யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/12/15

பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு விரைவில் தேர்வு?

நடப்பு கல்வியாண்டு, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.வரும், 2016ல், தமிழக சட்டசபை தேர்தல் வருவதால், பொதுத் தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில், சென்னை உட்பட, 32 வருவாய் மாவட்டங்களில், பிளஸ் 2க்கு, 2,400; 10ம் வகுப்புக்கு, 3,500 மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பள்ளிகளை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது.பிளஸ் 2 தேர்வில், தனித்தேர்வர்கள் உட்பட, 8.5 லட்சம் பேர்; 10ம் வகுப்பு தேர்வில், 10.5 லட்சம் பேர் பங்கேற்கலாம் என தெரிகிறது. இதேபோல், வினாத்தாள் தயாரிப்பு, பார் கோடுடன் கூடிய விடைத்தாள் மற்றும் முகப்பு சீட்டு தயாரிப்பு போன்ற பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில், தேர்வு தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்
படுகிறது. இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:மழை வெள்ளத்தால், நடப்பாண்டு, அரையாண்டு தேர்வு நடப்பதில் சிக்கல் உள்ளது. ஆனாலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஏற்கனவே பாடங்கள் நடத்தி முடித்துவிட்டனர். அதனால், முன்கூட்டியே தேர்வு நடத்தினால், மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்; எனினும், அது குறித்து ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆசிரியர்களின் தொடர் மறியல் ஒத்திவைப்பு

வெள்ள பாதிப்பைக் கருத்தில்கொண்டு, ஆசிரியர் இயக்கங்கள் டிசம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படவிருந்த தொடர் மறியல் போராட்டம் ஜனவரி 30, 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜாக்டோ) மாநிலத் தொடர்பாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

 மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், வெள்ள பாதிப்புக்காக போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
 மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நீண்ட நாள்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால், சிறப்பு வகுப்புகள் நடத்தவும் "ஜாக்டோ'வின் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக இளங்கோவன் தெரிவித்தார்.

அரசுத் தேர்வுகள் இயக்குநராக தண்.வசுந்தராதேவி மீண்டும் நியமனம்

அரசுத் தேர்வுகள் இயக்குநராக தண்.வசுந்தராதேவி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
 இவர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்- செயலராக இருந்தார். அரசுத் தேர்வுகள் இயக்குநராக இருந்த கே.தேவராஜன் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்பையும் வசுந்தராதேவி கூடுதலாக கவனித்து வந்தார். மார்ச் மாதத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளதால், முழு நேரமாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 இவர் 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்- செயலராக இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 புதிய உறுப்பினர் செயலர்: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கூடுதல் உறுப்பினராக இருந்த டி.உமா (பள்ளிக் கல்வி இணை இயக்குநர்), உறுப்பினர்-செயலராக (பள்ளிக் கல்வி இயக்குநர்) பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் (பணியாளர் நலன்) உள்ளிட்டப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம்: தமிழக அரசு புதிய உத்தரவு

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியத்தை அளிப்பதற்கான உத்தரவில் சில நடைமுறைகளை தமிழக அரசு எளிதாக்கியுள்ளது.
 மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியத்தை அளிக்க தமிழக அரசு டிசம்பர் 13-இல் ஒரு உத்தரவு பிறப்பித்தது. 
 அதில், ஒரு நாள் அல்லது விரும்பும் நாள்களைத் தெரிவித்து அதற்கான தொகையைப் பிடித்தம் செய்து கொள்ள ஒப்புதல் அளிக்கலாம். இதற்கான ஒப்புதல் கடிதத்தை அளிக்க வேண்டும். தொகையைப் பிடித்தம் செய்து அதற்கான காசோலையையும், ஊதியம் பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்கள் விவரங்கள் அடங்கிய பட்டியலையும் சம்பந்தப்பட்ட துறைக்கே கருவூலம்-கணக்குத் துறை அதிகாரிகள் அனுப்பி வைப்பர்' என்று தமிழக அரசின் குறிப்பிடப்பட்டிருந்தது.

 மேலும், கருவூலத் துறை அதிகாரியால் அனுப்பப்படும் காசோலையும், பெயர்ப் பட்டியலும் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியால் தமிழக அரசுக்கு அனுப்பப்படும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நடைமுறை இப்போது மாற்றப்பட்டுள்ளது.
 இதுகுறித்து, பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலர் பி.டபிள்யூ.சி. டேவிதார் அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:-
 ""டிசம்பர் மாதத்துக்கான அரசு ஊழியர்களின் ஒருநாள் அல்லது அதற்கு மேற்பட்ட (அவர்கள் விரும்பினால்) ஊதியம் எவ்வளவு என்பதை கணினி வழியிலான சம்பளக் கணக்கு பட்டியலில் கணக்கிட்டுக் கொள்ளலாம். இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகையை, நேரடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான சேமிப்புக் கணக்குக்கு அனுப்பி வைக்கலாம். மாத ஊதியத்தை வரவு வைக்கும் போது இந்த நிதியைக் கணக்கில் செலுத்தலாம். இதுகுறித்த தகவலை மாவட்ட அதிகாரிகள், துறைத் தலைவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

உயர் கல்வித்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரனை

அரசு, அரசு உதவி பெறும், அரச உதவி பெறாத கலை மற்றும் அறிவியல் ககல்லூரிகளில் மாணவர் சேர்கையில் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறிப்பிட்டுள்ளன. அதன்படி கல்லூரிகள்தகுதி(மெரிட்) அடிப்படை முறை பின்பற்ற வேண்டும் என்று சட்டம் உள்ளது.
ஆனால் சில ஆயிரம் விண்ணப்பங்களை விற்பனை செய்து மாணவர்களின் மதிப்பெண், மாணவர்களின் தகுதி (மெரிட்) அடிப்படையில் பட்டியலை லயோலா கல்லூரி வெளியீடமால் தன்னிச்சையாகதேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பட்டியலை லயோலா கல்லூரி வெளியிட்டுள்ளது.
2015-16 கல்வி ஆண்டின் நடைப்பெற்றுள்ள மாணவர்களின் சேர்க்கையை இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை நீதிபதி சத்தியநாராயணா அவர்கள் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி லயோலே கல்லூரி மாணவர்கள் சேர்க்கை குறித்த உயர் கல்வித்துறை 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை மனுதாராருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால், நினைவூட்டால் கடிதம் கொடுத்தும் இன்று வரை இதனை உயர் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை செய்து அறிக்கையை வழக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர் கல்வித்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று (17.12.2015) விசாணைக்கு வருகின்றது.

அடுத்தடுத்து தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி?

சென்னையில் கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாகப் பள்ளிகள் நீண்ட விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், அடுத்தடுத்து தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் கவலை பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக தொடர்ந்து 33 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 14 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அரையாண்டு தேர்வு மற்றும் பொதுத்தேர்வு அடுத்தடுத்து எதிர்கொள்ள உள்ள நிலையில் மாணவர்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

தேர்வை ஒத்தி வைக்கக்கூடாது என்றும் தேர்வை எளிமையாக நடத்த வேண்டும் என்றும் ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு மனநல ஆலோசகர் மூலம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் மாணவர்களிடையே ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்ற அளவில் மாணவர்களிடையே பலவித கேள்விகள் நிலவி வருகின்றது. இதற்கு, தமிழக அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ள பாதிப்பு: பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களில் சிறப்பு வகுப்புகள் இலவசமாக நடத்தப்படும் என ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கம் மேகநாதன் கூறினார்.
 இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியது:
 சென்னையில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் பள்ளி மாணவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக எங்களது கல்வி நிறுவனங்களின் சார்பில் ஸ்ரீபெரும்புதூர், கீழ்ப்பாக்கம், ராமாபுரம் ஆகிய இடங்களில் முக்கியப் பாடங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.

 இந்த வகுப்புகளை பேராசிரியர் முத்துசாமி ஒருங்கிணைப்பார். இதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் hod.maths@rajalakshmi.edu.in என்ற இ மெயிலில் பதிவு செய்து கொள்ளலாம். இவர்களுக்கு டிசம்பர் 19 முதல் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். வார இறுதி நாள்களில் இந்த வகுப்புகள் நடைபெறும்.
 அதேபோல், இந்த வெள்ளத்தில் அனைத்தையும் இழந்த தள்ளுவண்டி வியாபாரிகள், சிறு, குறு வியாபாரிகள் ஆகியோருக்கு உதவியும், வங்கிக் கடன் பெற ஆலோசனையும் இலவசமாக வழங்கப்படும். இதற்கான ஒருங்கிணைப்பாளராக எஸ்.கௌதம் செயல்படுவார். இவரை 8939528028 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் தற்கொலையில் 2வது இடத்தில் தமிழகம்!

கடந்த 2014ம் ஆண்டில் 8,068மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இப்பட்டியலில் தமிழகம் 2வது இடம் பிடித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ராஜ்யசபாவில் தெரிவித்ததாவது: மனஅழுத்தம் மற்றும் பல்வேறு காரணங்களால், கடந்த 2014ம் ஆண்டில் 8,068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் பல்வேறு மாநிலங்களில் 7,753 மாணவர்களும், யூனியன் பிரதேசங்களில் 315 மாணவர்களும் அடங்குவர். தமிழகம் 2வது இடம் : இதில் முதல் மூன்று இடங்கள் முறையே மகாராஷ்டிரா, தமிழகம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன.

மகாராஷ்டிராவில் 1,191 மாணவர்களும், அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 853 மாணவர்களும், மேற்கு வங்கத்தில் 709 மாணவர்களும் தற்கொலை செய்துள்ளனர். 2013லும் மகாராஷ்டிரா முதலிடம் : 2013ம் ஆண்டில் நாடெங்கிலும் 8,423 மாணவர்கள் தற்கொலை செய்து இறந்தனர். இதிலும் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,141 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். 2012ல் 6,654 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதில் மேற்குவங்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் விவரம் கணக்கில் இல்லை. இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 11-ல் அரையாண்டு தேர்வு: தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு வரும் ஜனவரி மாதம் 11-ம் தேதி துவங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தன. ஜனவரி 11-ம் தேதி துவங்கும் தேர்வு அந்த மாதம் 27-ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மீறி ஜனவரி 11-ம் தேதிக்கு முன்னரே அரையாண்டு தேர்வை நடத்தினால், தேர்வு நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

CPS news : உயர்நீதிமன்றம் உத்தரவு :

புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற
தேனி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தொட்டப்பன், கற்பகவல்லி , சுகிர்தா மற்றும் புஷ்பம் ஆகியோர்

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஓய்வூதியம் வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்தனர். இம்மனுக்களை விசாரணை செய்த நீதியரசர். ராஜா இவர்களுக்கு 2 மாத காலத்தில் ஓய்வூதிய தொகை வழங்க  உத்தரவு பிறப்பித்தார்.
திண்டுக்கல் எங்கெல்ஸ்

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 

இவ்வழக்குகளை க.பரமத்தி ஒன்றிய ஆசிரியர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு எண் விவரம். WP.15724, WP.15725, WP.15726, WP.15727, WP.15728/2014.

NMMS ஊக்கத்தொகை தேர்வில் சிக்கல்:

பள்ளிக் கல்வி முடிக்கும் வரை, இடைநிற்றல் இல்லாமல் படிக்க, உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, தேசிய திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு, மாதம், 500 ரூபாய் வீதம், பிளஸ் 2 முடிக்கும் வரை வழங்கப்படும்.

இந்த ஆண்டு தேர்வுக்கான விண்ணப்பங்களை, 24ம் தேதி வரை, தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என, தலைமை ஆசிரியர்களுக்கு, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்தார். ஆனால், இணையதளத்துக்கான, 'பாஸ்வேர்டு' வழங்கப்படவில்லை. அதனால், மாணவர்களின் விவரங்களை, இணையதளத்தில் பதிவேற்ற முடியாமல், தலைமை ஆசிரியர்கள் திணறுகின்றனர்.

பி.எப்., பணத்தை உடனே எடுக்கலாம்!

பி.எப்., சந்தாதாரர்கள், அவர்களது கணக்கில் இருந்து பணம் எடுக்க, புது வசதிஅறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதுகுறித்து, பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக வட்டாரம் கூறியதாவது:ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும், பி.எப்., தொகைக்கு, பொது கணக்கு எண் எனப்படும், யு.ஏ.என்., வழங்கப்படுகிறது. நாட்டில், நான்கு கோடி தொழிலாளர்களுக்கு, யு.ஏ.என்., அளிக்கப்பட்டு உள்ளது.

இதில், இரண்டு கோடி தொழிலாளர்கள், யு.ஏ.என்., முறையை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர்.மீதம் உள்ளவர்களுக்கு, யு.ஏ.என்., பயன்பாட்டு முறை பற்றி போதியதகவல்கள் இல்லை. இவர்களும், விரைவில், யு.ஏ.என்., முறையை பயன்படுத்த கற்றுத் தரப்படுவர். பொது கணக்கு எண்ணுடன், ஆதார் மற்றும் வங்கி கணக்கு எண்களை இணைக்க, சந்தாதாரர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதன்படி, ஆதார் மற்றும் வங்கிக் கணக்குகளை இணைத்த சந்தாதாரர்கள், அவர்களுடைய இருப்புத் தொகையில் இருந்து, தேவையான தொகையை, அவர்களே எடுத்துக்கொள்ளலாம். இதற்கு, வேலை அளிக்கும் நிறுவனத்தின் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. இத்திட்டம் மூலம், பி.எப்., தொகையை, வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்க முடியாது. மேலும், மூன்றாம் நபர் மூலம், பி.எப்., தொகை எடுப்பதால் ஏற்படும் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது

பாதிக்கப்பட்டவர்கள் வங்கி கணக்கில் 10 நாட்களுக்குள்நிவாரண தொகை:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 10 நாட்களுக்குள், வங்கி கணக்கில் நிவாரண தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சென்னை மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தலா, 5,000 ரூபாய் வழங்கப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார்.
கடந்த எட்டு நாட்களுக்கு முன், சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து, தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் வீடு வீடாகசென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் ஆதார் எண், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய எண்களை பிரத்யோக விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்து, அந்த குடும்ப உறுப்பினர்களிடம் கையொப்பம் பெற்று வருகின்றனர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அரசின், 'லினக்ஸ்' மென்பொருளில், பதிவுசெய்வதற்காக தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் துறை எழுத்தர், 'டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்'களால் கணிப்பொறியில் பூர்த்தி செய்யப்படுகிறது. முதல் மூன்று நாள் சென்னை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும், 250 ஊழியர்கள் பணிபுரிந்தனர். அவர்கள், ஒவ்வொருவரும் நாள் ஒன்றுக்கு, 300 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.விரைவாக நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என்பதற்காக, நான்காவது நாளிலிருந்து, பிற மாவட்டங்களில் இருந்து ஊழியர்கள், 130 பேர் சென்னை வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு இரவு பணி வழங்கப்பட்டு உள்ளது. ஊழியர் ஒருவர் தினமும், 200 விண்ணப்பங்களை பதிவு செய்யவேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, 9.85 லட்சம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதாக தெரிகிறது. விண்ணப்பங்களை மென்பொருளில் பதிவு செய்யும் பணியை, மேலும் விரைவு படுத்த, 500 கல்லுாரி மாணவர்கள் நேற்று முன்தினம் முதல் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வரும், ௧0 நாட்களுக்குள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கணக்குகளில் வெள்ள நிவாரண தொகை கிடைத்து விடும் என, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

யு.பி.எஸ்.சி தேர்வு தேதியை மாற்ற முடியாது: மத்திய அரசு:

மதுராந்தகத்தைச் சேர்ந்த வினோத் குமார் என்பவர் இன்று காலை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலை சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில் தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை (யு.பி.எஸ்.சி. மெயின்) தள்ளிவைக்க வேண்டும் என்றார்.

இதற்கு மத்திய அரசும், பணியாளர் தேர்வாணையமும் மதியத்திற்குள் பதிலளிக்குமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். பிற்பகலில் நீதிபதி முன்பு ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் ஜி.ராஜகோபால், யு.பி.எஸ்.சி. வழக்கறிஞர் அருணன் ஆகியோர், தமிழகத்திலிருந்து 855 பேர் மட்டுமே தேர்வு எழுதுகின்றனர். மேலும், மனுதாரர் தேர்வு எழுதவில்லை என்றனர்.மேலும், தேர்வு நடைபெறும் மையங்கள் ஏதும் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். இதையடுத்து வினோத் குமாரின் முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், புஷ்பா சத்தியநாராயண ஆகியோர், இதை வழக்காக தாக்கல் செய்தால் விசாரிப்பதாகவும் கூறினர்.

திட்டமிட்டுள்ளனர்.5நாள் விடுமுறை விட வாய்ப்பு !!

.வருகிற 24–ந்தேதி மிலாடி நபி அரசு விடுமுறையாகும். மறுநாள் (25–ந்தேதி) கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை. அதனால் 23–ந் தேதிவரை அனைத்து பள்ளிகளும் செயல்படும். அதன் பின்னர் 24–ந்தேதி முதல் 27–ந்தேதிவரை 5 நாட்கள் மட்டும் தொடர் விடுமுறை அளிக்கவும் அதனை தொடர்ந்து 28–ந்தேதி மீண்டும் பள்ளிகளை திறக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

அடுத்தடுத்து தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி? தமிழக அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட கோரிக்கை:

சென்னையில் கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாகப் பள்ளிகள் நீண்ட விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், அடுத்தடுத்து தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக தொடர்ந்து 33 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறைஅறிவிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 14 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, அரையாண்டு தேர்வு மற்றும் பொதுத்தேர்வு அடுத்தடுத்து எதிர்கொள்ள உள்ள நிலையில் மாணவர்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.தேர்வை ஒத்தி வைக்கக்கூடாது என்றும் தேர்வை எளிமையாக நடத்த வேண்டும் என்றும் ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு மனநல ஆலோசகர் மூலம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் மாணவர்களிடையே ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்நிலையில், அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்ற அளவில் மாணவர்களிடையே பலவித கேள்விகள் நிலவி வருகின்றது. இதற்கு, தமிழக அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று மாணவர்கள் மற்றும்ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்

16/12/15

7வது சம்பள கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவது 6 மாதம் தாமதமாகும்?: குறைபாடுகளை நீக்க தீவிர ஆலோசனை

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை சம்பள விகிதம் சீரமைக்கப்படும்.இதற்காக மத்திய அரசு ‘‘சம்பள கமிஷன்’’ ஏற்படுத்தி ஆய்வு செய்து, அதனிடம் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கும் .மத்தியில்பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சீரமைக்க 7–வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் மாநில அரசுகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்திடம் ஆலோசனை நடத்தி அறிக்கை தயார் செய்து மத்திய அரசிடம் கொடுத்தது.அந்த அறிக்கையின் அடிப்படையில் 2016–ம் ஆண்டு 7–வது சம்பள கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் சம்பள விகிதத்தில் மிகப் பெரும் வித்தியாசம் இருப்பதாக அதிருப்தி எழுந்துள்ளது.இது தவிர சம்பள உயர்வால் தங்களுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படும் என்று பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் போக்குவரத்து அலவன்சு உயர்த்தப்படாததற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகையை குறைகளை, முரண்பாடுகளை சரி செய்ய மத்திய அமைச்சக செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மாநில அரசுகள் மற்றும் முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.அதில் ஒருமித்த கருத்து உருவானதும் 7–வது சம்பள கமிஷன் அறிக்கை பரிந்துரைகள் அமலுக்கு வரும். இதனால் மத்திய அரசு ஊழியர்கள் புதிய சம்பள உயர்வை பெறுவது 6 மாதம் முதல் ஓராண்டு வரை தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது.

ஆர்.எம்.எஸ்.ஏ., புத்தகங்கள் விலை ஆயிரம் ரூபாய் கூட இருக்காது!!

ஆர்.எம்.எஸ்.ஏ., புத்தகங்கள் விலை ஆயிரம் ரூபாய் கூட இருக்காது!! தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட, ரூ.7500 மதிப்பிலான புத்தகங்களின் உண்மை மதிப்பு ரூ.ஆயிரம் கூட இருக்காது என சர்ச்சை எழுந்துள்ளது. ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், ஆறு முதல் 9ம் வகுப்பு வரை அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் பள்ளி மானியமாக வழங்கப்படுகிறது. இதில், பள்ளி நுாலகங்களுக்கு ரூ.7500க்கு புத்தகங்கள் வாங்க அத்திட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும், பல நிறுவனங்கள் பெயரில், 32 புத்தகங்கள் கொண்ட கட்டு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடன் ரூ.7500க்கான கொட்டேஷன், ரசீதும் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், இப்புத்தக மொத்த மதிப்பே ரூ.ஆயிரம் கூட இருக்காது என சர்ச்சை எழுந்துள்ளது. தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது: ஆண்டுதோறும் பள்ளி நுாலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் விவரத்தை அதிகாரி களுக்கு அனுப்புகிறோம். ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனுப்பும் புத்தகங்களை தான் நாங்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. புத்தகங்களுடன் தான் கொட்டேஷன், ரசீதும் அனுப்புகின்றனர். இவற்றில், குறைந்த பக்கமுள்ள ஐந்து வகை காமிக்ஸ் புத்தகம் விலை தலா ரூ.550 என குறிப்பிடப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியல் பாட புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.150க்குள் தான் உள்ளது. இவற்றால் மாணவர் களுக்கு பயன் இல்லை, என்றனர். தமிழ் - 2 ஆங்கிலம் - 30 :பள்ளிகளுக்கு வந்துள்ள 32ல், 30 புத்தகங்கள் மெட்ரிக் பள்ளிகளுக்கான ஆங்கில புத்தகங்கள். சமச்சீர் கல்வி முறை அமல்படுத்துவதற்கு முன் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களே இந்த ஆண்டும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

மாணவர்களை சேர்க்க மறுக்கும் அரசு பள்ளிகள்!

பல்வேறு காரணங்களுக்காக, தனியார் பள்ளிகளிலிருந்து இடையில் நிற்கும் மாணவர்களை, அரசு பள்ளிகளில் சேர்க்க மறுப்பதால், அவர்கள் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் செப்டம்பர், 31 ம் தேதி வரை, மாணவர் சேர்க்கை நடடக்கிறது. ஆனாலும், கட்டாயக் கல்விச்சட்டத்தின் படி, 14 வயது வரையுள்ள மாணவர்களை, பள்ளியில் சேர்க்க எவ்வித மறுப்பும் தெரிவிக்கக்கூடாது என, வலியுறுத்தப்படுகிறது. ஆனாலும், அரசு பள்ளிகளில் பெரும்பாலானவற்றில், செப்டம்பர், 31 ம் தேதிக்கு பின் மாணவர்களை சேர்ப்பதில்லை. பல்வேறு காரணங்களால், படிக்கும் பள்ளியிலிருந்து இடையில் நின்ற மாணவர்களை, அரசு பள்ளிகளில் சேர்க்காததால், அவர்கள் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறியதாவது: தனியார் பள்ளிகளின் மயக்கும் வார்த்தைகளை நம்பி, பல பெற்றோர் தகுதிக்கு மீறி, அப்பள்ளிகளில் சேர்த்துவிடுகின்றனர். அதன் பின், கட்டணத்தை செலுத்த முடியாமல், தவிக்கும் போதும், சரியாக படிக்காத மாணவர்களையும், தனியார் பள்ளி நிர்வாகம் மாற்றுச்சான்றிதழ் கொடுத்து அனுப்பி விடுகிறது. ஆண்டின் இடையில், அரசு பள்ளிகளில் சேர்க்க சென்றால், அங்கு தலைமை ஆசிரியர்களும் மறுப்பு தெரிவிக்கின்றனர். நலத்திட்ட உதவிகள் வேண்டாம் என, எழுதிக்கொடுத்தால் கூட சேர்க்க மறுக்கின்றனர். இதனால், பல மாணவர்கள் ஓராண்டு வரை வீணடிக்கும் நிலை உள்ளது. அதில் பலரும் அதற்கு பின் கல்வியை தொடர்வதில்லை. குறைந்தபட்சம், 14 வயது வரையுள்ள குழந்தைகளையாவது அரசு பள்ளிகளில் எப்போது வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கணினிக் கல்வி அரசு பள்ளியில் புறக்கணிக்கப்படுவது ஏன்?

தமிழக அரசு கணினியை ஒரு பாடமாக மாண வர்களுக்கு கற்பிக்க வைப்பதன் ஒரு முயற்சியாக 2011 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் 6,7,8 ,9,10 ஆகிய வகுப்புகளுக்கு கணிப்பொறி பாடத்திற் கென புத்தகங்களை அச்சிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் அரசுப் பள்ளி களில் பயிலும் மாணவர்களுக்கு விநியோகம் செய்தது. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர் களுக்கு கணினிக் கல்வியை ஊக்குவிப்பதன் பொருட்டு அரசால் கொண்டு வந்த இந்த கணினி கல்வி மாணவர்கள் மற்றும் மக்களிடமும் அதிக வரவேற்பைப் பெற்றது. இதற்காக எல்லா அரசுப் பள்ளிகளுக்கும் தேவையான கணிப்பொறி உபகரணங்கள் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கி கணிப்பொறிகள் வழங்கவும் பட்டன. ஆட்சி மாற்றத்திற்குப் பின் 2011 ஆம் கல்வியாண்டில் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருந்ததே தவிர, மாணவர்களுக்கு எவ்வித பயனும் அளிக்கவில்லை. அரசு மற்றும் தனியாரின் எல்லா துறைகளும் நவீனமயமாக்கப்பட்ட (கணினி மய மாக்கப்பட்ட) இக்காலத்தில் கணினியின் அடிப் படை அறிவு மாணவர்களுக்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.சி. போன்ற அனைத்து வகை பள்ளி களிலும் கணிப்பொறி பாடமானது கடந்த 15 ஆண்டுகளாக கற்பிக்கப்பட்டு வருகின்றது. மேலும் எல்லா மேல்நிலைப்பள்ளிகளிலு­ம் கணிப்பொறி அறிவியல் ஒரு பாடமாக கடந்த 15 ஆண்டுகளாகக் கற்பிக்கப்பட்டு வருகின்றது. ஆனால், சமச்சீர் கல்வி செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புமுதல் 10 ஆம் வகுப்புவரை கற் பிக்கப்படும் கணினி கல்வியை அரசுப் பள்ளி களிலும் நடைமுறைப்படுத்தப்படு­ம் என்று அனை வராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் புத்தகங்களை மட்டும் இரண்டு கல்வியாண்டுகள் விநியோகித்து, கணினி கல்வியை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்காதது ஏன்? மக்களின் அடிப்படைத் தேவைகளான எல்லா செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்ற நிலையில், தமிழக அரசு ஏற்கெனவே விநியோகம் செய்து வந்த புத்தகங்களைக் கூட கடந்த சில ஆண்டுகளாக நிறுத்திவிட்டது. இதுகுறித்து பெற்றோர்கள் மத்தியிலும், கல்வி யாளர்கள் மத்தியிலும்கூட போதுமான ஈர்ப்பைப் பெறவில்லை என்பது ஆச்சரியமானதே! இவ்வளவுக்கும் கணினி அறிவியல் படித்த பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் 21000 பேர்களுக்குமேல் இருக்கிறார்கள். இவர்களைப் பயன்படுத்திக்கொண்டு,­ இந்த நவீன யுகத்தில் மிகவும் இன்றியமையாததான கணினிப் பயிற்சி யைக் கற்றுக் கொடுக்கவேண்டியது அரசின் கடமையாகும். இதில் ஏன் தமிழ்நாடு அரசு கருத்துச் செலுத்தவில்லை? அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண் ணிக்கை குறைந்து வருகிறது; அதன் காரணமாக அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்த நிலைக்கு மிக முக்கியமான காரணமே கணினிப் பயிற்சி போன்ற மிகவும் தேவையான பயிற்சியை அரசுப் பள்ளிகள் புறக்கணிப்பதுதானே? தனியார்ப் பள்ளிகளில் மாணவர்கள் குவிகிறார் கள் என்றால், அதற்குக் காரணம் கணினிப் பயிற்சி போன்ற கல்விக்கு அப்பள்ளிகளில் முக்கியத்துவம் கொடுப்பதுதானே! கல்வி மானியக் கோரிக்கையின்போது, மூன்று சட்ட மன்ற உறுப்பினர்கள் இதுபற்றிப் பேசியும் பயன் இல்லை. அரசுப் பள்ளிகளில்தான் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், முதல் தலைமுறையாக கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்கிறது. அப்படி இருக்கும்பொழுது கிராமப்புற ஒடுக் கப்பட்ட, ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்த இருபால் மாணவர்களுக்குக் கணினிக் கல்வி அவசியம் அல்லவா? அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய கணினிப் பயிற்சி அவசியம் அல்லவா! இதில் சமூகநீதிக் கண்ணோட்டம் தேவை. கேரள மாநிலத்தில் 2012 இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் வெகு வேகமாக வளர்ந்து கொண்டுள்ளது. கல்வியிற் சிறந்த தமிழ்நாடு ஏன் பின்னோக்கிப் போகவேண்டும்? தமிழ்நாடு அரசு இத்திசையில் சிந்தித்து செயல்படட்டும். வெ.குமரேசன் மாநில செயலாளர். 9626545446. தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.654/2014

அரசு இலவச லேப் டாப்களில் 'விண்டோஸ் 10': விரைவில் வருகிறது தொடுதிரை வசதி

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச லேப்டாப்களில், விரைவில் 'விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டம்' (ஓ.எஸ்.,) வசதி செய்யப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக 'லேப்டாப்'களில் தொடுதிரை வசதி ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.பள்ளி மாணவர்களுக்கு 14 வகை நலத்திட்டங்களை அரசு வழங்குகிறது. இதில், இலவச 'லேப்டாப்' பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக 'லேப்டாப்களில்' ஓ.எஸ்., வசதியை அதிகரிக்க தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.இதையொட்டி, தமிழகத்தில் 2015 கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்டாப்களில் 'விண்டோஸ் 8.1' வசதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரை, நெல்லை, துாத்துக்குடி, விருதுநகர், திருச்சி உட்பட 9 தென் மாவட்டங்களில் முதற்கட்டமாக ஓ.எஸ்., வசதி மேற்கொள்ளும் பணிகளை எல்காட் உதவியுடன் மைக்ரோசாப்ட் பொறியாளர்கள் மதுரையில் துவங்கியுள்ளனர். 'விண்டோஸ் 8.1' வசதியை அடுத்து 'விண்டோஸ் 10' வசதியை எளிதில் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மேற்கொள்ளும்பட்சத்தில் லேப்டாப்களில் தொடுதிரை (டச் ஸ்கிரீன்) வசதி கிடைக்கும்.இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவன தமிழக ஒருங்கிணைப்பாளர் பிரியா கூறியதாவது:தமிழகத்தில் 2014ம் ஆண்டில் வழங்கப்பட்ட லேப்டாப்களில் 'விண்டோஸ் 7' வசதி தான் இருந்தது. இதனால் வேகம் மற்றும் புதிய 'வெர்ஷன்' மிக குறைவாக இருந்தது. இதை அதிகரிக்கவும், உயர்கல்வியில் மாணவர்களுக்கு பல்வேறு வசதிகள் பெறும் வகையில் கூடுதல் ஓ.எஸ்., வசதி மேற்கொள்ளும் தொழில்நுட்ப பணிகள் மைக்ரோசாப்ட் நிறுவன நிதி உதவியுடன் நடக்கிறது.தற்போது மதுரை மாவட்டத்தில் மட்டும் 22 ஆயிரம் லேப்டாப்களில் இவ்வசதி செய்யப்பட்டுள்ளது. டிசம்பருக்குள் மாநில அளவில் 1.50 லட்சம் லேப்டாப்களில் இவ்வசதி மேற்கொள்ளப்படும். 'விண்டோஸ் 10' வசதி செய்யப்படும் பட்சத்தில் சில ஆண்டுகளில் தொடுதிரை, 'ஸ்கிரீன் இமேஜ்', உட்பட 'ஆண்ட்ராய்டு' அலைபேசியில் உள்ள வசதிகளை லேப்டாப்களில் கொண்டுவரலாம், என்றார்.

திண்டுக்கல்லில் 20 ஆபத்து பள்ளிகள்

திண்டுக்கல்லில் இடிந்து விழும் நிலையில் 20 பள்ளிக் கட்டடங்கள் உள்ளன.திண்டுக்கல், பழநி கல்வி மாவட்டத்தில் ஆயிரத்து 426 பள்ளிகள் உள்ளன. சமீபத்தில் தமிழக அரசு, மாவட்ட நிர்வாகங்கள், பள்ளி கட்டடங்கள் நிலை குறித்தும், பள்ளி மைதானங்களில் மழை நீர் தேங்காமல் இருப்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. திண்டுக்கல் - பழநி கல்வி மாவட்ட பள்ளிகளில் திண்டுக்கல் சி.இ.ஓ., சுபாஷினி தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வில் ஈடுபட்டது.அதில் 1950ல் கட்டப்பட்டு சிதிலமடைந்த கட்டடங்கள் மற்றும் 20, 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடங்கள் உள்ளன என கண்டறிய பட்டது. அவற்றை புகைப்படம் எடுத்து சேத விபரங்களை கணக்கிட்டனர். பின், பள்ளிக் குழந்தைகளை பாதிக்கப்பட்ட இடங்களில் தங்கவைக்கக் கூடாது. பாதுகாப்பான இடங்களில் அமரவைத்து பாடங்கள் நடத்த வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்தினர். முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி கூறியதாவது: பள்ளிக்கல்வித்துறை உத்தரவுப்படி ஆய்வு மேற்கொண்டோம். ஆய்வில், 20 பள்ளிகளில் கட்டடச்சுவர்கள் சேதமடைந்துள்ளன. அவை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் அனுப்பியுள்ளோம். மாணவர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

புதிய பென்ஷன் (CPS)திட்ட பணப்பலன் முதல்வரின் தனிப்பிரிவு கைவிரிப்பு: 4.20 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி

புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலனுக்கான அரசாணை இல்லை என, முதல்வரின் தனிப்பிரிவு கைவிரித்தது. இதனால் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்த 4.20 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் 2003 ஏப்., 1 க்கு பின் பணியில் சேர்ந்த 4.20 லட்சம் ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இந்த திட்டத்தில் ஊழியர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்து, மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்த வேண்டும். ஆனால் இதுவரை ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட தொகை ஆணையத்தில் செலுத்தப்படவில்லை. இதனால் 12 ஆண்டுகளில் தமிழகத்தில் ஓய்வு பெற்றோர், இறந்தோரின் குடும்பத்தினர் பணப்பலன் பெற முடியாமல் தவிக்கின்றனர். நெல்லை மாவட்டம் தென்காசி ஆனைகுளம் அரசு உயர்நிலைப் பள்ளி காவலாளியாக இருந்த குருசாமி 2012 ல் ஓய்வு பெற்றார். பலமுறை போராடியும் புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் பெறமுடியாமல் 2013 ல் இறந்தார். அதன்பின் அவரது மனைவி மாரியம்மாள் போராடியும் பணப்பலன் கிடைக்காமல் சமீபத்தில் இறந்தார். அவர்களது மகன் குமார் பணப்பலன் கேட்டு தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் மனு செய்தார். அந்த மனுவிற்கான பதிலில், 'புதிய பென்ஷன் திட்டத்தில் ஓய்வூதியத்தொகை வழங்குவது குறித்து அரசாணை, தெளிவுரை எதுவும் இல்லை. இதுகுறித்த கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது,' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்த 4.20 லட்சம் ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அரசு ஊழியர்கள் கூறியதாவது: புதிய பென்ஷன் திட்டத்தில் பணத்தை மட்டும் பிடிக்கின்றனர். ஆனால் பணப்பலன் வழங்குவதில்லை. இதனால் இதுவரை ஓய்வு பெற்ற 1,500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்திற்கு சென்ற 6 பேருக்கு மட்டும் பிடித்த பணம் வழங்கப்பட்டு உள்ளது, என்றனர்.

ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட நிதியில் முறைகேடு: அமைச்சர்கள் பெயரில் அதிகாரிகளுக்கு மிரட்டல்

தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.,) நிதியில், ரூ.பல லட்சம் முறைகேடு நடப்பதை தடுக்க கல்வித்துறை செயலாளர் சபீதா நடவடிக்கை எடுப்பாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இத்திட்டத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளிகளில், ஆண்டுதோறும் பள்ளி பராமரிப்பு மானியம் ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் இருந்து மாணவர் நலன் கருதி பள்ளி நுாலகங்களுக்கு ரூ.7,500க்கு புத்தகங்கள், அறிவியல் ஆய்வகங்களுக்கு ரூ.15 ஆயிரத்திற்கு அறிவியல் உபகரணங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 'புத்தகங்கள், உபகரணங்களை சில தனியார் கம்பெனிகளில் மட்டும் வாங்க வேண்டும்,' என சில அமைச்சர்கள் பெயரை குறிப்பிட்டு தலைமையாசிரியர்களுக்கு அரசியல்வாதிகள் நெருக்கடி கொடுக்கின்றனர். பணியாத தலைமையாசிரியர், கல்வி அதிகாரிகளிடம் "'டிரான்ஸ்பர்' செய்து விடுவோம்," என மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், வேறு வழியில்லாமல் புத்தகம், உபகரணங்களை பெற்றுக்கொண்டு, அதற்காக அந்த கம்பெனிகளுக்கே ரூ.22500 க்கான காசோலையை பள்ளிகள் அனுப்பி வைக்கின்றன. கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல ஆண்டுகள் ஒரே மாதிரியான உபகரணங்களையே மீண்டும் மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். பல பள்ளிகளில் சாக்கு மூட்டைக்குள் அப்பொருட்கள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.இதற்கு காரணம் அரசியல்வாதிகள் ஆதரவில் பெயரளவில் செயல்படும் சில கம்பெனிகள் தான். பள்ளிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெற்றுக்கொண்டு கல்வி அதிகாரிகளை அவர்கள் மிரட்டுகின்றனர். இதுகுறித்து விசாரித்து செயலாளர் சபீதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வெள்ள பாதிப்பு இல்லாத, பிற மாவட்ட இன்ஜி., கல்லூரி தேர்வுதள்ளி வைக்க மறுப்பு

'வெள்ள பாதிப்பு இல்லாத, பிற மாவட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதல் செமஸ்டர் தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. வெள்ள பாதிப்புக்கு உள்ளான, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள், டிசம்பர், 28க்கு தள்ளிவைக்கப்பட்டன. 'மற்ற கல்லுாரிகளுக்கு ஏற்கனவே அறிவித்த தேதிகளில் தேர்வு நடைபெறும்' என, உயர் நீதிமன்றத்தில், அண்ணா பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய, முதல், 'பெஞ்ச்' முன் ஆஜரான, 'அப்துல் கலாம் விஷன் இந்தியா' அறக் கட்டளை அறங்காவலர் குமார், 'பிற மாவட்டங்களில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும், முதல் செமஸ்டர் தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும்' என, முறையிட்டார். அண்ணா பல்லை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.எஸ்.சுந்தர், அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.அதையடுத்து, 'தமிழகம் முழுவதும் தேர்வுகளை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்

பள்ளி மதிய உணவை பெற்றோர் சோதிக்கலாம்'

நாடு முழுவதும், பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை, தினமும், ஒன்று அல்லது இரண்டு பெற்றோர் சுவைத்து, சோதித்து பார்ப்பதை கட்டாயமாக்க வேண்டும்' என, மத்திய அரசு கூறியுள்ளது. மாநில அரசுகளுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியுள்ள கடித விவரம்: பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவை, தினசரி, ஒரு ஆசிரியர் சுவைத்து, சோதித்துப் பார்க்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி, ஒன்று அல்லது இரண்டு பெற்றோர், உணவை, தினசரி சுவைத்து பார்ப்பதை கட்டாயமாக்கும்படி, மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. சுழற்சி முறையில், மாணவர்களின் பெற்றோர், மதிய உணவின் தரத்தை சோதித்து பார்க்கலாம். மதிய உணவின் தரத்தை பரிசோதிக்கும் சமயம், இத்திட்டத்தின் கீழ், எத்தனை மாணவர்கள் பயன் பெறுகின்றனர் என்பதையும், பெற்றோர் அறிந்து, சான்று அளிக்க முடியும். இவ்வாறு, மத்திய அரசு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 12 கோடி மாணவர்கள் : * நாடு முழுவதும், 12.6 லட்சம் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது * இந்த உணவை, 12 கோடி மாணவர்கள் சாப்பிடுகின்றனர் * மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கும் நோக்கில், இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது * உலகளவில், இந்தியாவில் மட்டுமே, இத்திட்டம் பெரியளவில் நடக்கிறது * இத்திட்டத்தை, 60ம் ஆண்டுகளில், தமிழக முதல்வராக இருந்த காமராஜர் துவக்கி வைத்தார்

மருத்துவ சேவைகள் 2015-க்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டது யுபிஎஸ்சி

கம்பைன்டு மெடிக்கல் சர்வீஸ் 2015-க்கான தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் 28-ம் யுபிஎஸ்சி இணைந்த மருந்துவ சேவைக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இத்தேர்வில் மொத்தம் 1,202 பேர் நியமிக்க பரிந்துரைக்கப்பட்டனர். பொதுப்பிரிவினர் - 534, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 384, தாழ்த்தப்பட்டோர் 186, பழங்குடியினர் - 98. இதற்கான தேர்வு முடிவுகள் http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு டிசம்பர் 18 முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிரிமிலினரி தேர்வில் தேர்ச்சி பெற்ற 15 ஆயிரம் மாணவர்கள் மெயின் தேர்வில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை எப்போது?

பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான விடுமுறை எப்போது விடப்படும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு, ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கும் இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொடர்ந்து 15 நாள்களுக்கும் மேலாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளம் பாதிக்கப்படாத மாவட்டங்களில் குறைந்த நாள்கள் மட்டுமே மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வு அல்லது இரண்டாம் பருவத் தேர்வு ஜனவரி மாதம் முதல் வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் இரண்டாம் பருவத் தேர்வு வரும் 16-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதியுடன் முடிவடைவதாகவும், அதன்பின்னர், டிசம்பர் 23-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அரசின் அறிவிப்பு, அரையாண்டு மற்றும் பருவத் தேர்வுகளை மட்டும் ஒத்திவைப்பதாக உள்ளது. ஆனால், இரண்டாம் பருவத் தேர்வுக்கான விடுமுறை 9 நாள்கள் திட்டமிட்டபடி டிசம்பர் 23-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை விடப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில், தேர்வுக்குப் பிறகுதான் விடுமுறை என்றால், ஜனவரி முதல் வாரத்துக்கு பின்னர் பொங்கல் விடுமுறை நாள்களுடன் சேர்த்து கூடுதலாக விடப்படுமா என்றும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கடன் தொகையை திரும்பத் தராததால் தலைமையாசிரியை சம்பளத்தில் பிடிக்க உத்தரவு

பழனியில் விவசாயியிடம் கடன் வாங்கிய பணத்தை திரும்பத் தராமல் இழுத்தடித்த பள்ளித் தலைமையாசிரியைக்கு, அவரது சம்பளத்தில் பிடித்தம் செய்து வழங்க, திங்கள்கிழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழனியை அடுத்த எரமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (63). விவசாயியான இவரிடமிருந்து, பழனியை அடுத்த பாப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியையாகப் பணிபுரிந்து வரும் கலைச்செல்வி என்பவர் ரூ. 4 லட்சத்து 10 ஆயிரம் கடனாகப் பெற்றுள்ளார். இந்நிலையில், கடன் கொடுத்து பல மாதங்களாகியும் கலைச்செல்வி பணத்தை திரும்பத் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். எனவே, கிருஷ்ணசாமி பழனி சார்பு-நீதிமன்றத்தில் கலைச்செல்வி மீது வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், தற்போதைய தேதி வரை அசல் தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ. 6,89,000 கலைச்செல்வி செலுத்த வேண்டும் என்றும், இத்தொகையை அவரது சம்பளத்தில் மாதந்தோறும் ரூ. 23,000 வீதம் பிடித்தம் செய்து, நீதிமன்றத்தில் கட்ட வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கல்வியை வர்த்தகப் பொருளாக்கும் உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திடக் கூடாது: இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

கல்வியை வர்த்தகப் பொருளாக்கும் உலக வர்த்தக அமைப்பு உடன்பாட்டை இந்தியா நிராகரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது, இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: கல்விச் சேவையை வணிகமயமாக்கும் நடவடிக்கையை உலக வர்த்தக அமைப்பு 2001 முதல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மொத்தம் 160 நாடுகளை உறுப்பினராகக் கொண்டுள்ள இந்த அமைப்பின் மாநாடுகளில் இந்த விவகாரம் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பேச்சு வார்த்தை இன்னும் நிறைவடையவில்லை. இந்த நிலையில், கென்யாவின் தலைநகர் நெய்ரோபியில் டிசம்பர் 15 முதல் 18 வரை உலக வர்த்தக அமைப்பின் 10-ஆவது மாநாடு நடைபெறுகிறது. ஏற்கெனவே, தாராளமய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தியுள்ள இந்தியா, இந்த மாநாட்டில் கல்வித் துறையை வர்த்தகப் பொருளாக்கும் உடன்பாட்டில் கையெழுத்திட முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அவ்வாறு ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்திய கல்வித்துறையில் தனியாரின் ஆதிக்கம் மேலும் அதிகரிப்பதோடு, உயர்கல்வி வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாக்கப்படுவர். இடஒதுக்கீடு நடைமுறை பின்னுக்குத் தள்ளப்படும். எனவே, உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் கல்வியை வர்த்தக மயமாக்கும் நிபந்தனைகளை இந்திய அரசு நிராகரிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது எனத் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா. முத்தரசன்: கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெறும் உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் கல்வித் துறையை வர்த்தகமாக மாற்றும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட உள்ளது. அவ்வாறு கையெழுத்திடுமானால், பன்னாட்டு நிறுவனங்கள் வர்த்தக ரீதியில் பல்கலைக்கழகங்களை தொடங்கும் நிலை உருவாகும். மத்திய அரசு இப்போது பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் வழங்கி வரும் மானியங்கள், இடஓதுக்கீடு ரத்து செய்யப்படும். இதனால், ஏழை மற்றும் சமூகத்தில் நலிந்த பிரிவு மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்படும். எனவே, மத்திய அரசு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முடிவை கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

நீங்கள் ஆசிரியராக வாழ்பவரா..? ஆசிரியப் பணியாளரா..?

குழந்தைகள் உங்கள் மீது எத்தகைய அணுகுமுறையோடு இருக்கிறார்கள் என்பதே கற்றலுக்கான முக்கிய பாதையை வகுக்கிறது. அவர்கள் உங்கள் மீது கொண்டிருப்பது நம்பிக்கையா..? அச்ச உணர்வா..? என்பதை வைத்து கற்றல் வேறுபடும். - ஆப்ரகாம் மாஸ்லோ, உளவியல் அறிஞர் நீங்கள் குருவா? ஆசிரியரா...? என வினவிக் கொண்டபோது நமக்கு கிடைத்த விடை என்னவாக இருந்தது...? இன்னும் கொஞ்சம் தூர் வாரினால் அந்த அறிவுக்கேணி உங்கள் உண்மை முகத்தை தோண்டி எடுத்துக் கொடுத்துவிடும். கடந்த நம் அத்தியாயத்தை வாசித்து என்னிடம் கருத்து பரிமாறிய புதுவை ஆசிரியர் ஒருவர் வித்தியாசமான ஒன்றை குறிப்பிட்டார். அவர் கூற்றுப்படி ஆசிரியர்கள் இரண்டு வகை. ஒருவர் ஆசிரியராகவே வாழ்பவர். மற்றவர் ஆசிரியர் வேலைக்குப் போய் வருபவர். இக்கூற்றை நான் பரிசீலித்தபோது வியப்பான முடிவுகளை அடைய முடிந்தது. ஆசிரியராகவே வாழ்பவர்தான் முன் உதாரண ஆசிரியர். இவர் மாணவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்பவர். காலத்திற்கேற்ற மாறுதல்களை மனமுவந்து ஏற்பவர். இலட்சியத்தால் எழுச்சி காண்பவர். இவரது இலக்கு கல்வி மற்றும் கதறல் செயல்பாடு மட்டுமே அல்ல. மாணவர்களின் வாழ்வை மேம்படுத்துதல், அவர்களது சிந்தனைத்திறனை மேம்படுத்துதல். பாடப்புத்தகம் என்பது ஒருவகை வழிகாட்டி மட்டுமே. இவரைப் பொருத்தவரை கல்வி வகுப்பறையில் மட்டுமே நடப்பது அல்ல. குழந்தைகள் காலை கண் விழித்தெழுதல் முதல் இரவு உறங்கப்போகும் அந்த நிமிடம் வரை, பார்ப்பது, கேட்பது, அனுபவிப்பது எல்லாமே கல்வியில் அடக்கம். எந்த வயது மாணாக்கரை இவரிடம் ஒப்படைத்தாலும் முகம் கோணாது செயல்படுவார். தனது வாழ்வை, தனது ஆசிரியப் பணியிலிருந்து பிரித்துணர முடியாதவர் இவர். மாணவர் நலனை முன்வைத்து இயங்குபவர். ஆசிரியர் வேலைக்கு, கடனே என போய்வரும் ஒருவரை பரிசீலிப்போம். முதலில் அத்தகைய ஒருவருக்கு அப்பணி நிரந்தரமானதல்ல. அடுத்த படி நிலைகளை வாழ்வில் சாதித்து முன்னேற ஒரு தற்காலிக ஏற்பாடு இப்பணி. பெரும்பாலும் ஆசிரிய பணியாளரின் இலட்சியம், மாணவர் சார்ந்ததாக இருப்பது கிடையாது. ஏதோ ஒரு உபதொழிலை (Side Business) இவர் செய்கிறார். தனது வருமானத்தை குறிவைத்து திட்டமிட்டு காய் நகர்த்துகிறார். இவருக்கு தன் வேலையில் கால அளவு முக்கியம். ஒரு மணி நேரம்கூட கூடுதலாக மாணவர்களுக்கு செலவு செய்ய மாட்டார். மாலை வகுப்பு நடத்தவோ, கல்வி உபசெயல்பாட்டுப் பணிகள் செய்யவோ இவருக்கு விருப்பமிருப்பதில்லை. ஆனால் ஊதியம் என வரும்போது எந்த சமரசமும் இவரிடம் செல்லாது. நாள்முழுவதும் இவரது கைபேசியில் அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கும். தனது பணி, பள்ளியின் முதல் மணியின்போது தொடங்கி மாலை கடைசி மணி அடித்தால் முடிந்தது என கருதுபவர்; அதிலும் ஓய்வான பிரீயட்களில் வாய்ப்பு கிடைத்தால் எஸ்கேப் ஆகிவிடுவது இவரது வேலை இயல்புகளில் ஒன்று. தேர்வு விழுக்காடு என்பது அதிகாரிகளால் தன்மீது திணிக்கப்பட்ட சுமை என்று கருதி எரிந்து போகிறவர். அதற்காக மாணவர்களை சபித்துத் தள்ளுபவர். இவரைப் பொருத்தவரை கல்வி பள்ளியில் மட்டுமே நடக்கிறது. பாடப்புத்தகமே வேதம். இத்தகையவரிial, Helvetica, sans-serif; fontுமா? டியூஷன் சென்டர் நடத்துவது! தனது சொந்த நலனை முன்வைத்து இயங்குபவர் இவர். * ஒரு மாணவர் பள்ளிக்கு இரண்டு மூன்று நாட்கள் வரமுடியவில்லை என்றால் ஆசிரியராக வாழ்பவர், மாணவர் வீட்டிற்கேகூட சென்று, என்ன ஆயிற்று என அறிந்துகொள்ள தயங்கமாட்டார். * ஆனால் ஆசிரியப் பணியாளர் அப்படியல்ல. பள்ளிக்கு வந்தால் நடத்துவார். வராதவர்களுக்கு அவர் பொறுப்பல்ல. பள்ளிக்கு மாணவர்களை வரவழைத்தால், தான் பணி செய்ய தயார் என வீரவசனம் பேசுவார். * ஆசிரியராக வாழ்பவர் தனது வகுப்பில் உள்ள அனைவரைப் பற்றியும் முழுமையாக தெரிந்து வைத்திருப்பார். மாணவர்களின் பெற்றோர்களோடும் இணக்கமான உறவை பேணுவார். அக்கறை என்பதே அவரது அணுகுமுறை. * ஆசிரியப் பணியாளர் தனது உபதொழில் (Side-Business) சார்ந்து, ஓரிருவரை (பெற்றோர்) பயன்படுத்த அறிந்து பின்தொடர்வார். ‘அதிகாரம்’ என்பதே இவரது அணுகுமுறை. ‘வருமானம்’ என்பதே அவரது இலக்கு. * ஆசிரியராக வாழ்பவர், பள்ளி நேரம் கடந்தும் மாணவர்கள் என்ன மாதிரி தன் பொழுதை போக்குகிறார்கள் என அறிந்து வைத்திருப்பார். ஒவ்வொரு மாணவரிடமும் அவரது அன்றாட அணுகுமுறை மாறுபடும். * ஆசிரியப் பணியாளர் பாடப்பொருள் சார்ந்தவர். அதை முடிப்பதும் அது சார்ந்த ‘வேலை-முடித்தல்’ பற்றியே சிந்திப்பவர். * ஆசிரியராக வாழ்பவர், மாணவர்களின் நிலை சார்ந்து ஒரு பாடத்தை பலமுறை பலவிதமாக எத்தனை முறை கேட்டாலும் எத்தனைபேர் கேட்டாலும் திரும்ப விவரிக்க தயங்க மாட்டார். அதை தனது பேறாக, பெருமையாக கருதுவார். * ஆசிரியப் பணியாளர் பாடத்தை ஒருமுறை நடத்தவே சம்பளம் என பகிரங்கமாக சொல்வார். மறுமுறை அதை நடத்த வேண்டி வந்தால் அதை மிகப் பெரிய பாரமாக கருதி குமைந்துகொண்டே இருப்பார். ‘வேண்டுமானால் வீட்டுக்கு வா... டியூஷனில் கவனி... அதற்கும் பீஸ் கொடு...’ என்பதே அவரது அணுகுமுறை. * ஆசிரியராக வாழ்பவர் அடுத்த தலைமுறை தன்னை கண்காணிக்கிறது என்ற புரிதலுடனே எதையும் செய்பவர். தனது அன்றாட பழக்க வழக்கங்களைக்கூட குழந்தைகள் பின்பற்றுவார்கள் என்கிற தெளிவோடு தன் வாழ்வை சுய கட்டுப்பாடு எனும் தூய்மை நெறியில் செலுத்துபவர். * ஆசிரியப் பணியாளர், பணி நேரத்தில்கூட சுய கட்டுப்பாட்டை இழப்பதை நாம் பார்க்கலாம். மாலையில், இரவில் அவர் எங்கும் செல்வார், எதையும் செய்வார். பள்ளியில் வீட்டு வேலை வாங்குவது, கைபேசியில் படம் பார்ப்பது, போதை பாக்கு, புகைத்தல்.. இவற்றோடு மதுக்கடை மகராசனாகவும் இருப்பதை பார்க்கலாம். அதுபற்றி அவருக்கு எந்த கூச்சமும் கிடையாது. * ஆசிரியராக வாழ்பவர் சபலங்களுக்கு இடம் தரமாட்டார். மாணவர் மற்றும் மாணவியரை அவர்கள் +2 படிக்கும் வயதினராக இருந்தாலும் குழந்தைகளாக அணுகத் தெரிந்தவர். இவரது வகுப்பறையை, ‘உலகிலேயே பாதுகாப்பான இடம்’ என்று மாணவர்கள் கருதுவார்கள். * ஆசிரியப் பணியாளர் தனது அதிகாரத்தின் மீதே கவனமாக இருப்பதால் விதி மீறல்களை கட்டுப்படுத்துவதில்லை. விதிகளை சரிவர அறிவதும் இல்லை. பால்ய வன்முறையிலிருந்து பாலியல் வன்முறை வரை சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப எதையும் செய்வார்கள். வகுப்பையே தனது மிரட்டலில் வைத்திருக்க இவர்கள் வெட்கப்படுவதே இல்லை. பொறுப்பற்ற இவர்கள் சபலங்களுக்கு பலியாகி இழைக்கும் வக்கிர குற்றங்களால் முழு ஆசிரியர் சமுதாயத்திற்கும் தலைகுனிவே ஏற்படுகிறது. * ஆசிரியராகவே வாழ்பவர், மாணவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என கருதுவார். மாணவர்கள் அளவுக்கு இறங்கிச்சென்று அன்பு, தோழமை, நட்பு என உறவை விரிவடையச் செய்வார். வாசிப்பை, கற்றலின் இனிமையை விதைப்பவர். * ஆசிரியப் பணியாளர், மாணவர்கள் தன்னைக் கண்டாலே நடுங்க வேண்டும் என கருதுவார். கற்றலைச் சித்திரவதையாக்கி விடுவார். * ஆசிரியராக வாழ்பவர், குழந்தைகள் நலப் போராளியாக இருப்பதை நாம் காணலாம். குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் எத்தகைய அநீதியையும், சமூக ரீதியிலும் சட்ட ரீதியிலும் தடுத்திட முழு மூச்சாக இறங்குபவர். குழந்தை திருமணங்கள், நரபலி, குழந்தையை வேலைக்கு அமர்த்துதல்் என இவரது கண்களில் இருந்து எதுவும் தப்பாது. தான் சார்ந்திருக்கும் ஆசிரியர் சங்கத்தையும் இதுமாதிரி வேலைகளில் ஈடுபடச் செய்வார். * ஆசிரியப் பணியாளர், ‘நமக்கேன் வம்பு’ என எதையும் கண்டுகொள்ள மாட்டார். வாய்ப்புக் கிடைத்தால் அச்செயல்களில் தானும் இறங்குவார். ‘இவர் செய்யலையா... அவர் செய்யலையா’ என வறட்டு வாதம் பேசுதல்... இதன் குற்றச்சாட்டிலிருந்து தன்னை காப்பாற்றுமாறு தான் சார்ந்திருக்கும் ஆசிரியர் சங்கத் தலைவருக்கு நெருக்கடியும் தர தயங்க மாட்டார். * ஆசிரியராகவே வாழ்பவர்... குழந்தைகளுக்கு தான் எப்படி இருந்தால் பிடிக்கும் என்பதன் மீது கவனம் கொள்வார். * ஆசிரியப் பணியாளர், தனக்கு எப்படி எல்லாம் இருந்தால் பிடிக்கும் என்று குழந்தைகளை மிரட்டி வைப்பார். இதில் வன்முறை இல்லா வகுப்பறை யாருடையது...? நீங்கள் யார்? ஆசிரியராகவே வாழ்பவரா...? ஆசிரியப் பணியாளரா...?
7வது சம்பள கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவது 6 மாதம் தாமதமாகும்?: குறைபாடுகளை நீக்க தீவிர ஆலோசனை
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை சம்பள விகிதம் சீரமைக்கப்படும்.இதற்காக மத்திய அரசு ‘‘சம்பள கமிஷன்’’ ஏற்படுத்தி ஆய்வு செய்து, அதனிடம் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கும் .மத்தியில்பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சீரமைக்க 7–வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது.
அந்த கமிஷன் மாநில அரசுகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்திடம் ஆலோசனை நடத்தி அறிக்கை தயார் செய்து மத்திய அரசிடம் கொடுத்தது.அந்த அறிக்கையின் அடிப்படையில் 2016–ம் ஆண்டு 7–வது சம்பள கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் சம்பள விகிதத்தில் மிகப் பெரும் வித்தியாசம் இருப்பதாக அதிருப்தி எழுந்துள்ளது.இது தவிர சம்பள உயர்வால் தங்களுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படும் என்று பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் போக்குவரத்து அலவன்சு உயர்த்தப்படாததற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகையை குறைகளை, முரண்பாடுகளை சரி செய்ய மத்திய அமைச்சக செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மாநில அரசுகள் மற்றும் முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.அதில் ஒருமித்த கருத்து உருவானதும் 7–வது சம்பள கமிஷன் அறிக்கை பரிந்துரைகள் அமலுக்கு வரும். இதனால் மத்திய அரசு ஊழியர்கள் புதிய சம்பள உயர்வை பெறுவது 6 மாதம் முதல் ஓராண்டு வரை தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது.

பொதுமக்கள் கவனத்துக்கு.. தட்டம்மை தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடிமற்றும் கடலூர் மாவட்டங்களில் நடைபெற்று வரும் தட்டம்மை தடுப்பூசி முகாம்களில் இதுவரை 1,41,470 நபர்கள் பயன் பெற்றுள்ளனர்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி முகாமினை தொடங்கி நடைபெற்று வருகிறது.இதன்படி சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தட்டம்மை தடுப்பூசி முகாகம்கள் 11.12.2015 அன்று தொடங்கப்பட்டது. 

இதனையடுத்து நேற்று (14.12.2015) முதல் தட்டம்மை தடுப்பூசி முகாம்கள் மழை வெள்ளம் பாதித்த கடலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் செயல்படத் தொடங்கியது. இம்முகாம்கள் மூலம் சுமார் 7.65 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இம்முகாம்கள் மூலம் நேற்று 14.12.2015 வரை 1,41,470 நபர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசி முகாம்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடையும் வரை தொடர்ந்து செயல்படும். பொதுமக்கள் அருகில் உள்ள இம்முகாம்களுக்குச் சென்று 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு தட்டம்மை தடுப்பூசியை பெற்று தட்டம்மை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளுமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை பொதுமக்களை அன்புடன் அறிவுறுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

15/12/15

நெட்' தேர்வுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட்

சென்னை  சிஎஸ்ஐஆர் `நெட்' தகுதித் தேர்வு டிசம்பர் 20-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.csirhrdg.res.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நெட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் ஏதேனும் விவரங்கள் தேவைப்பட்டால் சென்னை தேர்வு மைய ஒருங்கிணைப்பாளர் பி.சுரேஷ் என்பவரை 044-22541687 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 94444-56695 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்புகொள்ளலாம் 

எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் கடிதம்

சென்னை  மழை வெள்ளத்தால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதால், எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வை ரத்து செய்யும்படி கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரி தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலிடம் வழக்கறிஞர் முகமது நஸ்ருல்லா நேற்று வழங்கிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:  சமீபத்தில் கனமழை கொட் டியதால் பெரும் சேதம் ஏற்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வழக்க மாக டிசம்பர் 2 அல்லது 3-ம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கும்.  இந்த ஆண்டு கனமழை காரணமாக அடுத்த மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பேரிட ரில் இருந்து மக்கள் இன்னமும் மீளவில்லை. மாணவர்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி யிருக்கின்றனர். அதனால், எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வை ரத்து செய்யவும், அடுத்த ஆண்டு இறுதித் தேர்வு வரை படிப்பைத் தொடர மாணவர்களை அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும்.  உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வை ரத்து செய்யும்படி கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு தேர்வு பயத்தைப் போக்க கவுன்சலிங் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதா தகவல்

சென்னை  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 மாணவர்களுக்கு மனக் கவலை மற்றும் தேர்வு பயத் தைப் போக்க உளவியல் ஆலோசனை (கவுன்சலிங்) வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா தெரிவித்தார்.  சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், கடலூர் மாவட்டங்களில் தொடர் மழை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப் பட்டன. மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களை கண்டறிந்து சிகிச்சை வழங்கும் வகையில் பள்ளி மாண வர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். 
நிகழ்ச்சிக்குப் பிறகு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செய லாளர் சபீதா நிருபர்களிடம் கூறிய தாவது: மழை வெள்ளத்தால் கடுமை யாக பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் 33 நாள் மழை விடுமுறைக்குப் பிறகு இன்று (நேற்று) 7,500 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகளை இழந்த மாணவ-மாணவிகளுக்கு இன்று முதல் புத்தகங்கள், நோட்டுகள், சீருடை கள் வழங்கப்படும். மாணவர் களுக்கு நோய் பாதிப்பை கண்டறி யும் வகையில் மருத்துவப் பரி சோதனை முகாம் தொடங்கப்பட் டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டு மனக்கவலைக்கு ஆளாகி யிருக்கும் எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 மாணவர்களுக்கு கவலையைப் போக்கவும், பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தவும் நாளை முதல் உளவியல் ஆலோசனை அளிக்கப் படும். பொதுத் தேர்வு எழுதுகின்ற மாணவ-மாணவிகள் எளிதாக தேர்ச்சி பெறும் வகையில் குறைந்த பட்ச பாடத்திட்டம் அடங்கிய குறிப்பேடு அவர்களுக்கு தரப்படும். கனமழை காரணமாக பள்ளி களுக்கு அதிகப்படியான விடுமுறை விடப்பட்டதால் அதை ஈடுசெய்ய தினமும் சிறப்பு வகுப்புகள் நடத் தப்படும். மேலும், சனிக்கிழமை களில் வகுப்பு வைப்பதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவுசெய்துகொள்ளலாம். இவ்வாறு சபீதா கூறினார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, “பாதிக்கப்பட்ட மாணவர்கள் உளவி யல் ஆலோசனைக்குப் பிறகு இயல்பு நிலைக்கு வந்துவிடுவர். அதன் பின்னரும் அவர்களுக்குப் பிரச்சினை இருந்தால் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் தயாராக உள்ளோம்” என்றார். பின்னர் மைலாப்பூரில் உள்ள புனித எபாஸ் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மையத்தில், புதிய கல்விச் சான்றிதழ்கள் வழங்குவதற் கான சிறப்பு முகாமை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கிவைத்துப் பார்வையிட் டார். முதன்மை செயலாளர் சபீதா, பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் ஆகியோர் சிறப்பு முகாமை ஆய்வுசெய்தனர். அப்போது சபீதா கூறும்போது: “மழை வெள்ளத்தில் பள்ளிக்கல்வி சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு நகல் சான்றிதழ்கள் வழங்குவதற் காக சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர், கடலூர் மாவட்டங்களில் 132 பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 54 சிறப்பு முகாம்கள் இயங்குகின்றன. இன்று தொடங்கி 2 வாரங்களுக்கு சிறப்பு முகாம்கள் செயல்படும். இங்கு சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு வாரத்தில் புதிய சான்றிதழ்கள் வழங்கப்படும்” என்றார்

குறிப்புகள்,MODULE,அரசாணைகள்,10&12 STD QUESTION PAPERS AND STUDY MATERIALS......... சனிக்கிழமை வகுப்புகள் நடத்துவது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரே முடிவு செய்து கொள்ளலாம் - பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா

பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா கூறியதாவது:–

10–ம் மற்றும் 12–ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். விடுமுறை காலம் அதிகமானதால் அதனை ஈடுசெய்யும் வகையில் பாடங்களை முடிக்க சிறப்பு வகுப்புகள் நடத்திக்கொள்ளலாம். தேவைப்பட்டால் வகுப்பு நேரத்தை பள்ளிகள் தங்கள் தேவைக்கு ஏற்ப அதிகரித்து கொள்ளலாம்.இது தவிர, சனிக்கிழமை வகுப்புகள் நடத்துவது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரே முடிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியடையும் வகையில் குறைந்தபட்ச பாடத்திட்டப் புத்தகம்: பள்ளி கல்வித்துறை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தேர்ச்சியடையும் வகையில் குறைந்தபட்ச பாடத்திட்டப் புத்தகம் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த மாதம் பரவலாக பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாகப் பள்ளி, கல்லூரிகளுக்குத் தொடர்ச்சியாக 33 நாட்கள்விடுமுறை அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், பள்ளிகளில் சூழ்ந்த வெள்ள நீர் சீர்ப்படுத்தப்பட்ட நிலையில், இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டு, செயல்படத் துவங்கியுள்ளன.இந்நிலையில், மாணவர்களுக்குப் பாடங்கள் முடிக்காத நிலையில் உள்ளதால், பொதுத்தேர்வெழுதும் மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி குறைந்தபட்சபாடத்திட்ட புத்தகம் வழங்கப் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிகல்வித்துறை செயலர் சபீதா அறிவித்துள்ளார்.பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்

அண்ணா பல்கலை மூலம் மின் வாரிய ஊழியர் தேர்வு

தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், கணக்கீட்டாளர், பொறியாளர் என, 1.38 லட்சம் பணியிடங்கள் உள்ளன. இதில், 88 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்; எஞ்சிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து, 'பொறியாளர், உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என, அரசு தெரிவித்தது. புதிய ஊழியர்களை, அண்ணா பல்கலை மூலம் எழுத்து தேர்வு நடத்தி நியமிக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி, ஊழியர் நியமனம் முறைகேடு இல்லாமல், வெளிப்படையாக நடத்தப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தி, புதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவர்

வி.ஏ.ஓ., தேர்வு: கால அவகாசம் நீட்டிப்பு

கிராம நிர்வாக அலுவலர் எனப்படும், வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பிக்க, காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:வி.ஏ.ஓ., பதவிக்கு, காலியாக உள்ள இடங்களை நிரப்ப, நவ., 11ல், அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த பதவியில் சேர, இணையவழி விண்ணப்பங்களை பதிவு செய்ய, டிச., 14 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பெருமழை மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழலால், விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள், டிச., 31க்கும், விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள், ஜன., 2ம் தேதிக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

பள்ளிகளுக்கு அருகில்- பேல்பூரிக்கு தடை

சென்னை, : பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் பிறப்பித்த உத்தரவு:பள்ளிகளுக்கு முன் விற்கப்படும், பேல்பூரி மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை உண்ணக் கூடாது. பள்ளிகளுக்கு அருகில், பேல்பூரி மற்றும் தள்ளுவண்டி கடைகள் இருந்தால்,
அவற்றை அப்புறப் படுத்த வேண்டும்

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: 'காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த நான்கு நாட்களுக்கு, லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:குமரி கடல் மற்றும் இலங்கை அருகே கடல் மட்டத்தில் இருந்து, 1.5 கி.மீ., உயரத்தில், காற்று மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளதால் இன்று முதல், 18ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒருசில இடங்களில் மழை அல்லது 

இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது; கனமழைக்கு வாய்ப்பு இல்லை.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். வெயில் அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ்; குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் என, இருக்கும்.
நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக, கோவை மாட்டம் வால்பாறை - 3; ஈரோடு மாவட்டம், தாளவாடி, நீலகிரி மாவட்டம் தேவலா - 1 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொழில்நுட்ப தேர்வு புதிய தேதி அறிவிப்பு

சென்னை:அரசு தொழில்நுட்ப தேர்வுக்கு, புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:கடந்த, 10ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடக்க இருந்த தேர்வுகள், மழையால் தள்ளி வைக்கப்பட்டன.
அந்த தேர்வுகளில், விவசாயத்துக்கு, ஜன., 4, நடனத்திற்கு, ஜன., 5 மற்றும் இந்திய இசைக்கு, ஜன., 6ல் தேர்வு நடக்கும். இதற்கான அட்டவணையை, தேர்வுத் துறையின், www.tndge.in இணையதளத்தில் பார்க்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை ஊழியர்கள் தவிப்பு: அரசு அலட்சியம் என குற்றச்சாட்டு

திண்டுக்கல்:வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊரக வளர்ச்சித் துறையினரைப் போல, வருவாய்த்துறையினரும் அடிப்படை வசதியின்றி அல்லல்படுவதாக மனம் குமுறுகின்றனர்.தமிழகத்தில் 21 மாவட்டங்களில் தலா 200 பேர் என 4 ஆயிரத்து 200 வருவாய்த்துறை ஊழியர்கள் பேரிடர் மீட்பு கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த டிச. 6 மாலை 6 மணிக்கு அரசு பிறப்பித்த உத்தரவில், 'நான்கு நாட்களுக்கு தேவையான உடைகளுடன் வர வேண்டும்' என அரசு உத்தரவிட்டது. அதன்படி வருவாய்த்துறை ஊழியர்கள் சென்னை, கடலுார், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மீட்புப் பணிகளுக்கு சென்றனர்.

டிச.,7 முதல் டிச. 15 வரை எட்டு நாட்கள் முடிவுற்ற நிலையில், உடுத்துவதற்கு மாற்று உடை இல்லை. இயற்கை உபாதைகளை கழிக்க போதியளவில் கழிப்பறைகள் இல்லை. இதுதொடர்பாக அரசு துரித நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனவும் தமிழ்நாடு வருவாய்த்துறை 
அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், நில அளவை ஊழியர்கள் கூட்டமைப்பினர் அரசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.அதில், 'தற்போது பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை திரும்பப் பெற்று, மற்றொரு குழுவினரை மீட்புப்பணிகளுக்கு அனுப்ப வேண்டும், என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளர் மங்களபாண்டியன் கூறியதாவது: சென்னையில் பணி முடிந்த ஊழியர்களை திரும்ப ஊர்களுக்கு அனுப்பிவிட்டு, புதிய குழுவினரை மீட்பு பணிகளில் களமிறக்கலாம். அதை விடுத்து 4 நாட்களாக மாற்று உடைகூட இல்லாமல் தவிக்கும் ஊழியர்களை வேறு இடத்தில் பணிசெய்ய வலியுறுத்துகிறார்கள். அதனால்தான் அரசிடம் முறையிட்டுள்ளோம், என்றார்.


ஒரு தோசை ரூ.80

வருவாய்த்துறை மாவட்டச் செயலாளர் சுகந்தி கூறியதாவது: அரசு மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 வழங்குகிறது. ஆனால் 
சென்னையில் ஒரு தோசை ரூ.80க்கும், ஒரு இட்லி ரூ.20க்கும் விற்கிறது. இந்த சூழ்நிலையில் எவ்வாறு மீட்புப்பணியை கவனிப்பது. அரசு விரைவில் மாற்று குழுவை மீட்புப்பணியில் அனுமதிக்க வேண்டும், என்றார்.

அரையாண்டு தேர்வு: அரசு தீவிர ஆலோசனை

வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகள், ஒரு மாதத்துக்கு பின், நேற்று முதல் செயல்பட துவங்கின.இம்மாவட்ட பள்ளிகளில், ஜனவரி முதல் வாரத்தில், அரையாண்டு தேர்வு நடக்கும் என, கன மழைக்கு முன் அரசு அறிவித்திருந்தது. தற்போது, அதை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்னும், 10 நாட்களில், மிலாது நபி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது. எனவே, அரையாண்டு தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ் கால விடுமுறை குறித்து, அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. இந்நிலையில், அரையாண்டு தேர்வு பற்றி, அரசு தரப்பில் தீவிர ஆலோசனை துவங்கி உள்ளது. இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாணவர்கள் பாதிக்கக் கூடாது; அதே நேரத்தில், தேர்வு இல்லை என்ற அலட்சியமும் வந்துவிடக் கூடாது. 
எனவே, கிறிஸ்துமஸ் முன்னிட்டு, 24ம் தேதி முதல், 27ம் தேதி வரை, நான்கு நாட்களுக்கு மட்டும் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை; மற்ற மாவட்டங்களுக்கு, 31 வரை விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.அரையாண்டு தேர்வை பொறுத்தவரை, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கு குறுகிய கால கட்டத்தில், ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

ஐகோர்ட்டில் முறையீடு

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமதுநஸ்ருல்லா, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் 
கவுல் தலைமையிலான, 'முதல் பெஞ்ச்' முன் நேற்று ஆஜராகி, மனு ஒன்றை சமர்ப்பித்தார். 
அதில் கூறியுள்ளதாவது:மழை காரணமாக, பள்ளிகளுக்கு ஒரு மாதத்துக்கும் மேல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. வெள்ள பாதிப்பில் இருந்து, மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இதை கருதி, எல்.கே.ஜி., முதல், ௮ம் வகுப்பு வரை, அரையாண்டு தேர்வை ரத்து செய்ய வேண்டும். உயர் நீதிமன்றம், தாமாக விசாரணைக்கு எடுத்து, கல்வித் துறை 
அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை படித்த நீதிபதிகள், இது பற்றி, பிறகு முடிவெடுப்பதாக கூறினர்.

நேரடியாக இறுதி தேர்வு நடத்த கோரிக்கை: அரையாண்டு தேர்வு ரத்தாகுமா?

வடகிழக்கு பருவ மழையால், மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் அரையாண்டு தேர்வை ரத்து செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக்  கோரி, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் வக்கீல் ஒருவர் கடிதம் கொடுத்தார்.    இந்த கடிதத்தை மனுவாக கருதி விசாரிப்பது குறித்து  முடிவு செய்வதாக முதல் டிவிசன் பெஞ்ச் தெரிவித்துள்ளது. 


சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்கே.கவுல், புஷ்பா சத்தியநாராயணன்  ஆகியோர் நேற்று காலையில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர். அப்போது, மாற்றுத்திறனாளி வக்கீல் முகமது நசரூல்லா ஆஜராகி ஒரு  மனுவை நீதிபதிகளிடம் கொடுத்தார்.
அந்த மனுவில், “தமிழகத்தில்  கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,  கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக  
பாதிப்பட்டுள்ளன. குடிநீர், உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பெற  மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் ஒரு மாதங்களுக்கு மேலாக விடுமுறை  விடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் புத்தகங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. பலரது புத்தகங்கள்  மழையில் நனைந்து, சிதைந்துள்ளது. எனவே, இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இயல்பு நிலைக்கு இன்னும் திரும்பாமல் உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், அரையாண்டு தேர்வை தமிழக அரசு நடத்தினால், அந்த மாணவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த  
கல்வியாண்டில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வை நடத்தக் கூடாது . நேரடியாக இறுதியாண்டு தேர்வை நடத்துமாறு தமிழக  அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
அதன் பின்னர், வக்கீல் முகமது நசரூல்லா, இந்த மனுவின் அடிப்படையில் இந்த கோர்ட் தாமாக முன்வந்து பொதுநல வழக்கு பதிவு செய்து விசாரித்து,  அரசுக்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கூறினார். இந்த மனுவை படித்து பார்த்த நீதிபதிகள், இந்த மனுவை வழக்காக  பதிவு செய்வது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறினர்.

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஒரு நாளுக்கு அதிகமான ஊதியத்தையும் அளிக்கலாம் - தன்னார்வமாகவே இருக்க வேண்டும் : தமிழக அரசு அறிவிப்பு

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, ஒரு நாளைக்கு அதிகமான ஊதியத்தையும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் தங்களது ஊதியத்தை அளிப்பது தொடர்பாக, தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்ட அறிவிப்பு: 


முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, தன்னார்வமாக ஒரு நாள் ஊதியத்தை அளிக்க விரும்பும் ஊழியர்கள், அதற்கான விருப்பத்தை எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்ட சம்பளம் வழங்கும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். சம்பளம் வழங்கும் அலுவலர், டிசம்பர் மாதத்துக்கான ஊதியத்தை 31 நாள்களைக் கொண்டு வகுத்து ஒரு நாள் ஊதியத்தை கணக்கிடுவார். 
இந்த ஒரு நாள் ஊதியத்துக்கான பட்டிலை சம்பந்தப்பட்ட கருவூல கணக்குத் துறை அதிகாரிகள், தயார் செய்வர். ஒரு நாள் ஊதியத்துக்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதி என்ற பெயருக்கு எடுக்க வேண்டும். மேலும், இந்தக் காசோலையுடன் ஊதியத்தை அளித்த ஊழியரின் பெயர், பதவி, பணிபுரியும் அலுவலகம் ஆகிய தகவல்கள் அடங்கிய பட்டியலைத் தயார் செய்ய வேண்டும். 
காசோலையுடன் கூடிய இந்தத் தகவல் அடங்கிய பட்டியலை சம்பந்தப்பட்ட துறையின் மாவட்ட அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். நிதி அளிக்கும் இந்தப் பணிக்கென துறைத் தலைமையால் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு அதிகாரி ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 
அவர், காசோலையையும், ஊதியம் வழங்கிய ஊழியர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும், தலைமைச் செயலகத்தில் உள்ள நிதித் துறை இணைச் செயலாளருக்கு அனுப்பி வைப்பார். துறைத் தலைமை அலுவலகங்களிலும், தலைமைச் செயலகத்திலும் இதேபோன்ற வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
 100 சதவீத வருமான விலக்கு: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளிப்போருக்கு 100 சதவீத வருமான வரி விலக்கு அளிக்கப்படும். மேலும், ஊதியத்தைத் தாண்டி தனிப்பட்ட முறையில் நிதி அளிக்கும் ஊழியர்களுக்கு அதற்கான ரசீது வழங்கப்படும். இதைக் கொண்டும் வரி விலக்கு பெறலாம். ஒரு நாளைக்கு மேலான ஊதியத்தையும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்திடலாம். டிசம்பர் மாதத்தில் மீதமுள்ள ஊதியம் அனைத்தும் வழக்கமான முறையில் ஊழியர்களுக்கு அளிக்கப்படும். இந்த உத்தரவுகள் உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், வாரியங்கள், கழகங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசிடம் இருந்து மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், தொகுப்பூதியம் பெறுவோருக்குப் பொருந்தும். 
தன்னார்வமாகவே இருக்க வேண்டும்: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, நிதி அளிப்பதை ஒவ்வொரு ஊழியரும் தன்னார்வமாகவே அளிப்பதை, சம்பளம் வழங்கும் அதிகாரிகள்-அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கேட்டுக் கொண்டுள்ளார்

பணியில் இருந்து கொண்டே ஒரே நேரத்தில் இரு படிப்பை முடித்த ஆசிரியைக்கு பதவி உயர்வு கிடையாது: உயர் நீதிமன்றம் உத்தரவு - தி இந்து

பணியில் தொடர்ந்தவாறு ஒரே நேரத்தில் பி.எட். மற்றும் முதுநிலை ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பை முடித்த ஆசிரியைக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர், தனக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அவர் மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததால், அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: 

மனுதாரர் இடைநிலை ஆசிரியராக 1986-ல் பணியில் சேர்ந்துள்ளார். 1988-ல் இளங் கலை ஆங்கில இலக்கியம் முடித்துள்ளார். பின்னர் 1989-ல் ஓராண்டு பி.எட். மற்றும் 1990-ல் இரண்டாண்டு முதுகலை ஆங்கில இலக்கியம் முடித்துள்ளார். இவ் விரண்டு படிப்புகளையும் அவர் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டே படித்துள்ளார். இது எப்படி முடிந்தது என்பது தெரியவில்லை. பொதுவாக பணியில் இருக்கும் ஒருவரால் ஒரு படிப்புக்கே நேரம் ஒதுக்க முடியாது. இவர் இரு படிப்புகளை படித்துள்ளார். அந்த கல்வி தரமானதாக இருக்குமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. 

பணியில் இருந்துகொண்டே ஒரே நேரத்தில் இரு படிப்புகளை முடித்த காரணத்தால் மனுதாரருக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்து பள்ளிக் கல்வி இயக்குநர் கடந்த ஆண்டு உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து மனுதாரர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிட்டதில் தவறில்லை. மேலும் மனுதாரர் யுஜிசி நிபுணர் குழுவின் தீர்மானத்தையும் மீறியுள்ளார். 

எனவே கூடுதல் கல்வித் தகுதி அடிப்படையில் தனக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரிய மனுதாரர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

14/12/15

இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவது எப்படி?

இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவது எப்படி?
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எப்படி படிக்க வேண்டும்?
-நெல்லை எம்.சண்முகசுந்தரம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)
1) முகவுரையை தயாரித்தவர் யார்? முக்கிய ஷரத்துக்கள் எவை? சட்டத்திருத்த மூலம் சேர்ந்த வாக்கியங்கள் எவை?
2) அடிப்படை உரிமைகள், கடமைகள், அரசுக்கொள்கை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் தொடர்பான திருத்தங்கள்- எந்தப் பகுதி? ஷரத்துகளின் எண் என்ன?
3) பார்லிமெண்ட் பற்றிய முழு விவரங்கள், லோக் சபா, ராஜ்ய சபா உறுப்பினர்களின் தகுதிகள், தேர்வுமுறை, எந்த ஷரத்துகளில் இவை சேர்க்கப்பட்டுள்ளன?
4) குடியரசு தலைவர், துணை குடியரசுத் தலைவர், தகுதிகள், சபாநாயகர், துணை சபாநாயகர்-தகுதிகள், தேர்வுமுறை, அதிகாரம், இப்பதவி வகித்தவர்கள் யார் யார்?
5) பார்லிமெண்ட் மூலம் அமைக்கப்படும் கமிட்டிகள், பொதுக்கணக்கு குழு, நிதிக்குழு பற்றிய விவரங்கள்.
6) மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரங்கள், சட்டத்திருத்தங்கள் விவரம்.
7) பிரதமர், மத்திய அமைச்சர்கள் பற்றிய முழு விவரங்கள், துறையின் பெயர்கள்.
8) மாநில கவர்னர், முதல்-அமைச்சர், சட்டசபை, மேல்சபை, தகுதி, அதிகாரம்.
9) உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதிபதிகள் நியமனம், எல்லை வரம்பு, அனைத்துவகை அதிகாரங்கள், பதவியிலிருந்தவர்கள் பெயர், ரிட் மனுக்கள் (ஹேபியஸ் கார்பஸ், மேண்டமாஸ்).
10) சட்டத்திருத்தங்கள் (Amendments), முக்கிய திருத்தங்கள் பற்றிய முழுவிவரங்கள்.
11) 12 இணைப்பு பட்டியல்களில் (Schedules) என்னென்ன பொருள்கள் உள்ளன? புதிய மாநிலங்கள், தோற்றம்.
12) வடகிழக்கு எல்லை மாநிலங்கள் பற்றிய முழுவிவரம்.
13) ஒவ்வொரு மாநிலத்திலும் பேசப்படும் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம், பழங்குடியினர்களின் பெயர்கள்.
14) 7 யூனியன் பிரதேசங்கள் பற்றிய முழு விவரங்கள், லோக் சபா உறுப்பினர்கள், தலைநகரம்.
15) மத்திய-மாநில அரசு பணியாளர் தேர்வாணையங்கள், திட்டக்கமிஷன், இந்திய தேர்தல் ஆணையம்.
16) எந்தெந்த வெளிநாடுகளின் சட்டத்திலிருந்து என்னென்ன ஷரத்துகள் சேர்க்கப்பட்டன? என்ற முழு விவரம்.
17) நெருக்கடி நிலை, பஞ்சாயத்துராஜ், நகர்பாலிகா, ஐம்மு-காஷ்மீர், சிக்கிம் பற்றிய சிறப்பு அம்சங்கள்.
மேற்குறிப்பிட்ட இனங்களில் முழுக்கவனம் செலுத்தி தயாரிப்பு மேற்கொண்டால், இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவிடலாம்.

TNPSC DEPARTMENTAL EXAM TIMETABLE DEC 2015

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு 'இ - அட்மிட் கார்டு'

புதுடில்லி : 'சிவில் சர்வீஸ் பிரதான தேர்வு களில் பங்கேற்போர், 'இ - அட்மிட் கார்டு' எனப்படும், இணையவழி அனுமதி அட்டைகளை, பிரின்ட் செய்து, தேர்வின் போது எடுத்து வர வேண்டும்' என, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வுகள், யு.பி.எஸ்.சி.,யால் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகள், முதல்நிலை, பிரதானம், நேர்முகம் என, மூன்று பிரிவுகளாக நடத்தப்படும். நாடு முழுவதும், இந்தாண்டு, 4.63 லட்சம் பேர், ஆக., 23ல் முதல்நிலை தேர்வு எழுதினர். இவர்களில், 15 ஆயிரம் பேர் வெற்றி பெற்றதாக, அக்., 12ல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்வர்கள், பிரதானத் தேர்வுகளில் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து, யு.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு விவரம்: பிரதானத் தேர்வுகள், நாடு முழுவதும், 23 மையங்களில், டிச., 18ல் துவங்கி, 23ம் தேதி வரை நடக்கும். இத்தேர்வுகளில் பங்கேற்போருக்கு, காகிதத்திலான அனுமதி அட்டை வழங்கப்படாது. அனைவரின் அனுமதி அட்டைகளும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வில் பங்கேற்போர், தங்களுக்கான அனுமதி அட்டையை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பிரின்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அனுமதி அட்டையை, தேர்வின்போது காண்பிக்க வேண்டும். பதிவிறக்கம் செய்யப்படும் அனுமதி அட்டையில் புகைப்படம் தெளிவாக இல்லாவிடில், தகுந்த அடையாள அட்டையும், புகைப்படமும், உடன் எடுத்து செல்ல வேண்டும். இவ்வாறு யு.பி.எஸ்.சி., அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? மாணவர்கள் குழப்பம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதியை அறிவிக்காததால், தேர்வு தாமதமாகுமோ என, மாணவர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர்.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், மார்ச்சில் பொதுத் தேர்வு நடக்கும். ஆனால், நடப்பு கல்வி ஆண்டில்,ஏப்ரலில் சட்டசபைக்கு தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், பிப்ரவரியில் இருந்து தேர்தல் சார்ந்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டியுள்ளது. எனவே, பொதுத் தேர்வை விரைவில் முடிக்க வேண்டும்.


இதற்காக, வினாத்தாள்களும் இறுதி செய்யப்பட்டு, விடைத்தாள் அச்சடிப்பு ஆயத்த பணி துவங்கியுள்ளது. முதற்கட்டமாக, பிப்., 29ல், பிளஸ் 2 தேர்வை துவங்க, தேர்வுத்துறை திட்ட
மிட்டிருந்தது.ஆனால், மழை வெள்ளத்தால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு, வகுப்புகள் நடக்காமல், பாடங்கள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், பிப்ரவரியில் தேர்வு வைப்பதா, அல்லது மார்ச், முதல் வாரத்துக்கு பின் துவங்குவதா என, தேர்வுத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.இதற்காக, பிப்., 29, மார்ச், 2 மற்றும் மார்ச், 7 ஆகிய தேதிகளில், ஏதாவது, ஒரு நாளில், பிளஸ் 2 தேர்வை துவங்கலாம் என திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளிகள் நாளை திறந்ததும், பொதுத் தேர்வு அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, வழக்கமாக, டிசம்பர், முதல் வாரமே பொதுத் தேர்வு அறிவிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு இன்னும் அறிவிப்பு வராததால், தேர்வு எப்போது என, மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் பெய்த மழையால், மாணவர்கள் தங்கள் பாட குறிப்புகளையும், புத்தகங்களையும் இழந்து விட்டனர். எனவே, அரையாண்டு தேர்வை ரத்து செய்து விட்டு, மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு முழுமையாக தயாராக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் குடும்பத்தினர் பலர், உடைமைகளை இழந்துள்ளனர். எனவே, அவர்களுக்கு, ஒரு மாத ஊதியத்தை, வட்டியில்லா முன் பணமாக வழங்க வேண்டும்.
இளமாறன், ஆசிரியர் சங்க கூட்டுக்குழு,
'ஜாக்டா' ஒருங்கிணைப்பாளர்

வகுப்பறையில் பூச்சி தொல்லை ஆசிரியர்கள் சோதிக்க உத்தரவு

சென்னை:'வகுப்பறையில் பூச்சிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பிறகே, மாணவர்களை அனுமதிக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.


அதன் விவரம்:
*கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி, மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி, கிணறு, ஆழ்துளை கிணறு போன்றவற்றை 'பிளீச்சிங் பவுடர்' மூலம் சுத்தம் செய்ய வேண்டும். நீரில் கிருமிகளை கொல்லும் குறிப்பிட்ட அளவு, 'குளோரின்' கலந்த பின் குடிக்க தர வேண்டும்
*பள்ளி வளாகங்களில், குப்பை இல்லாமல் அகற்ற வேண்டும். குப்பை தேங்கி கிடந்தால் கொசு மற்றும் ஈக்கள் உற்பத்தியாக வாய்ப்பு ஏற்படும்
*எலுமிச்சை மற்றும் குளோரினை, 4க்கு, 1 என்ற விகிதத்தில் கலந்து, பள்ளி வளாகத்தில் சுத்தம் செய்ய வேண்டும். வகுப்பறைகளை, 'பினாயில்' மூலம் சுத்தம் செய்ய வேண்டும்
*மின் சாதனங்கள், 'ஸ்விட்ச்'களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கட்டடத்தில் எங்காவது விரிசல் போன்ற பாதுகாப்பற்ற தன்மை இருந்தால், அந்தப் பகுதியை பயன்படுத்தக் கூடாது
*வெள்ளம் காரணமாக, ஊர்வன, பறப்பன வகை பூச்சிகள் வகுப்பறைகளில் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, வகுப்பறைகளுக்குள் சென்று, முழுமையாக ஆய்வு செய்து, அதன் பிறகே மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பரிதவிக்கும் மாணவர்கள்: கைகொடுக்கும் நண்பர் குழுவினர்

காரைக்குடி:வெள்ளத்தால் பாடப்புத்தகங்கள், நோட்டுகளை இழந்து நிற்கும் மாணவர்களுக்கு கல்வி பணி செய்து வருகின்றனர், காரைக்குடி பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள், அலுவலர்கள்,நண்பர்கள் குழுவினர்.

சென்னை,கடலுாரை புரட்டிய வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள்,கரம் நீட்டும் முன்பே, கை கொடுத்து வருகின்றனர் காரைக்குடி தன்னார்வலர்கள். ஒவ்வொரு நாளும் லாரியில் எண்ணற்ற புத்தகங்கள், நோட்டுக்கள், துணி, உணவு, இதர பொருட்கள் என தங்களால் முடிந்தவற்றை அனுப்பி வருகின்றனர்.உணவு, உடைக்குரிய தட்டுப்பாடு நீங்கினாலும், பள்ளி திறக்கும் வேளையில், நோட்டு புத்தகங்களின் தேவை அவர்களை வாட்டி வதைக்கிறது. அந்நிலையை மாற்ற, நோட்டு, புத்தகம் தேவைப்படுவோருக்கு, ஒவ்வொரு நாளும் கூரியர் மூலம், காரைக்குடி பொதுப்பணித்துறை பொறியாளர்கள், அலுவலர்கள் அனுப்புகின்றனர்.

காரைக்குடி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுந்தர மூர்த்தி. இவரது மகள் சேதுராணி. சென்னையில் நிலத்தடி நீர் பிரிவில் பொறியாளராக உள்ளார். பிரசவத்துக்காக தந்தை வீட்டுக்கு வந்தார். சென்னை வெள்ளத்தை பார்த்து, கடந்த 7-ம் தேதி, தன்னால் இயன்ற உதவியை வழங்கலாம், என, 'வாட்ஸ் ஆப்' மூலம் புத்தகம் தேவைப்படுவோர் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அவரது தந்தை எண் 94869 05884, கணவர் சரவணன் 81787 61625, அவரது சகோதரர் சேதுபதி 81486 89993 ஆகியோரின் எண்களை வழங்கியுள்ளார்.அன்று முதல் சென்னை, கடலுாரில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்பு கொண்டு புத்தகங்களை கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு கூரியரில் கடந்த 9-ம் தேதி முதல் புத்தகங்களை சுந்தரமூர்த்தி அவரது நண்பர்கள் அனுப்பி வருகின்றனர்.

சுந்தரமூர்த்தி கூறும்போது: எனது மகள் அனுப்பிய வாட்ஸ் ஆப் மூலம், நல்லது செய்ய வேண்டும் என கருதி, மற்றவர்களிடம் இது குறித்து கேட்டேன். உதவி செயற்பொறியாளர்கள் தாசூஸ், பொன்னன், பாண்டி, சங்கர், உதவியாளர் கோடை மலை, உதவி பொறியாளர் நவசக்தி, அஜீத்குமார், எனது மருமகன், மகன் உதவினர்.நடுத்தர, பின்தங்கிய ஏழைகளை தேர்வு செய்து, ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான புத்தகங்களை, அவர்களின் வீட்டு முகவரிக்கு தினந்தோறும் கூரியரில் அனுப்பி வருகிறோம். இதுவரை 200-க்கும் மேற்பட்டோருக்கு அனுப்பியுள்ளோம். மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று புத்தகங்களை சேகரித்து வருகிறோம். .

பிளஸ் 1, பிளஸ் 2 புத்தகங்கள் கிடைப்பது இல்லை. பள்ளிகளை தொடர்பு கொண்டு கேட்டுள்ளோம். அவர்கள் பழைய மாணவர்களிடமும், தங்களிடம் உள்ள பழைய புத்தகங்களையும் தருவதாக கூறியுள்ளனர்.வித்யாகிரி பள்ளி முதல்வர், அவர் கோடவுனை திறந்து உங்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்து கொள்ளுங்கள் எனக் கூறி, ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை வழங்கினார். கூரியரில் புத்தகங்கள் கொண்ட பார்சலுக்கு ரூ.15 மட்டுமே பெற்று உதவியுள்ளனர். இதுவரை ரூ.1.5 லட்சம் வரையிலான புத்தகங்களை அனுப்பியுள்ளோம், என்றார்.

சென்னை குரோம்பேட்டை அமுதா: என் மகன்களுக்கு கூரியரில் புத்தகம் அனுப்பி வைத்தனர். வாழ்க்கையில் இது மறக்க முடியாது. என்றும் நாங்கள் அவர்களுக்கு கடமை பட்டுள்ளோம், என்றார்.

பாடம் நடத்தாத ஆசிரியர்கள் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்'

வேலுார்:சரிவர பாடம் நடத்தாத ஆசிரியர்கள், ஏழு பேரிடம் விளக்கம் கேட்டு, முதன்மைக் கல்வி அலுவலர், 'நோட்டீஸ்' கொடுத்துள்ளார்.

வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது மொழிக்கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது; 21 ஆசிரியர்கள் உள்ளனர்.கடந்த ஆண்டு பொதுத் தேர்வில், ௧௦ம் வகுப்பில், 76 சதவீதம், பிளஸ் 2வில், 48 சதவீதம் மட்டுமே, மாணவர்களின் தேர்ச்சி இருந்தது; வேலுார் மாவட்டத்திலேயே மிகக் குறைந்த தேர்ச்சி, இந்தப் பள்ளியில் தான்.சமீபத்தில், இந்த பள்ளிக்கு சென்ற முதன்மை கல்வி அலுவலர் பூபதி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.


அப்போது, அந்த பள்ளியின், ஏழு ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சரிவர பாடங்களை நடத்தாதது தான், தோல்விக்கு காரணம் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறினர். இதையடுத்து, அந்த ஏழு ஆசிரியர்களுக்கும், 'சரி வர பாடம் நடத்தாதது ஏன்?' என கேட்டு, கல்வி அலுவலர், நோட்டீஸ் கொடுத்துள்ளார். பிற ஆசிரியர்களையும் கண்டித்த அலுவலர், 'வரும் பொதுத்தேர்வில், அதிக வெற்றி பெற பாடுபட வேண்டும்' என, அறிவுறுத்தினார்

12 நாட்களுக்கு பின் 13 பக்க ஆங்கில அறிக்கை

சென்னை:செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, அதிக அளவு தண்ணீர் திறந்தது தொடர்பாக,
12 நாட்களுக்கு பின், 13 பக்க ஆங்கில அறிக்கை மூலம், தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன் விளக்கம் அளித்துள்ளார்.


தமிழகத்தில், நவ., மாத இறுதி முதல், இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. டிச., 1ம் தேதியும் விடாது மழை கொட்டியது. ஏரிகள் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டதால், சென்னை வெள்ளக்காடாக மாறியது. அடுக்குமாடிகளில், முதல் தளம் வரை தண்ணீர் சென்றது; உயிர் இழப்புகளும் ஏற்பட்டன.

'பெரும் பாதிப்பு ஏற்பட்டதற்கு, சரியான திட்டமிடல் இன்றி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, டிச., 1ம் தேதி நள்ளிரவு, வினாடிக்கு, 30 ஆயிரம் கன அடி நீர், திடீரென திறந்து விடப்பட்டதே காரணம்; அரசு முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால், பெரும் வெள்ளப் பாதிப்பை தடுத்திருக்கலாம்' என, நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். பல்வேறு தரப்பிலும் தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், 12 நாட்களுக்கு பின், நேற்று இரவு, 7:00 மணிக்கு, தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன், 13 பக்கம் கொண்ட, விளக்க அறிக்கை ஒன்றை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்.

பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு மாணவர்களுக்கு இலவச புத்தகம் தயார்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 34 நாள் விடுமுறைக்கு பின், இன்று, பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

வெள்ளத்தில் புத்தகங்களை பறிகொடுத்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. மாணவர்களுக்கு தொற்று நோய் பரவாமல் தடுக்க, மருத்துவ முகாமுக்கும், வெள்ள பாதிப்பிலிருந்து நீங்கி, புத்துணர்ச்சி பெற, 'கவுன்சிலிங்' வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


வெள்ளத்தில், மாணவர்கள் சீருடைகளை தொலைத்திருந்தால், சீருடை அணிந்து வர கட்டாயப்படுத்த வேண்டாம் என, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.அரசு கைவிரிப்பு: சென்னையில், வெள்ளத்தால் உருக்குலைந்து போன அசோக் நகர் பள்ளியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி மற்றும் துறையின் முதன்மை செயலர் சபிதா பார்வையிட்டனர். 'வெள்ள சேதம் பற்றி கவலைப்படாமல் இருக்கும் கட்டமைப்பை பயன்படுத்தி பாடங்களை நடத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டனர்.

34 நாள் விடுமுறைக்கு பின், பள்ளிகள் இன்று திறப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 34 நாள் விடுமுறைக்கு பின், இன்று, பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 
வெள்ளத்தில் புத்தகங்களை பறிகொடுத்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. மாணவர்களுக்கு தொற்று நோய் பரவாமல் தடுக்க, மருத்துவ முகாமுக்கும், வெள்ளப் பாதிப்பிலிருந்துநீங்கி, புத்துணர்ச்சி பெற, 'கவுன்சிலிங்' வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளத்தில், மாணவர்கள் சீருடைகளை தொலைத்திருந்தால், சீருடை அணிந்து வர கட்டாயப்படுத்த வேண்டாம் என, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.சென்னையில், வெள்ளத்தால் உருக்குலைந்து போன அசோக் நகர் பள்ளியை, பள்ளிக்கல்வித்
துறை அமைச்சர் வீரமணி மற்றும் துறையின் முதன்மை செயலர் சபிதா பார்வையிட்டனர்.

'வெள்ளச் சேதம் :பற்றி கவலைப்படாமல், இருக்கும் கட்டமைப்பை பயன்படுத்தி, பாடங்களை நடத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டனர்.

NMMS EXAM - 2016

ரயில் டிக்கெட் ரத்து செய்ய '139' எண்ணில் அழைக்கலாம்

ரயில் பயணத்துக்கு சிறிது நேரத்துக்கு முன், '139' என்ற எண்ணுக்கு டயல்செய்து, டிக்கெட்டை ரத்து செய்யும் முறை, புத்தாண்டில் அமலுக்கு வருகிறது.ரயில் புறப்படும் முன், முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும் எனில், ரயில் நிலையத்துக்கு செல்வது அவசியம். இல்லையெனில், கட்டண தொகையில் பாதி பிடித்தம் செய்யப்படும். 


ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன், டிக்கெட்டை ரத்து செய்வதற்கான கட்டணத்தை, நவ.,12ல் ரயில்வே வாரியம் இருமடங்காக உயர்த்தியது. அனைத்து வகுப்பு டிக்கெட்களுக்கும், இது அமல்படுத்தப்பட்டது. அதாவது, ரயில்புறப்படுவதற்கு, 48 மணிநேரத்துக்கு முன் டிக்கெட்டை ரத்து செய்யும்போது,இரண்டாம் வகுப்பு இருக்கை உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு ரத்து செய்யப்படும் தொகை, 30 இருந்து, 60 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மூன்றடுக்கு, 'ஏசி' பெட்டிகளுக்கான டிக்கெட்டுக்கு, பிடித்தம் செய்யப்படும்தொகை, 90லிருந்து, 180 ஆகவும் உயர்த்தப்பட்டது.இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளுக்கு இந்த தொகை, 60லிருந்து, 120 ரூபாயாகவும், இரண்டடுக்கு, 'ஏசி' பெட்டிகளுக்கு, 100லிருந்து, 200- ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், புத்தாண்டு முதல், ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கு புதிய வசதி அமல்படுத்தப்படுகிறது.

அதன்படி, '139' என்ற ரயில்வே, 'ஹெல்ப்லைன்' எண்ணை தொடர்பு கொண்டு, டிக்கெட் பதிவு செய்யும் போது அளித்த மொபைல் போன் எண்ணை கூற வேண்டும். அதன் பின், மொபைல் எண்ணில், அனுப்பப்பட்ட, 'ஒன் டைம் பாஸ்வேர்டை' விசாரணை அதிகாரி அல்லது கணிணிமயமாக்கப்பட்ட விசாரணையில் கூறவேண்டும். இதையடுத்து, டிக்கெட் ரத்தாகும். பின், ரயில் நிலைய கவுன்ட்டருக்கு சென்று டிக்கெட்டை காட்டி, மீதமுள்ள கட்டண தொகையை பெறலாம். இந்த வசதி, 2016, ஜன. 26 முதல் அமலுக்கு வருகிறது.

போலியோ முகாம் 2016க்கு தள்ளிவைப்பு

தமிழகத்தில், மழை வெள்ள பாதிப்பால், டிசம்பர் மாதம் நடத்த வேண்டிய, போலியோ சொட்டு மருந்து முகாம், ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், போலியோ நோயை ஒழிக்கும் வகையில், ஆண்டு தோறும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுவது வழக்கம்.


ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர், ஜனவரி மாதத்தில், இம்முகாம் நடக்கும். தமிழகத்தில், இரண்டு கட்டமாக நடக்கும் முகாம்களில், மாநிலம் முழுவதும் உள்ள, 2.50 கோடி குழந்தைகளுக்கு, 46 ஆயிரம் மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படும்.சமீபத்தில், பெய்த தொடர் மழை காரணமாக, பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு, இன்னும் ஒரு மாதமாகிவிடும். இந்த சூழ்நிலையில், முகாம் நடத்தினால், அவை வெற்றிகரமாக இருக்காது என்ற தகவல் அரசுக்கு சென்றது.

மத்திய சுகாதாரத்துறையிடம், போலியோ முகாமை, ஒரு மாதம் தள்ளிவைக்குமாறு, தமிழக சுகாதார அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனடிப்படையில், ஜனவரி, 17ம் தேதியிலும், பிப்ரவரி, 21ம் தேதியிலும், போலியோ முகாம் நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டப்படிப்பு வயது வரம்பு உத்தரவு தலையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு

சட்டப்படிப்பு படிப்பதற்கான வயது வரம்பை நீக்கும் உத்தரவில் தலையிட முடியாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டப்படிப்பின் தரத்தை உயர்த்த, தேசிய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு, 2002-ல் அறிக்கை அளித்தது. இதையடுத்து, 2008ல் சட்டப் படிப்புக்கான விதிகளை, இந்திய பார் கவுன்சில் வரையறுத்தது. அதில், சட்டப்படிப்புக்கு முதன் முறையாக, நாடுதழுவிய அளவில், வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. 


மறுபரிசீலனை

இந்த வயது வரம்பை எதிர்த்து உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த மூன்று பேர் குழு, 'சட்டப் படிப்புக்கான வயது வரம்பு விதியைக் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்' என, பரிந்துரை செய்தது.இந்நிலையில், சட்டப் படிப்புக்கான வயது வரம்பு விதியை மறுபரிசீலனை செய்ய, வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் தலைமையில், ஒரு நபர் குழுவை பார் கவுன்சில் அமைத்தது. இக்குழு சட்டப் படிப்புக்கான வயது வரம்பை அறவே நீக்கும்படி, 2013ல் பரிந்துரை செய்தது.இதையடுத்து, சட்டக் கல்விக்கான வயது வரம்பை நீக்கி, இந்திய பார் கவுன்சில்,2013 செப்டம்பரில் உத்தரவிட்டது.

வழக்கு தாக்கல்

இந்நிலையில், தமிழகத்தில், 2015 - 16ம் ஆண்டுக்கான சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை துவங்கியது.இதில், இந்திய பார் கவுன்சில் ஆணைப்படி, மூன்றாண்டு சட்டப் படிப்பில் சேர வயது வரம்பு இல்லை; 5 ஆண்டு சட்டப் படிப்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு மட்டும் வயது வரம்பு இல்லை என்றும், மற்ற இனத்தவருக்கு, 21 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டு, தமிழக அரசு உத்தரவிட்டது.ஆனால், 'இந்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத்தின், மூன்று பேர் குழு தாக்கல் செய்த பரிந்துரைக்கு எதிரானது' என, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், பார் கவுன்சிலின் வயது வரம்பு தளர்வு உத்தரவை ரத்து செய்து, ஏற்கனவே இருந்த முறைப்படி, வயது வரம்பு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, நீதிபதிகள் ஜே.எஸ்.கெஹார் மற்றும் ரோஹிண்டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து, மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது.

வங்கிகளுக்கு 4 நாள் தொடர் விடுமுறை

மிலாடி நபி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளை முன்னிட்டு, வங்கிகளுக்கு தொடர்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கி பணிகளை முன் கூட்டியே முடிக்க வேண்டிய நிலை, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.டிச., 23ல், மிலாடி நபி; 25ல், கிறிஸ்துமஸ் பண்டிகைகள் வருகின்றன. 


26ல், நான்காவது சனிக்கிழமை விடுமுறை; 27ல், ஞாயிறு விடுமுறை என, வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது. இதற்கிடையே, 23ல் அறிவிக்கப்பட்டமிலாடி நபி, 24க்கு மாற்றுப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படி மாற்றி அறிவித்தால், 24 முதல், 27 வரை, 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.


இதுகுறித்து, கனரா வங்கி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:'மிலாடி நபி விடுமுறை, டிச., 23' என, வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், இதுவரை மாற்றம் இல்லை. அதனால், 24ல், வங்கிகள் இயங்கும். 25 முதல் 27 வரை விடுமுறை. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்பை தொடர்ந்து, தொடர் விடுமுறை ரத்தாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மழை, வெள்ளம் பாதிப்பு காரணமாக விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படுமா?

டிஎன்பிஎஸ்சி கிராம நிர்வாக அலுவலர் பதவியில் காலியாக உள்ள 813 பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த நவம்பர்12ம் தேதி அறிவித்தது. அன்றைய தினம் முதல் டிஎன்பிஎஸ்சியின் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதி என்பதால் போட்டிப் போட்டு லட்சக்கணக்கில் விண்ணப்பித்தனர். 


இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மக்களின்இயல்பு வாழ்க்கை கடந்த 20 நாட்களுக்கு மேலாக அடியோடு முடங்கியது. இதன் காரணமாக, வி.ஏ.ஓ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவ, மாணவியரின் புத்தகங்கள், கடந்த கால வினா தாட்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. தேர்வுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்தையும் மீண்டும் திரட்டி தயாராவது என்பது சாத்தியமானது அல்ல. அதுமட்டுமின்றி, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேர்வுக்கு தயாராவதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது. மழை வெள்ளத்தில் மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக அனுபவித்த துயரம் மற்றும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். மேலும், மழை பெய்த நேரத்தில் செல்போன், இன்டர்நெட் உள்ளிட்டவற்றின் சேவையும் அடியோடு துண்டிக்கப்பட்டது. தற்போது வரை இன்டர்நெட் சேவை மிகவும் மெதுவாகவே உள்ளது.

இதனால், தேர்வுக்கு விண்ணப்பிப்போர், தேர்வு எழுதுவோர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (14ம் தேதி) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, பிப்ரவரி 14ம் தேதி எழுத்து தேர்வும் நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளதால் சான்றிதழ் உள்ளிட்டவற்றை மழையால் பாதிக்கப்பட்டவர்கள் புதிதாக வாங்குவது என்பது முடியாத காரியம். இதனால் அவர்கள் திண்டாடி வருகின்றனர். எனவே, இத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும், விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க ேவண்டும் என்ற ேகாரிக்கை தற்போது எழுந்துள்ளது.