
சுகாதாரமற்ற இடங்களில் இயற்கை உபாதைகளை கழிப்போர் எண்ணிக்கையில், உலக அளவில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில், 73 கோடி பேர், சுகாதாரமற்ற இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். 35 கோடி பெண்கள், திறந்தவெளியில், சுகாதாரமற்ற முறையில், இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இந்தியர்களில் பெரும்பாலானோர், முறையான கழிப்பறைகளை பயன்படுத்துவதில்லை.
உலக மக்கள் தொகையில், முதலிடம் வகிக்கும் சீனா, சுகாதாரமற்ற கழிப்பறை பயன்பாட்டில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்த நாட்டில், 34 கோடி பேர், சுகாதாரமற்ற கழிப்பிடங்களை பயன்படுத்துகின்றனர். ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா, இந்த பட்டியலில், மூன்றாம் இடத்தில் உள்ளது.
உலகம் முழுவதும், 110 கோடி பேர், சுகாதாரமற்ற கழிப்பிடங்களை பயன்படுத்துகின்றனர். நீர் பற்றாக்குறை, குறைவான இட வசதி, மக்கள் நெருக்கடி போன்ற பல காரணங்களால் இந்த அவலம் நீடிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஐந்து கோடி கழிப்பறை
உலக அளவில், சுகாதாரமற்ற கழிப்பறைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையில், இந்தியா முதலிடம் வகிக்கும் நிலையில், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளின் பட்டியலிலும், இந்தியா முன்னிலை வகிக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், அக்., 2014 முதல், நவ., 2017 வரை, 5.2 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம், பல கிராமங்கள், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக மாறியுள்ளன. மிக விரைவில், நாடு முழுவதும் இந்த நிலையை ஏற்படுத்த, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக