பள்ளி கல்வித்துறைக்கு, புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நீண்ட நாட்களாக சவாலாக இருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமா என, ஆசிரியர் சங்கங்களும், பெற்றோரும் எதிர்பார்த்துள்ளனர். பள்ளிக்கல்வி அமைச்சராக, பெஞ்சமின் இருந்தபோது, ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில், முறைகேடுகள் ஓரளவு களையப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் பாராட்டு தெரிவித்தன. தற்போது, புதிய அமைச்சராக மாபா பாண்டியராஜன் பதவியேற்றுள்ளார். இவரும், ஒரு கல்வியாளர் என்பதால், பள்ளிக் கல்வியில், மாற்றங்கள் ஏற்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. கல்வித்துறை உயர் அதிகாரிகள், அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்களின் நெருக்கடிகளை தாண்டி, அமைச்சரால் மாற்றத்தை கொண்டு வரமுடியுமா என்ற கேள்வி எழுகிறது.
சவால்கள் என்ன? :
● ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை உள்ள, 10 ஆண்டு கால பழமையான பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்
● 'பயோ மெட்ரிக்' திட்டத்தை முறையாக அமலுக்கு கொண்டு வந்து, 'ஓபி' அடிக்கும் ஆசிரியர்கள் மீது, தைரியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
● ஆசிரியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான, புதிய பங்களிப்பு திட்டம் ரத்து செய்வது குறித்து, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும்
● தொடக்க பள்ளிகளில், ஒற்றை இலக்க மாணவர் சேர்க்கையை, அதிகரிக்க வேண்டும்
● 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண்ணை உயர்த்த வேண்டும்
● பொதுத் தேர்வுகளில், முறைகேடுகளை கட்டுப்படுத்த, தேர்வுமுறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்
● சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு இணையாக, நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளில், அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற, திட்டம் வேண்டும்
● அரசு பள்ளி ஆசிரியர்கள், அடிக்கடி இடம் மாறுவதையும், அரசு நிகழ்ச்சிகள், அலுவலக பணிகளில் ஈடுபடுவதை தடுத்து, கற்றல் முறையை கண்காணிக்கும் திட்டம் கொண்டு வரவேண்டும்
● நலத்திட்டங்களை செயல்படுத்துதல், அதற்கான பொருட்களை கொள்முதல் செய்தலுக்கான, டெண்டர் போன்றவற்றில், வெளிப்படைத்தன்மை வேண்டும்
● திறமையான அதிகாரிகளை ஊக்குவிப்பதுடன், பதவி உயர்வில் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இப்படி, ஏராளமான பணிகள், புதிய அமைச்சர் முன் காத்திருக்கின்றன. புதிய அமைச்சர், சிறந்த கல்வியாளர் என்பதால், அவரே நேரடியாக, 'பைல்கள்' பார்த்து, முடிவெடுப்பார் என, ஆசிரியர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.