-----------------------------------------------
தந்தை பெரியார் அவர்களின் அறிக்கை
-----------------------------------------------
இந்தியாவின் சிறந்த அறிஞர்களின் முன்னணியிலுள்ள அறிஞரும் ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கர் அவர்கள் முடிவெய்தி விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன்.
உண்மையில் சொல்ல வேண்டுமானால், டாக்டர் அம்பேத்கருடைய மறைவு என்னும் ஒரு குறைபாடானது எந்த விதத்திலும் சரிச் செய்ய முடியாத ஒரு மாபெரும் நஷ்டமேயாகும்.
அவர் சிறப்பாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குத் தலைவர் என்றுச் சொல்லப்பட்டாலும், பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாகவுள்ள ஒரு பேரறிஞராக விளங்கினார்.
எப்படிப்பட்டவரும் - எடுத்துச் சொல்லப் பயப்படும்படியான புரட்சிகரமான விஷயங்களை யெல்லாம் வெகு சாதாரணத் தன்மையில் எடுத்துச் சொல்லும்படியான வீரராகவும் விளங்கினார்.
உலகத்தாரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான காந்தியாரை வெகு சாதாரணமாக மதித்ததோடு, அவருடைய பல கருத்துக்களைச் சின்னா பின்னமாகும்படி மக்களிடையில் விளக்கும் மேதாவியாக இருந்தார்.
இந்து மதம் என்பதான ஆரிய ஆஸ்திக மதக் கோட்பாடுகளை வெகு அலட்சியமாகவும், ஆபாசமாகவும் அர்த்தமற்றதாகவும் மக்கள் கருதும்படியாகப் பேசியும் எழுதியும் வந்தார். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், காந்தியாரையே ஒரு பத்தாம் பசலி பிற்போக்குவாதியென்றும், அவரால் பிரமாதமாக நடிக்கப்பட்டு வந்த " கீதையை முட்டாள்களின் உளறல்கள்" என்றும் சொன்னதோடு, காந்தியாரின் "கடவுளான ராமனை மகா கொடியவன் என்றும், ராமாயண காவியம் எரிக்கத் தகுந்தது என்றும் சொல்லி," பல்லாயிரக்கணக்கான மக்களிடையில் ராமாயணத்தை சுட்டு எரித்து சாம்பலாக்கிக் காட்டினார்.
இந்துமதம் உள்ள வரையிலும் தீண்டாமையும், ஜாதிப் பிரிவும், அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்றும் ஓங்கி அறைந்தார்.
மேற்கண்ட இந்தக் கருத்துக்கள் தவழும்படியாக ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டார்.
இப்படியாக அநேக அரிய காரியங்களைச் செய்த ஒரு மாபெரும் பகுத்தறிவுவாதியும், ஆராய்ச்சி நிபுணரும் சீர்திருத்த புரட்சி வீரருமான டாக்டர் அம்பேத்கர் முடிவு எய்தினது இந்தியாவுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பகுத்தறிவு வளர்ச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவே ஆகும்.
அம்பேத்கரின் மறைவு என்னும் செய்தி திடீரென்று மொட்டையாக வெளியானதிலிருந்து அவருடைய மரணத்துக்குப் பின்னால் சில இரகசியங்கள் இருக்கலாமென்று கருதுகிறேன்.
அதாவது காந்தியார் மரணத்துக்கு உண்டான காரணங்களும், அதற்கு ஆதாரமான பல சங்கதிகளும் டாக்டர் அம்பேத்கர் மரணத்துக்கும் இருக்கக் கூடும் என்பதே ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக