ஒரு வாரத்திற்கு மேல், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததால்,
அரசு பள்ளிகளில் முன் அரையாண்டு தேர்வு மற்றும் இடை தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இடைத்தேர்வு : தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில், பொதுத் தேர்வு எழுதும், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறும் வகையில், அவர்களுக்கு கூடுதலாக தேர்வுகள் வைத்து, தயார்படுத்த, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, மாணவர்களுக்கு, இரண்டாம் இடைத்தேர்வு என்ற, 'மிட் டேம்' தேர்வுக்கு பதில், முன் அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. 13ம் தேதி, முன் அரையாண்டு தேர்வு துவங்க உள்ளது. இந்நிலையில், முன் அரையாண்டு தேர்வை ரத்து செய்ய, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: காலாண்டு தேர்வுக்கு பின் நடத்தப்படும் பாடங்களுக்கு மட்டும், இரண்டாம் இடைத்தேர்வில் வினாத்தாள் இடம் பெறும். ஆனால், முன் அரையாண்டு தேர்வுக்கு, பள்ளி துவங்கியது முதல், இதுவரை நடத்தப்பட்ட அனைத்து பாடங்களையும், மாணவர்கள் படிக்க வேண்டிய நிலை உள்ளது.
விடுமுறை : பருவ மழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், பள்ளிகளுக்கு, ஒரு வாரத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதனால், பள்ளிக்கல்வி காலண்டர்படி, இதுவரை நடத்த வேண்டிய பாடங்கள், இன்னும் பாக்கி உள்ளது; அதை, நடத்த கூடுதல் நாட்கள் தேவை. எனவே, பள்ளிகள் திறந்தாலும், பாடம் நடத்த போதிய நாட்கள் இல்லாததால், 13ம் தேதி இடை தேர்வை மாணவர்கள் எழுத முடியாத சூழல் உள்ளது.
அதனால், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மட்டும், முன் அரையாண்டு மற்றும் இடைத்தேர்வை, ரத்து செய்ய வேண்டும். இந்த தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்ட நாட்களில், கூடுதல் வகுப்புகள் நடத்தி, பாடங்களை நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர். மாணவர்களும், இதே கருத்தை வலியுறுத்தி உள்ளனர்.