கற்றல் என்பது இலக்கின்றி, பொருளின்றி, வரையறையின்றி, விவாதமின்றி, பயனின்றி மனனம் செய்து மதிப்பெண் பெறுதல்; ஏட்டில் உள்ளதை மூளையில் பதித்து, தேர்வுக் கூடத்தில் தாளில் பதித்தல்; தேர்வு முடிந்ததும் அனைத்தையும் மறத்தல் என்ற அளவில் இன்று _ குறிப்பாக இந்தியாவில் நடைபெறுகிறது.
கல்வியென்பது வல்லுனர்கள், அரசு, பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் ஆகியோரோடு பின்னிப் பிணைந்தது.
கல்வி எப்படியிருக்க வேண்டும் என்பதை கல்வியாளர்களும் அரசும் தீர்மானிக்க வேண்டும். அதைப் பொறுப்போடு மாணவர்க்குச் சேர்க்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள்; அதைச் சரியாகப் பெற வேண்டியவர்கள் மாணவர்கள்; பெறச்செய்ய வேண்டியவர்கள் பெற்றோர்.
எனவே, கற்கும் கல்வி பயனுடையதாக இருக்க, ஆற்றல், அறிவு, வல்லன வளர்ப்பதாய் இருக்க பொறுப்பேற்க வேண்டியவர்கள் அரசும், கல்வியாளர்களுமே!
அரசு என்பது மக்கள் தேர்வு செய்கின்ற ஆட்சியாளர்களும், அரசு அலுவலர்களும் ஆவர். அரசு அலுவலர்கள், ஆட்சியாளர்கள் இடும் கட்டளையை அப்படியே நிறைவேற்ற வேண்டியவர்கள். எனவே, அவர்கள் கல்வியைத் தீர்மானிக்கக் கூடியவர்கள் அல்ல. கல்வியைத் தீர்மானிக்க வேண்டிய ஆட்சியாளர்களோ, அதில் தெளிவும், நுட்பமும், வல்லமையும், அதற்குரிய அறிவும் அற்றவர்கள் - விலக்காக ஓரிருவர் இருக்கலாம்.
எனவே, கல்வியை வகுத்தளிக்க வேண்டிய பெரும் பொறுப்பும் கல்வியாளர்களுக்கே உண்டு. ஆனால், அந்தக் கல்வியாளர்கள் வகுத்தளிக்கும் வல்லமையுடையவர்களேயன்றி, நிறைவேற்றும் அதிகாரம் உடையவர்கள் அல்ல.
ஆக, ஆட்சியாளர்கள் பொறுப்போடு, தொலைநோக்கோடு, கல்வியாளர்களை முறையாக, வெளிப்படையாக, தயக்கமின்றி கருத்துரைக்க வழிசெய்து கல்வியின் உள்ளடக்கத்தைத் தீர்மானித்து _ என்ன கற்பது, எப்படிக் கற்பது, எப்படிக் கற்பிப்பது என்பனவற்றை வரையறுத்து மாணவர்களைக் கற்கச் செய்வது மட்டுமே உண்மையான கல்வியாய் அமைந்து பயன் தரும்.
மாறாக, ஆட்சியாளர் தான்தோன்றித் தனமான விருப்பு வெறுப்புகளையெல்லாம் கல்வித் திட்டமாக்கினால், அது பயனற்றுப் போவதோடு சமூக எதிர்ச் செயலாயும் ஆகும்.
முதலில் அரசும் கல்வியாளர்களும் கல்வியென்பது பதிவா? தெளிவா? என்பதை முடிவுசெய்து கொள்ள வேண்டும்.
யார் ஒருவன் நினைவாற்றலோடு பதிவு செய்து தேர்வில் எழுதுகிறானோ அவனே உயர் மாணவன், சிறந்த கல்வி கற்றவன் என்பது எவ்வகையில் சரியாகும்? அது நினைவாற்றல் திறனை மட்டுமே வெளிப்படுத்தும்.
நவீன கருவிகள் இல்லாத காலத்தில் நினைவாற்றல் முதன்மையிடத்தில் இருந்தது. இன்றைக்கு அது கட்டாயம் இல்லை. நினைவாற்றல் இன்றியே சாதிக்க முடியும்!
திருக்குறளைத் தலைகீழாகச் சொல்லும் நினைவாற்றல் உள்ள ஒருவர், திருக்குறளில் புலமை உள்ளவர் என்றாவாரா? திருக்குறளை மனப்பாடமாகச் சொல்லத் தெரியாதவர்கள் எல்லாம் திருக்குறளில் புலமை இல்லாதவர்கள் என்று ஆகுவரா?
இந்த நுட்பமான வேறுபாட்டைப் புரிந்துகொண்டால் கல்வித் திட்டம், பாடத் திட்டம், பயிலும் முறை எப்படியிருக்க வேண்டும் என்பது பளிச்செனப் புலப்படும்.
எனவே, புரிதலும் தெளிதலும்இன்றி கற்கும் கல்வி கல்வியே அல்ல. அது வெறும் மனனப் பயிற்சி மட்டுமே!
படித்தது அனைத்தும் பதிந்ததா? என்பதைவிட, படித்தது அனைத்தும் புரிந்ததா? என்பதே எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது! புரிதலும் தெளிதலும் இல்லாமல் எவ்வளவு செய்திகளை மூளையில் பதிவு செய்தாலும் என்ன பயன்? ஒலிப்பதிவு செய்யப்பட்ட நாடாவிற்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடு?
படிப்பது அனைத்தும் புரிய வேண்டும், தெளிவாக வேண்டும் என்றால் கற்பிப்போர், கற்கும் மொழி இரண்டும் முதன்மைப் பங்கு வகிக்கும் நிலையில், இவற்றில் ஒரு தெளிவான கொள்கை முடிவு கல்வியாளர்களுக்கும் அரசுக்கும் வேண்டும்.
அதிலும் குறிப்பாக அடிப்படையான தொடக்கக் கல்வி எம்மொழியில் பயிலப்பட வேண்டும் என்பது மிக முதன்மையாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
தாய்மொழி வழிக் கல்விதான் அதற்குச் சரியான தீர்வு என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, 5ஆம் வகுப்பு வரையில் தாய்வழிக் கல்வி என்பது மட்டுமல்ல, முடிந்தால் கல்லூரிக் கல்விவரை தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதும் அசைக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை!
ஆனால், மக்களாட்சி நாட்டில், விரும்பிய மொழியில் கற்க உரிமையில்லையா? என்ற விவாதம் கட்டாயம் எழுகிறது.
விரும்பியதை உண்பது என்பதைவிட உகந்ததை, நலம் தருவதை உண்பது என்பதுதான் சரியாக இருக்க முடியும்! அது கல்வி கற்கும் பயிற்றுமொழிக்கும் பொருந்தும். எதன்வழி கற்பது சிறந்தது என்பதே கருத்தில் கொள்ளப்பட வேண்டியது.
அதேவேளையில் தொடர்பு மொழியான ஆங்கில அறிவு மாணவர்களுக்குக் கட்டாயம் என்பது உண்மை! ஆங்கிலத்தில் படிக்க, பேச, எழுத உரிய வல்லமை உருவாக்கப்பட வேண்டும் என்பதும் கட்டாயம். அதற்குரிய பயிற்சி அடித்தட்டு மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்; அதுவும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்
இங்கு ஓர் உண்மையை அனைவரும் ஆழமாய் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுதல் என்பது பழக்கத்தில் வருவதேயன்றி, படித்து வருவதன்று.
ஆங்கிலத்தில் மட்டுமே கட்டாயம் பேச வேண்டும் என்ற கட்டாயச் சூழலில் ஆங்கிலத்தை ஒருவர் சரளமாகப் பேச முடியும். மேல்நிலைக் கல்வி வரை தமிழில் படித்து, பின் பொறியியல் படிப்பை ஆங்கில வழியில் படித்து முடித்து, ஆங்கிலத்தில் பேச வராத கிராமப்புறத்து மாணவர்கள் எல்லாம், நிறுவனங்களில் பணியில் சேர்ந்த பின் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் ஆற்றல் பெற்றதெல்லாம் நடைமுறை உண்மை.
ஆங்கில வழியில் கற்றுத்தான் ஆகவேண்டும் என்று பிடிவாதமாய் கற்கும் மாணவர்கள், கற்பது எதுவாயினும் அதைத் தெளிவாய் தன் தாய்மொழியில் புரிந்து கற்க வேண்டும். காரணம், கற்றல் என்பது பதிவு அல்ல. தெளிவு!
தெளிவற்ற, விளங்காத கல்வி பயனற்றுப் பாழாகும்!